வாசிக்க: மத்தேயு 14: 3-13
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். (மாற்கு 1:35).
ஆவியைப் புதுப்பித்துக்கொள்ள, துயர நேரத்தில் ஆறுதல் பெற, மும்முரமான ஊழியத்தின் நடுவே, இளைப்பாறுதல் பெற்றுக்கொள்ள, அநேகந்தரம் இயேசு தனிமையில் செல்வார். அத்தகைய ஒரு நிகழ்வை மாற்கு 1:32-35ல் நாம் வாசிக்கிறோம். கப்பர்நகூமில் ஒரு சாயங்கால வேளையில் இயேசு அநேகரைக் குணமாக்கினபின், இரவில் கொஞ்சநேரம் மட்டும் உறங்கினார். ஆனாலும், அடுத்த நாள் அதிகாலமே எழுந்து, தனிமையான ஓர் இடத்துக்குப் போய் ஜெபம்பண்ணினார். யோவான்ஸ்நானன் சிரச்சேதம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட தருணமே இயேசுவின் வாழ்விலே மனதை உருக்கிய தருணங்களில் ஒன்று; அச்சமயம் அவர் அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான இடத்துக்குத் தனியே போனார். இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யோவான். அதற்கும் மேலாக, உலகத்திற்கு அவர் வருவதை அறிவிக்கும்படி அவருக்கு முன்னோடியாக வந்தவன். எனவே, அவனது மரணம் இயேசுவை மிகவும் அதிகமாய் உருக்கிற்று. வனாந்தரமான இடத்திற்கு அவர் சென்றபோதும், ஜனங்கள் அவரிடத்திற்குப் போனார்கள். படவு கரைசேர்ந்த உடன், அவர் அவர்களைக் கண்டு, மனதுருகி, அவர்களுக்குப் போதித்து, வியாதியஸ்தரைச் சொஸ்தமாக்கி, ஐந்தாயிரம் புருஷருக்குப் போஜனம் கொடுத்தார்! அதற்குப் பிறகு அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, தமது சீஷரை அக்கரைக்குப்போகச் சொல்லி, மலையின்மேல் ஏறி ஜெபம்பண்ணினார். இங்கும் அவர் தனிமையாய் இருந்தார் என்கிறது இந்த வேதப்பகுதி. (மத்தேயு 14:23) தம் பிதாவுடன் இப்படித் தனியாயிருந்த தருணங்களில் தம்மை புதுப்பித்துக்கொண்டு, மீண்டுமொரு காலம் ஆற்றலுடன் ஊழியம் செய்தார் இயேசு!
அன்பானவர்களே, கிறிஸ்தவ வாழ்வில் வரும் கடினமான சவால்களில் தப்புவதற்கு நாம் முயற்சிக்கக் கூடாது. ஆவிக்குரிய விதத்தில் பிரச்சனைகளை மேற்கொள்ள விரும்பினால், நாம் ஆண்டவரின் வல்லமையைப் பெறவேண்டும். அதற்கு நம்மோடும் அவரோடும் நாம் தனியாக இருக்கவேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் மிக முக்கியமான காரியம், ஆண்டவரோடு நாம் தனிமையில் இருக்கும் நேரங்களை அவர் காணவேண்டும். அப்படியானால், அமைதியான வேளையில் நாம் கர்த்தரைச் சந்திக்கிறோமா? அமைதியான இடத்தில், அமைதியான வேளையில் அவர் நம் இருதயங்களை மறுபடியும் புதிதாக நிரப்ப விரும்புகிறார்.
*ஜெபம்:* ஆண்டவரே, அமைதியான இடத்தில் உம்மோடு பேச, உம் வார்த்தையைக் கேட்க நேரம் கொடுப்பதை நான் வழக்கப்படுத்திக்கொள்வேன். வாழ்வின் நெருக்கடிகளில், உம் சித்தத்தை அறிய அதிக நேரம் உம்மோடு செலவிடுவேன். அவற்றை மேற்கொள்கின்ற பெலம், ஜெயத்தை ஜெபத்தில் பெறுவேன். ஆமென்.