Search This Blog

Saturday, 16 August 2014

நீதியின் மேல் பசிதாகம்

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். - (மத்தேயு 5:6). 

நமக்கு இரண்டு நாட்களாக பசியில்லை என்று வைத்துக் கொள்வோம். நல்லதாப் போச்சு இரண்டு நாள் சாப்பாடு மிச்சம் என்று இருந்து விடுவோமா? இல்லை, பக்கத்தில் யாராவது நாட்டு வைத்தியம் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் என்ன செய்வது என்றுக் கேட்போம். அவர்கள் சொன்னபடி செய்து சரியாகி விட்டால் சரி, இல்லையென்றால் டாக்டரிடம் போய் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மறுபடியும் பசி எடுக்கும்வரை சும்மா இருக்க மாட்டோம் அல்லவா? 

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? இங்கு அவர் குறிப்பிடும் நீதி என்பது எது? நற்செயல்களை செய்வதையும், புண்ணிய காரியங்களை செய்தையுமா அவர் கூறுகிறார்? இல்லை, நீதி என்றால் நேர்மையுள்ள வாழ்க்கை, கர்த்தருக்கு பயப்பட்டு பாவத்திற்கு விலகி நிற்கிற வாழ்க்கை, கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை என்றுக் கூறலாம். 

'நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்' (ரோமர் 3:10-13) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நம்மை நீதிமான்களாக்க நம் தேவனால் மாத்திரமே கூடும். அப்படி தேவனால் தன்னை நீதிமானாக்க நாம் தாகம் கொண்டவர்களாக இருந்தால் தேவன் நம்மை திருப்தியாக்குகிறார். 

ஒரு வாலிபன் ஒரு பிரசித்திப் பெற்ற ஊழியரிடம், 'ஐயா நான் இரவு முழுவதும் என் பாவங்களுக்காக துக்கித்து அழுகிறேன். ஆண்டவரே, என்னை மாற்றும், என்னை புதியவனாக்கும் என்று கேட்கிறேன். ஏன் கர்த்தர் என்னை மாற்றக்கூடாது? பவுலையும், சாது சுந்தர்சிங் போன்றவர்களையும் மாற்றி தமது ஊழியக்காரர்களாக்கினவர் ஏன் என்னையும் அப்படி மாற்றக்கூடாது?' என்று கேட்டான். அதற்கு அந்த ஊழியர், 'மகனே, உன் பாவங்களை விட்டு விட உண்மையாக நீ வாஞ்சிக்கிறாயா?' என்று கேட்டார், அதற்கு அவனால் பதில் ஏதும் கூற முடியவில்லை. பாவத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, கர்த்தர் என்னையும் பெரிய பெரிய ஊழியர்களைப் போல மாற்ற வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? 

என் பாவத்தை விட்டு விட்டு கர்த்தரைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை கர்த்தர் கவனிக்கிறார். நீதியின் சூரியனாகிய அவர் மேல் பசிதாகம் கொண்டவர்களைத்தான் அவரால் திருப்தியாக்க முடியும். மற்றொரு வாலிபன்; தன் அறையினுள் நுழைந்து, ஒரு நாள் முழுவதும் உபவாசமிருந்து, 'கர்த்தாவே, நீர் என்னை மாற்றாவிட்டால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என்று தன்னை ஒறுத்து, கர்த்தரிடம் அர்ப்பணித்தபோது, கர்த்தர் அவனை சந்தித்தார். அவன் மனச்சமாதானம் பெற்று திருப்தியானான். 

நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். பசியெடுக்கிறது என்பதற்காக புல்லையோ, மண்ணையோ சாப்பிட முடியுமா? அதற்குரிய ஆகாரத்தை சாப்பிடும்போதுதான் நாம் திருப்தி அடைய முடியும். அதுப்போல மனிதனுக்குரிய ஆத்துமப்பசியையும், உள்ளத்திலுள்ள வெறுமையையும் கர்த்தரே திருப்தியாக்க முடியும். 

நீதியின் சூரியனாகிய கர்த்தர் மேலும், அவருடைய வார்த்தைகளின் மேலும் பசிதாகம் கொள்வோம். அப்பொழுது நாம் திருப்தி அடையும்படியாக அவர் நம்மை போஷிப்பார். அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்க கர்த்தர் கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா! 

மான்கள் நீரோடை வாஞ்சித்து 
கதறும்போல் தேவனே 
எந்தன் ஆத்துமா உம்மையே 
வாஞ்சித்து கதறுதே 

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் 
கோட்டையும் நீர் என்றும் காப்பீர் . 

தேவன் மேல் ஆத்துமாவே 
தாகமாயிருக்கிறதே 
தேவனின் சந்நிதியில் நின்றிட 
ஆத்துமா வாஞ்சிக்குதே 

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் 
கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 

ஜெபம்: 
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீதியின் மேல் நாங்கள் பசிதாகம் கொண்டவர்களாக மாற்றும். உலகத்தின் காரியங்கள் மேலும், உலகத்தின் மேலும் வாஞ்சையுள்ளவர்களாக அல்ல, நீதியின் சூரியனாகிய உம்மேல் எங்கள் வாஞ்சையும் தாகமும் இருக்கட்டும் தகப்பனே. மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவதுப்போல எங்கள் ஆத்துமா நீதியின் மேல் பசிதாகமுமாய் இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 14 August 2014

விசாரிப்பற்றவர்களை விசாரிப்பவர்

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 30:17). 

ஒருபெரிய மாளிகை அநேக நாட்களுக்குப் பிறகு சுத்தம் செய்யப்பட்டது அதுவரையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற பொருட்களெல்லாம் கீழே இறக்கப்பட்டு பழைய பொருள் கடைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்த வேலையாட்கள் எல்லாரும் மும்முரமாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அவர்களுள் ஜேன் என்ற பெண்ணும் ஒருவள். ஆண்டவருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அவள் எந்த வேலையானாலும் அதை கவனத்துடன் நேர்;த்தியாய் செய்து முடிப்பாள். அன்றும் அப்படியே எல்லோருடன் சேர்ந்து தூசி தட்டி குப்பைகளையெல்லாம் ஒதுக்கி ஒரு புறமாக போட்டுக் கொண்டிருந்தாள். அதிலே கருப்புக் கறைபடிந்த ஆனால் சற்று கனமான ஒரு பாத்திரத்தொன்றை எடுத்து வைத்தாள். அதை தினமும் தண்ணீரில் ஊற வைத்து சோப்பு போட்டு கழுவி வந்தாள். கறைகள் கொஞ்ச கொஞ்சமாக போகத் துவங்கியது. இவ்வாறாக ஆறு மாதமாக சோர்வின்றி கழுவினாள். ஒரு நாள் முழுவதுமாக கறைகளெல்லாம் போய் வெண்மையாக மின்னியது. அது ஒரு விலையேறப் பெற்ற வெள்ளிப் பாத்திரம். அதை எஜமானியிடம் காட்டியபோது, 'குப்பைக்கு போக இருந்த பாத்திரத்தை மினனும் பாத்திரமாய் மாற்றி விட்டாயே' என்று ஜேனை மெச்சிக் கொண்டார். 

நாமும் கூட நம் குடும்பத்திலுள்ள யாரோ ஒருவரையோ, அல்லது நமது பிள்ளைகளையோ குறித்து இவ்வாறு எண்ணலாம், 'இவனை திருத்தவே முடியாது. இவனது பாவ வாழ்க்கையிலிருந்து, கெட்ட சுபாவங்களிலிருந்து மீட்டிட ஒருவராலும் முடியாது. இவன் மனம் மாற வாய்ப்பே இல்லை' என்று முற்றிலும் நம்பிக்கை இழந்துப் போயிருக்கலாம். 

ஆனால் அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்வு மாற வேண்டுமென்று தேவனை விடாமல் பற்றிக் கொண்டு மன்றாடுவோம். அவர்களை பாவி என்று ஒதுக்கி தள்ளிவிடாமல்,அனுதினமும் நல்ல காரியங்களையும் நம்பிக்கையான வார்த்தைகளையும் பேசுவோம். 'கர்த்தர் உன்னைக் குறித்து ஒரு அருமையான திட்டம் வைத்துள்ளார். அதை உன்னைக் கொண்டுதான் நிறைவேற்றுவர். நீ தேவனுக்கு வேண்டும்' என விசுவாச வார்த்தைகளை பேசுவோம். அந்த வார்த்தைகள் அவரில் கிரியை செய்ய ஆரம்பிக்கும். 

பிரியமானவர்களே, ஒருவேளை நீங்கள் யாருக்கும் நான் பிரயோஜனமில்லை என்று உங்களைக் குறித்தே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களா? கர்த்தர் யாரையும் எந்த பிரயோஜனமும் இல்லாதவராக படைக்கவில்லை. ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் இருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு. ஆகாதது என்று தள்ளப்பட்டவர்களே பிற்காலத்தில் சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் மிகவும் பிரயோஜனமுள்ளவர்களாக இருந்ததுண்டு. யாரையும் புறம்பே தள்ளாத கிறிஸ்துவை பிடித்துக் கொள்ளுங்கள். அவர் தெரிந்துக் கொண்டவர்களை யாரும் தாழ்த்த முடியாது. அவர் உயர்த்துகிறவர்களை யாராலும் தாழ்த்தவும் முடியாது. ஆமென். 

நாம் ஆகாது என்று தள்ளினவர்களையே தேவன் குடும்பத்தில் மூலைக்கல்லாய் மாற்றுவார். குப்பையிலும், தாழ்விலும் இருப்பவர்களை எடுத்து உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்துபவரல்லவா நம் தேவன்! அவரையே நம்புவோம். அவரே மாற்றுவார்! பெரிய காரியத்தை செய்வார். ஆமென் அல்லேலூயா! 

தள்ளப்பட்ட கல் நான் 
எடுத்து நிறுத்தினீரே 
உண்மையுள்ளவன் என்று கருதி  
ஊழியம் தந்தீரையா . 

 பாலை நிலத்தில் கிடந்தேன் 
தேடி கண்டு பிடித்தீர் 
கண்ணின் மணிபோல காத்து வந்தீர் 
கழுகு போல் சுமக்கின்றீர் . 

உம்மை நினைக்கும் போதெல்லாம் 
நெஞ்சம் மகிழுதையா 
நன்றி பெருகுதையா 
நன்றி நன்றி ராஜா 
நன்றி இயேசு ராஜா 

ஜெபம் 
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எல்லாராலும் தள்ளப்பட்டும், கைவிடப்பட்டும், யாரும் என்னை விசாரிப்பார் இல்லையே என்று தவிக்கும் ஒவ்வொருவரையும் உன்னை விசாரிக்கும் தேவன் உண்டு என்று ஞாபகப்படுத்தி விடும். தம்மிடம் வந்த யாரையும் தள்ளாத தேவன், அவர் நேசிக்கிறவர், ஆதரிக்கிறவர், விசாரிக்கிறவர், தேற்றுகிறவர் என்று உணர்ந்துவிட கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, 12 August 2014

ஒரே இருதயமும் ஒரே மனமும்

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். - (அப்போஸ்தலர் 4:31-32). 

நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும். 

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில் வெட்டுக்கிளிகளைக் குறித்து, ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். 

இன்று சபைகளில் ஒருமனம் இல்லாதபடியால், சத்துரு வெற்றி எடுத்து கொண்டு இருக்கிறான். சபையின் ஊழியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். இரவு ஜெப கூட்டம் என்றால், அதற்கு வருகிறவர்கள், சபை ஆராதனைக்கு வருகிறவர்களில் பாதிகூட இருக்க மாட்டார்கள். ஒருமுறை இரவு ஜெபகூட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவரான மறைதிரு. சகோதரன் ஜீவானந்தம் அவர்கள் ஒரு இரவு ஜெப கூட்டத்திற்கு வரும்போது, அது அளவுக்கதிகமான ஆசீர்வாதத்தை கொண்டுவரும். அப்படி ஒவ்வொரு ஜெபக் கூட்டமும் உங்கள் வாழ்வில் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்று கூறினார். நாம் நினைக்கிறோம், கர்த்தருக்காக நாம் தியாகமாக இரவு முழுவதும் கண்விழித்து ஜெபிக்க போகிறோம் என்று. ஆனால் கர்த்தர் அதையே நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறார். சபையாக சுவிசேஷ ஊழியங்களுக்கு செல்லும்போது யார் யார் வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் ஒருமனமாய் ஊழியத்திற்கு செல்ல வேண்டும். ஒருமனமாய் எல்லா ஊழியங்களிலும் பங்கு பெற வேண்டும். 

ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது, உலகத்தையே அசைக்க முடியும். ஆதி திருச்சபை ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது என்று பார்க்கிறோம். 

இன்று நம்மிடையே நிலவுகின்ற சிறுசிறு மனவருத்தங்கள், சிறுசிறு காரியங்கள் நம் சபையின் மூலமாக வர இருக்கின்ற பெரிய எழுப்புதலுக்கு தடையாக இல்லாதபடி ஒருவரையொருவர் மன்னித்து, சபையாக ஒருமனப்படுவோம். சத்துருவுக்கு எதிர்த்து நிற்போம். தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குவோம். இந்த கடைசி நாட்களில் ஒருமனமாய் ஒரே இருதயமாய் கர்த்தர் சபையை தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவோம். தேசத்தை அசைப்போம். சேனையாக எழும்பிடுவோம். தேசத்தை கலக்கிடுவோம். 

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு 
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு 
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு 
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் 

இருள் சூழும் நாட்கள் இனி வருதே 
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் . 

ஜெபம் 
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த கடைசி நாட்களில் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் ஒருமனதை தாரும் தகப்பனே. உம்முடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தியது என்று வசனத்தில் வாசிக்கிறோமே, எங்களை ஒருமனப்படுத்தும். ஒருமனமாய் நீர் எங்களை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்ற கிருபை செய்யும். ஒருமனமாய் தேசத்தை உமக்கு சொந்தமாக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday, 10 August 2014

பெற்றோரை நோக்கும் பிள்ளைகள்

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக. - (உபாகமம் 6:6-8) . 

நம் பிள்ளைகள் நம்முடைய பிரதிபிம்பமாக இருக்கிறார்கள். உருவத்தில் மாத்திரமல்ல, நம்முடைய செய்கைகள், நம்முடைய பேச்சுகள், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைளின் பிரதிபிம்பமாக நம்முடைய பிள்ளைகள் இருக்கிறார்கள். . ஒருமுறை ஒரு தகப்பன் ஒரு வார்த்தையை சொல்லி தன் பிள்ளையை திட்டுவதை பார்த்தேன். அதன்பின் ஒரு நாள் அந்த பிள்ளை அதே வார்த்தையை சொல்லி தன் தங்கையை திட்டுவதை கண்டேன். கெட்ட காரியங்கள் பிள்ளையின் இருதயத்தில் வெகு சீக்கிரம் பிடித்து கொண்டு விடும். பிள்ளைகளுக்கு பெற்றோரே ஒழுக்கத்தின் பாடம் கற்று கொடுக்கும் பள்ளியாக இருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கு சென்று கற்று கொள்வதை பார்க்கிலும் தங்கள் வீட்டிலேயே அந்த ஒழுக்கத்தின் பாடங்களை கற்று கொள்கிறார்கள். 

பிள்ளைகளை 'கர்த்தர் மேல் அன்பு செலுத்து' என்று சொல்லிகொடுப்பதை விட அதை நாம் செயலில் காட்டும்போது பிள்ளைகள் அதை சீக்கிரமாய் பிடித்து கொள்வார்கள். தினமும் தகப்பன் வேதம் வாசிப்பதை பார்க்கும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லாமலே வேதத்தை வாசிக்க ஆரம்பிப்பார்கள். பெற்றோர் முழங்கால் படியிட்டு ஜெபிப்பதை பார்க்கும் பிள்ளைகள் தாங்களும் முழங்கால் படியிட்டு ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். 

சிகரெட் பிடிக்கும் தகப்பனுடைய பிள்ளைகள் தாங்களும் சிகரெட் பிடிக்க கற்று கொள்வார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு கெட்ட முன் உதாரணமாக ஒருபோதும் இருக்க கூடாது. சினிமா பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகளும் சினிமா பார்ப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பாவமாக தோன்றாது. ஏனெனில் அது அவர்கள் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயம். இப்படி எத்தனையோ காரியங்களை பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்று கொள்கிறபடியால், பெற்றோர் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

ஒருவரும் எல்லாவற்றிலும் சரியான பெற்றோராக இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் நடத்துவிக்க பழக்க வேண்டும். நாம் கர்த்தரை பிரியப்படுத்துவதை நம் பிள்ளைகள் தங்கள் கண்களால் காண வேண்டும். நாம் கர்த்தரை நேசிப்பதால் எதையெல்லாம் செய்கிறோம் என்பதை நம் பிள்ளைகள் காண வேண்டும். நாம் நம் பெற்றோரை கனப்படுத்துவதை நம் பிள்ளைகள் காண வேண்டும். அப்போது அவர்கள் பெரியவர்களாகும்போது, அவற்றை அவர்களும் செய்வார்கள். 

மட்டுமல்ல, கர்த்தருடைய கற்பனைகளை 'நீ உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசு' என்று தேவன் சொல்கிறார். அவைகளை குறித்து பேசி, அதன்படி பெற்றோராகிய நாம் நடக்கும்போது நம் பிள்ளைகள் கர்த்தருக்கு உகந்த பிள்ளைகளாக நடப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. 

அநேக பெற்றோர் தாங்கள் முன் உதாரணமாக இல்லாதபடியால், தங்கள் பிள்ளைகள் கெட்டுபோன பிறகு, ஐயோ, என் பிள்ளை இப்படியாகி விட்டானே என்று தலையிலடித்து கொள்வார்கள். பிள்ளைகளை கண்டிக்கும் நேரத்தில் நிச்சயமாக கண்டிக்க வேண்டும். யாராவது அவர்களுடைய பிள்ளைகளை குறித்து அவன் இப்படி இந்த வார்த்தைகளை சொல்லி தன் வகுப்பில் நடந்து கொண்டான் என்று அவனது பெற்றோரிடம் சொன்னால், அவர்கள், 'ஐயோ என் பிள்ளை அப்படியெல்லாம் சொல்ல மாட்;டான்' என்று தங்கள் பிள்ளையை தலைமேல் தூக்கி வைப்பார்கள். ஆனால் பெற்றோருக்கு தெரியாமல் பி;ளளை என்னென்வோ காரியங்களை செய்து கொண்டுவந்து நிற்பான். அதை பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். அவனை கூப்பிட்டு கேட்கவும் மாட்டார்கள், கண்டிக்கவும் மாட்டார்கள். பிள்ளையின் மேல் அப்படிப்பட்ட அபார நம்பிக்கை. தொடர்ந்து பிள்ளை துணிகரமாக அப்படி செய்து கெர்ண்டுதான் இருப்பான். பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராவது பிள்ளைகளை குறித்து தவறாக சொன்னால் அது உண்மையானதா என்று கண்டுபிடிக்க வேண்டும். சும்மா அப்படியே விட்டுவிடக் கூடாது. பெற்றோர் தன்னை கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்து பிள்ளை திருந்த வாய்ப்புண்டு. 

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான் அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் (நீதிமொழிகள் 20:7). அப்படிப்பட்ட நீதிமான்களாய், நம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக ஜீவித்து, நம்முடைய வாழ்க்கைக்கு பிறகு நம் பிள்ளைகள் பாக்கியவான்களாய் இருக்கும் கிருபையை தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் தருவாராக! ஆமென் அல்லேலூயா! 

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் 
இந்த ஈவு தேவன் அருளும் சுதந்திரம் 
அவராலே கிடைக்கும் பலன் கனியே 
ஆயிரம் தலைமுறையாக 
ஆண்டவரை சேவிப்போமே . 

ஜெபம் 

எங்களை அளவில்லாமல் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்த அந்த ஆசீர்வாதத்தின் கனிகளை சரியானபடி வளர்க்க எங்களுக்கு ஞானத்தை தருவீராக. உம்முடைய வழிகளில் அவர்களை நடத்தவும், வளர்க்கவும் கிருபை செய்வீராக. எங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பார்க்கும்போது உண்மையிலேயே இந்த பிள்ளைகள் கிறிஸ்தவ பிள்ளைகள் என்று சொல்ல தக்கதாக எங்கள் பிள்ளைகள் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.