Search This Blog

Wednesday, 5 February 2014

ஜெபிக்காமலே!

“நீ பிள்ளை பெறாத மலடியாயிருக்கிறாயே….. பிள்ளையைப் பெற்றெடுப்பாய்.” – நியாயாதிபதிகள் 13 : 3

மனோவா என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் மனைவியின் பெயர் வேதாகமத்தில் இல்லை. ஆனால் மலடி என்று அவர் அழைக்கப்பட்டார். இன்று மருத்துவ அறிவு வளர்ந்துள்ளது. குழந்தை இல்லாமைக்கு; கணவன் அல்லது மனைவி காரணமாக இருக்கலாம். அல்லது இருவருமே காரணிகள் ஆகலாம். இதை அறியாது பெண்ணை மட்டும் மலடி என்பது என்ன நியாயம்? மலடன் என்று எந்த ஆணும் அழைக்கப்படுவதில்லையே! மனோவா, அல்லது அவர் மனைவி அற்புத குழந்தைப் பேறு பெற்றிட ஜெபிக்கவில்லை. ஆனால் கர்த்தர் ஒரு பலம் பொருந்திய மனிதனுக்கு சிம்சோன் என்பவனுக்கு தாயும் தந்தையுமாகிட மனோவா குடும்பத்தைத் தெரிந்தெடுத்தார்.

நமது ஜெபத்தினால் தான் சூரியன் உதிக்கிறதா? யாரோ ஜெபிப்பதால் காற்று அடிக்கிறதா? வெளிச்சம் கிடைக்க யார் பிரார்த்தனை செய்தார்கள். பிரார்த்தனை இல்லாமலே, கடவுளின் சித்தத்தால் சில அற்புதங்கள் அரங்கேறுகின்றன. பல ஆசிகள் நமக்குக் கொடுக்கப் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மனோவாவின் மனைவிக்கு கர்ப்பகால எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. திராட்சைச்சாறு வேண்டாம். மது வேண்டவே வேண்டாம். தீட்டான, உடல் நலத்துக்குக் கேடான உணவை ஒதுக்கு. எச்சரிப்புடன் இரு என்று கூறப்பட்டது.

இறை ஆசி இலவசம் என்பதால் அவற்றை வீணாக்கக்கூடாது. பாவமன்னிப்பு இலவசம் என்பதால் திரும்பத் திரும்ப அதே பாவங்களைத் தொடரக் கூடாது. இயேசுவை விசுவாசிப்போருக்கு பிரார்த்தனை என்பது விசுவாச விளக்கம். விசுவாசத்தின் விளைச்சல் ஜெபம். இந்தத் தியானத்தை கிறிஸ்தவர் அல்லாதவர் வாசிக்கலாம். அவர்களுக்கும் இறையாசியின் பெருக்கம் உண்டு என்பது உறுதி. இயேசுவை இரட்சகராக ஏற்காதவர்களுக்கும் அன்பும் அரவணைப்பும் கொடுப்போம். அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கிருபா நதியே, பரம் பொருளே! உலகோர் ஜெபிக்காமலே; பாவமன்னிப்புக்காக நித்திய ஜீவனுக்காக உமது திருமகனைக் கொடுத்தீர். நன்றி! உமது கொடைகள் தொடரட்டும். ஆமேன்.

No comments:

Post a Comment