திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - (யோவான் 10:10).
ஒரு மனிதன் வெள்ளமாய் போய்க் கொண்டிருந்த ஆற்றின் முன் நடந்து சென்று, அதன் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று 'என்னைக் காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள்' என்ற சத்தம் கேட்டது. என்ன ஏது என்று பார்க்காமல் உடனே அவன் தண்ணீருக்குள் பாய்ந்து, தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த மனிதனை பிடித்து இழுத்து வந்து, அவனுக்கு முதலுதவி செய்து, காப்பாற்றினான். அப்படி அவன் செய்து கொண்டிருக்கும்போதே வேறொரு குரல் 'என்னை காப்பாற்றுங்கள்' என்றுக் கேட்டது. திரும்பவும் தண்ணீரில் குதித்து அவன் அந்த மனிதனையும் காப்பாற்றினான். இப்படி ஏழு பேரை அவன் காப்பாற்றி கொண்டு கரை சேர்த்து, மிகவும் களைத்துப் போனவனாக, அடுத்த ஆள் வரும்போது நீதான் காப்பாற்ற வேண்டும் என்று தான் முதலில் காப்பாற்றின ஆளிடம் கூறினான்.
அந்த மனிதனோ எதையும் கேட்காமல் நடந்து கொண்டிருந்தான். காப்பாற்றின மனிதனுக்கு கோபம் வந்தது. 'நான் எத்தனை பேரை காப்பாற்றினேன்? நீ ஏன் ஒருவனைக் கூட காப்பாற்றாமல் போய்க் கொண்டிருக்கிறாய்?' என்று கோபத்தோடு கேட்டான். அதற்கு அந்த மனிதன், 'நான் போய் இந்த மனிதர்களை ஆற்றில் தள்ளிக் கொண்டிருக்கிற மனிதனை தடுக்க போகிறேன் என்னை விடு' என்று சொன்னான்.
பிரியமானவர்களே, நம் ஒவ்வொருவருக்கும் பாவத்தில் விழுந்து சிக்கி தவிக்கிற ஒவ்வொருவரையும் அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களுக்கு ஆலோசனைக் கூறி, பாவ வழியில் சிக்கி விடாதபடி அவர்களுக்கு வேதத்திலிருந்து வசனங்களை வெளிப்படுத்தி, காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
இப்படி ஒரு குழுவினர் செய்து கொண்டிருக்கும்போதே வேறொரு குழுவினர், பாவ எண்ணங்களை மக்களுடைய இருதயத்தில் விதைத்து, அவர்களை பாவத்தில் விழ செய்யும் சத்துருவோடு போராடி, ஜனங்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து, பாவத்திலிருந்து மீட்டெடுக்கும் பணியை செய்ய வேண்டும்.
கிறிஸ்துவை அறியாத அவர்கள் அவரை அறிந்து கொண்டால் பாவம் செய்வதற்கு தயங்குவார்கள். கிறிஸ்துவாகிய ஒளி அவர்களுக்குள் இல்லாதபடியால், சாத்தானின் இருள் அவர்களை மூடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் ஒளி அவர்களுக்குள் பிரகாசமாக இராதபடியால், அவர்கள் இருளுக்குள் வாழ்ந்து இருளாகவே இருக்கிறார்கள். இருளின் ஆதிக்கத்தில் இருப்பதால் பாவமான காரியங்களை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், அசுத்தத்திலே வாழ்ந்து அதை ஆனந்தமாய் அனுபவித்து, பின்பு தாங்க முடியாத வேதனையில் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு கிறிஸ்துவின் மகிமையாக சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்க வேண்டுமானால், கிறிஸ்துவை இவர்கள் அறிய வேண்டும். அதற்கு நாம் போய் சொன்னால்தான் அவர்கள் அறிவார்கள். நாம் சொல்லாவிட்டால் யார் போய் சொல்வார்கள்?.
சமாரிய ஸ்திரீ தன் ஊராரிடம் போய் பெரிய பிரசங்கம் பண்ணவில்லை. கிறிஸ்து இப்படியெல்லாம் என்னோடு பேசினார் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. 'நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்' (யோவான் 4:29) அந்த ஊரே இரட்சிக்கப்பட்டது.
கர்த்தர் மிக சீக்கிரத்தில் வர இருக்கிற இந்த கடைசி நாட்களில் நாம் இந்த புதிய வருட தீர்மானமாக 'ஒரு நாளைக்கு ஒருவரிடமாவது கிறிஸ்துவைக் குறித்து பேசப் போகிறேன்' என்று தீர்மானம் எடுப்போம். நமது வாழ்க்கையும் சாட்சி சொல்லட்டும். ஒரு நாளைக்கு ஒருவரிடம் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினால், வருட முடிவில் 365 பேருக்கு கிறிஸ்து அறிவிக்கப்பட்டிருப்பாரல்லவா? இந்த வருடத்தில் இந்த தீர்மானத்தை எடுப்போமா? கிறிஸ்துவை அறிவிப்போமா?.
அந்த மனிதன் ஆற்றில் விழுந்த ஆட்களை காப்பாற்றியதுப்போல, சமாரிய ஸ்திரீயைப் போல நாமும் பாவத்தில் விழுந்து தவிக்கிறவர்களை மீட்டு கர்த்தரிடம் கொண்டு வருவோம். மாத்திரமல்ல, அவர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை நேரடியாக எதிர்த்து நின்றதுப் போல சாத்தானின் கையில் இருந்து ஜனங்களை மீட்டெடுத்து கர்த்தரிடம் நடத்தி, பாவத்திலிருந்து விடுதலையாகும் வழியை போதித்து, கர்த்தருக்குள் நடத்தும் மனிதர்களை கர்த்தர் தேடுகிறார். 'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்' என்ற இயேசுவின் பரிபூரண ஜீவனை மற்றவர்களும் பெற்றுக் கொள்ளும்படியாக நாம் செல்வோமா? ஜனங்களை கர்த்தருக்காக மீட்டெடுக்கும் வருடமாக இந்த வருடத்தை மாற்றுவோமா? கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாய் இருக்காதே
நீ மௌனமாய் இருக்காதே
.
அறுவடை காலத்தில் நீ மௌனமாய் இருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் நீ மௌனமாய் இருந்தால்
ஆத்துமா இழப்பாயே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பரிபூரண ஜீவனை பெற்றுக் கொண்ட நாங்கள் மற்றவர்களும் அந்த பரிபூரண ஜீவனை பெறும்படியாக கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவிக்கும்படியாக இந்த புதிய வருடத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் தைரியத்தைக் கொடுத்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்த உதவி செய்யும். நாங்கள் மௌனமாக இருந்தால் ஆத்துமாக்களை இழக்க வேண்டியதாகி விடுமே, ஒரு நாளில் ஒருவருக்காவது கிறிஸ்துவை அறிவிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment