Search This Blog

Tuesday, 22 November 2011

நாம் பூமிக்குரியவர்கள் அல்ல

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? - (ரோமர் 8:31).

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? இந்த வசனம் நம் அனைவரையும் சந்தோஷப்பட வைக்கும் வசனம். என் வேதாகமத்திலும் இந்த வசனத்தை ஒட்டி வைத்திருக்கிறேன். நாம் கிறிஸ்தவர்களாயிருப்பதால், தேவன் நம்மோடு இருப்பதால், நமக்கு விரோதமாக யாரும் இருக்க முடியாது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது உண்மை என்றாலும், இந்த வசனத்தின் உண்மையான அர்த்தத்தை காண்போம்.

பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் ஜனங்கள் கூறினார்கள், 'தேவன் எங்களோடிருக்கிறார், ஆகவே நாங்கள் பெலிஸ்தியர்களை முறியடிப்போம்' என்று. தாவீது கூறினார், 'சேனைகளின் கர்த்தரின் நாமத்தினாலே கோலியாத்தாகிய உன்னை ஜெயிப்பேன்' எனறு. இஸ்ரவேலர் எமோரியரை அழித்தனர், எலியாவை பிடிக்க வந்தவர்களை தேவன் அழித்தார், இதே சிந்தையுடன் அநேக கிறிஸ்தவர்கள இன்றும் காணப்படுகின்றனர். 'எனக்கு விரோதமாக எழும்பும் அண்டை வீட்டுக்காரனை, இந்த இடத்தையே விட்டு காலி பண்ண செய்யும் ஆண்டவரே, எங்கள் குடும்ப சொத்தில் இருக்கும் தகராறில் என் சகோதரனுக்கும், எனக்கும் உள்ள வழக்கில், என்னை ஜெயிக்க வைத்து நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை அவனுககு வெளிப்படுத்தும் ஆண்டவரே' என ஜெபிக்கின்றனர்,

பழைய ஏற்பாட்டிலே எலிசாவை 'மொட்டை தலையா' என கேலி செய்தவர்களை கரடிகள் வந்து பட்சித்து போட்டது என வாசிக்கிறோம். ஆனால் கவனியுங்கள், இயேசுகிறிஸ்துவை பெயல்செபூல் (பிசாசுகளின் தலைவன்) என்று விரோதிகள் கூறிய போது எந்த கரடியும் வந்து அவர்களை சாப்பிடவில்லை. ஆகவே மேற்கண்ட வசனத்திற்கு, நம்முடைய எல்லா சத்துருக்களையும் தேவன் கொன்று விடுவார் என்று பொருளல்ல. அவர்களை தேவன் தோற்கடிப்பார் என்றும் பொருளல்ல, ஒரு வேளை நம் சத்துருக்கள் நம்மை கொல்ல தேவன் அனுமதிக்கலாம், இயேசுகிறிஸ்துவை விரோதிகள் கொன்றனர். இயேசுவோடிருந்த அப்போஸ்தலரையும், சத்துருக்கள் கொலை செய்தனர். நாம் இயேசுகிறிஸ்துவையும் அப்போஸ்தலர்களையும் காட்டிலும் மேன்மையானவர்கள் அல்ல.

புதிய ஏற்பாட்டின்படி நம்முடைய சத்துரு பிசாசு, மாம்சம், பாவம் ஆகியவையே. அண்டை வீட்டுக்காரரோ, சகோதரனோ சக விசுவாசிகளோ அல்ல. தேவனுடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல. ஆகவே தேவப்பிள்ளைகளுக்கு பூமியில் சத்துருக்களே இருக்க கூடாது. பூமியில் உங்களுக்கு சத்துருக்கள் இருப்பார்களானால் இன்னும் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உட்படவில்லை என்பதே பொருள். இயேசுகிறிஸ்து கூறினார், 'என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, அப்படியிருந்திருந்தால் உங்களிடம் என்னை ஒப்புகொடாதபடி என் ஊழியக்காரர்கள் போராடியிருப்பார்களே' (யோவான் 18:36) என்று. பூமிக்குரிய காரியங்களுக்காக, மக்களோடு போராடும் யாவரும் இவ்வுலகத்தின் ராஜ்யத்திற்கு உரியவர்களே! இன்னும் அண்டை வீட்டாரோடு சண்டையிட்டு கொண்டு, சகோதரனை பகைத்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்போமானால், நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி.

பிரியமானவர்களே, நாம் எந்த ராஜ்யத்திற்குரியவர்களாக இருக்கிறோம்? நமது அன்றாட வாழ்க்கை நம்மை இந்த உலகத்திற்குரியவர்களாக மாற்றியிருக்குமானால், நம்மை தேவ ராஜ்யத்திற்குரியவர்களாக மாற்றி கொள்ள முடிவு செய்வோம். நாம் இந்த உலகத்தில் வாழ்கிறவர்களாக இருந்தாலும், நமது ராஜ்யம் பரலோகத்திற்குரியதாகவே இருக்க வேண்டும்! ஆமென் அல்லேலூயா!

பூமிக்குரியவை அல்ல பூமிக்குரியவை அல்ல
மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்

லாபமான தெல்லாம் நஷ்டமென்றெண்ணுகிறேன்
உலக மேன்மை எல்லாம் குப்பை என்றே சொல்வேன்


ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல என்றும், எங்கள் ராஜ்யம் பரலோகத்திற்குரியதாகவும், நாங்கள் பரலோகத்தின் பிரஜைகள் என்றும் எப்போதும் மனதில் வைத்து, இந்த உலகத்தின் காரியங்களுக்கு எங்களில் இடம் கொடாதபடிக்கு காத்து கொள்ளும். எந்த சத்துருக்களும் எங்களுக்கு இராதபடி, எல்லாரோடும் நட்புறவோடு வாழ உணர்த்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment