Search This Blog

Saturday, 28 May 2011

ஆத்துமாவிற்கு ஆறுதல்

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; - சங்கீதம் - 43:5.

ஒரு பெரிய சுய சேவை பொருள் அங்காடி ஒனிறில் ஒரு பெண் தன்னுடைய மூன்று வயது சிறுமியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தாள். அங்குள்ள ஒவ்வொரு அலமாரியாக பார்த்து தனக்கு தேவையானவைகளை எடுத்து கையில் வைத்திருந்த கூடையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறு குழந்தை கண்ணில் காணும் ஒவ்வொன்றையும் கேட்டு அழுதுகொண்டே வந்தது. இவற்றையெல்லாம் அங்கு பணிபுரியும் ஒரு நபர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்கள் பிஸ்கட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு சென்றவுடன் அந்த குழந்தை பிஸ்கட் வேண்டுமென்று அடம்பிடித்தது. உடனடியாக அந்த பெண், அனித்தா அமைதியாக இரு. 10 நிமிடம் தான் பொறுத்துக் கொள் என்றாள். பின்பு சிறிது நேரம் கழித்து பொம்மைகளைக் கண்டவுடன் குழந்தை பொம்மை வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. உடனே, அனித்தா இன்னும் 5 நிமிடத்தில் நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம், பொறுமையாக இரு என்றாள். கடைசியாக வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு சாக்லேட் இருப்பதை அச்சிறுமி கண்டவுடன் சாக்லேட் வேண்டுமென்று ஓவென்று அழ ஆரம்பித்தாள். உடனே தாயார் 'அனித்தா இதோ சாமான்களெல்லாம் வாங்கியாச்சி உடனே நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் வீட்டிற்கு போய் ஒரு சுகமான குட்டி தூக்கம் போடலாம், பொறுமையாய் இரு,' என்றாள். இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்த நபர் அத்தாயாரை பார்த்து உங்கள் குழந்தை அனித்தா எவ்வளவு தொந்தரவு செய்தும் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் பேசி சமானித்து விட்டீர்களே என்று பாராட்டினார். அப் பெண் சிரித்துக் கொண்டே என் குழந்தையின் பெயர் மீனா என் பெயர் தான் அனித்தா, பொறுமையை இழந்துவிடாமலிருக்க நான் என்னிடம்தான் பேசிக் கொண்டேன் என்றார்.

பிரியமானவர்களே! வேதாகமத்தில் கூட தாவீது ராஜா மனம் கசந்து, சோர்ந்து போன நேரங்களில் தன்னை நோக்கி பேசி தன் ஆத்துமாவிற்கு ஆறுதல் சொல்வதைப் பார்க்கிறோம். சங்கீதம் 43:5-ல் 'என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? தேவனை நோக்கி காத்திரு என்று தன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.’

பொதுவாக பிறர் ஒரு கஷ்டத்திலிருக்கும் போது அவர்களுக்கு நாம் எளிதாக அறிவுரை கூறிவிடுகிறோம். ஆனால் அதே பிரச்சனை நமக்கு வரும்போது அறிவுரைகளை அப்பியாசப் படுத்துவது மிக கடினம். அப்படிப்பட்ட நேரங்களில் நம் ஆத்துமாவை பார்த்து அறிவுரை சொல்ல பழகிக் கொள்வது நல்லது. இதை செயல்படுத்திப் பாருங்கள். அது சோர்வுற்ற நேரத்தில் பெரிய உயிர் மீட்சியாய் இருக்கும். அதைப் போல பொறுமையிழக்க நேரிடும் சூழ்நிலையிலும், கோபத்தின் உச்சக்கட்டத்திலும் உங்களிடமே பேசி உங்கள் ஆத்துமாவை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!

கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல தகப்பனே உம்மை துதிக்கிறோம். எங்களை உம்முடைய பாதத்தில் தாழ்த்துகிறோம். நாங்கள் கஷ்டத்தில் இருக்கும் போதும், எங்களுடைய சோதனை நேரங்களிலும் எங்களுக்கு பொறுமையை தாரும், எல்லா நேரங்களிலும் எங்களுடைய மனதை கட்டுப்படுத்த கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, 27 May 2011

ஜெபத்தில் ஒரு அங்கம்

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். - (மாற்கு 11:25).

ஒரு கிறிஸ்தவ பெண்களின் கருத்தரங்கிற்கு ஜப்பானிலிருந்து (From Japan) யுமாரா (Yumarah) என்னும் சகோதரியும், பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டிலிருந்து லயானோ (Leonah) என்ற சகோதரியும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது இரண்டாவது உலகப்போர் முடிவடைந்து சிறிது காலமே ஆகியிருந்தது. ஜப்பானியர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினரை மிகவும் துன்பப்படுத்தியிருந்ததால் அவர்கள் ஜப்பானியர் மேல் மிகவும் கோபத்துடனும் வெறுப்புடனும் இருந்தனர். ஒரு நாள் அந்த கருத்தரங்கில் செய்தி முடிவடையும் நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சகோதரி வேகமாக எழுந்து வந்து, தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு, தன்னுடைய வெறுப்பின் நிமித்தம், குற்ற உணர்வுடன், ஆவியானவரின் கிரியைக்கு தன்னை விட்டுக்கொடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அப்போது, அவர்களின் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தபோது ஜப்பானை சேர்ந்த சகோதரி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இவரிடம், ‘நம் இரண்டு பேருக்கு இடையில் நமது நாடுகளின் போரின் நிமித்தம் கசப்புணர்வு இருப்பதாக காண்கிறேன். அப்படியானால், என் மக்கள் செய்த கொடிய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து மன்னிப்பாயா’ என்று கண்ணீரோடு கேட்டார்கள். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரி அவர்களை கட்டியணைத்து, அவர்களை மன்னித்தார்கள். பரிசுத்த ஆவியானவரை கிரியை அன்றி எதிரிகளை மன்னிக்க யாரால் முடியும்?

பொதுவாக நாம் ஜெவிக்க முழங்கால் படியிட்டவுடன் ஆண்டவரை துதிப்போம். நன்றி செலுத்துவோம், பின் நமது விண்ணப்பங்களை ஆண்டவருக்கு தெரியப்படுத்துவோம். இதோடுகூட ஜெபத்தில் மற்றொரு முக்கிய பகுதி ஒன்றும் உள்ளது. அது என்ன தெரியமா? ஜெபிக்கத் துவங்குவதற்கு முன்னர் நம்மை ஆராய்ந்து பார்த்தல் ஆகும்.

இந்த செயல் ஒவ்வொரு நாளும் நம் ஜெபத்தில் இடம் பெறவேண்டியது மிகமிக அவசியம். அப்படி ஆராயும் போது யார் மீதாவது நமக்கு கோபம், மனஸ்தாபம், வெறுப்பு, கசப்பு இருக்குமானால் ஜெபத்தை தொடரும் முன்னர் அவர்களை மன்னித்து விடுவது அத்தியாவசியம். ஜெபம் பண்ணும்பொழுது விசுவாசியுங்கள், ஜெபிப்பதற்கு முன்னர் மன்னியுங்கள். நமக்கு வெளியே இருக்கும் மலைப் போன்ற பிரச்சனையை தகர்க்கும் விசுவாசத்தைப் போலவே, நமக்கு உள்ளே இருக்கும் குறைகளை பார்க்க மன்னிப்பு அவசியம். விசுவாசம் மன்னிப்பு இந்த இரண்டிற்குள்ளும் அடங்கியிருக்கும் ஜெபத்தை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கற்று கொடுத்தார்.

லூக்கா 17:3 ல் உன் சகோதரன் மனஸ்தாபப்ட்டால் மன்னிப்பாயாக என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை வெளியே சொல்ல வெட்கி அல்லது தயங்கி மனதளவில் அவர் மனஸ்தாபப்படுவதை நாம் உணருகிறோம் என்றால் உடனே அவரை நாம் மன்னிக்க வேண்டும். மனஸ்தாபப்டுகிறேன் என்று சொன்னாலும் (உண்மையோ பொய்யோ) மன்னிப்பாயாக என்று வேதம் கூறுகிறது.

ஆனால் மாற்கு 11:25-ன்படி வேதனைப்படுத்தின அந்த நபர் நம்மிடம் வந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் நாம் அவரை மன்னிக்க வேண்டும். அவ்வசனத்தை கவனித்து பாருங்கள், எதிராளியை குறித்து அவ்வசனத்தில் ஒன்றுமே கூறவில்லை. அவன் மன்ஸ்தாபப்படுகிறோனோ இல்லையோ நமக்கு அவன்மேல் குறை இருந்தால் நாம் அவனை மன்னித்து விட வேண்டும், அவ்வளவு தான். அதை செய்வது மிகவும் கடினம் தான், ஆனால் நாம் அப்படி மன்னியாதிருந்தால் நம் தப்பிதங்களும் மன்னிக்கப்படாது என்றல்லவா கிறிஸ்து கூறுகிறார்! சிலர் சொல்வார்கள் நான் சாகும்வரை அந்த முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று. வைராக்கியம் வைப்பதால் எந்த பிரயோஜனமுமில்லை. நாம் சாகும்போதும் அந்த வைராக்கியம் வைத்திருந்தால் நாம் தான் இரட்சிப்பை இழக்க நேரிடும். எத்தனையோ பேருடைய வாழ்வில் இந்த மன்னிப்பில்லாததால் எத்தனை மனக்கஷ்டங்கள்! எத்தனை மனவருத்தங்கள்! ஒருவரையொருவர் மன்னிப்பது என்பது அத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! தேவன் நம்மை மன்னியாதிருந்தால் நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க முடியாதே! நாம் நித்திய அக்கினியில் கிடந்திருப்போமே! தேவன் நம்மை கிருபையாக மன்னித்திருக்க, நாம் மற்றவர்களை மன்னிக்க கடமை பட்டிருக்கிறோம். அதனால் அநேகர் வியாதியிலிருந்து சுகமடைந்திருக்கிறார்கள். மன்னிக்காத பட்சத்தில், அநேகர் வியாதியிலேயே இருந்திருக்கிறார்கள்!

பிரியமானவர்களே, மன்னிப்பை பற்றி எழுதுவதற்கும், பிரசங்கிப்பதும் எளிது. ஆனால் அதை நடைமுறையில், வாழ்வில் அப்பியாசப்படுத்துவது மிகக்கடினமாக இருநதாலும் அது செயல்படுத்த முடியாத ஒரு காரியமல்ல. பரிசுத்த ஆவியானவரின் துணையோடு முயற்சி செய்யும்போது அது நமக்கு மிகுந்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரும் எனபது நிச்சயம். ஆகவே நமது ஜெபம் கேட்கப்பட்டு நமது தப்பிதங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால் நாம் நம்மை ஆராய்நது பார்க்கவேண்டும். இனி உங்கள் ஜெபத்தில் மன்னிப்பும் ஒர் அங்கமாய் மாறட்டும். கர்த்தர் நம்மை மன்னிக்கிறவர்களாய் மாற்றுவாராக!

விலையேற பெற்ற உம் இரத்தத்தாலே
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை
என்அன்பர் இயேசுவுக்கே

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்களை ஆராய்ந்து பார்த்து, எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை மன்னிக்க எங்களுக்கு கிருபை தாரும். எங்களால் அது முடியாமற்போனாலும், ஆவியானவர் தாமே எங்களுக்கு உதவி செய்வாராக. நீர் எங்கள் குற்றங்களை மன்னித்தீரே, அதைப் போல நாங்களும் மன்னிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 26 May 2011

அவருக்கென்றே சிருஷ்டிக்கப்பட்டோம்

'ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது'. - (கொலோசேயர் 1:16).

கொடுங்கோல் ஆட்சி நடத்தி மக்களை துன்பப்படுத்தி கொண்டிருந்த ஒரு தலைவனுக்கு எதிராக ஒரு மனிதன் வீறு கொண்டெழுந்தான். அடக்குமுறை ஆட்சியை அகற்றி விட்டு மனித நேயமிக்க ஒரு அரசு அமைத்து மக்களுக்கு நல்லதை செய்ய விரும்பினான். அராஜக தலைவனின் பிடியிலிருந்து மக்களை மீட்க எண்ணிய அவன் ஒரு புரட்சிகரமான பாதையில் போய் கொண்டிருந்தான். ஆனால் அந்த முயற்சியின் பாதையில் அவன் தன் மனைவியை இழந்தான். தன் பிள்ளைகளையும் இழந்தான். தனக்கு உறுதுணையாக நின்ற சிலரையும் இழந்தான். சண்டை ஒன்றில் ஒரு காலையும் இழந்தான். ஆயினும் அவன் அனுதினமும் கடவுளிடம், 'எனக்கு இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று பிராத்தனை செய்தான்.

ஒரு நாள் அவனுடைய உற்ற நண்பன் ஒருவன் அவனை பார்த்து, 'உன் உயிரை தவிர உன்னிடம் இழக்க இனி வேறெதுவும் இல்லை. இவைகளெல்லாம் இழந்த பின்பு; உனக்கு வாழ்வின் மேல் வெறுப்பு ஏற்படாமல், வாழ வேண்டும் என்ற ஆசை எப்படி வருகிறது' என்று கேட்டான். அதற்கு அவன், 'நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். ஆனால் எபபடியாகிலும் இந்த நாட்டு மக்களை அடக்கு முறை ஆட்சியாளனிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற இலக்கையும், ஆசையையும் இழக்கவில்லையே. அதை இழக்காதவரை நான் வாழ்வது எனக்கு அர்த்தமுள்ளது' என்று பதிலளித்தான். ஆம், உயர்ந்த ஒரு நோக்கம் தான் இந்த பூமியில் நாம் வாழ்வதை அர்த்தமுள்ளதாகவும், அவசியமானதாகவும் நம்மை பார்க்க வைக்கிறது.

வாழ்க்கையில் எதிர்பாராத புயல்கள் வீசி வாழ்வை சீரழிக்கும்போது வாழ்வு என்பது கடினமான சுமையாகவும், வேண்டாம் என்று வீசி விடலாமா என எண்ண வைக்கும் ஒன்றாகவும் மாறிவிடுகிறது. இந்த பூமியில் நான் வாழ்வதில் என்ன அர்த்தம்? என்ன பயன்? என்ன அவசியம்? என்ன மேன்மை? என எவரும் நினைப்பது இயற்கையானது. ஆனால் வாழ்வை அர்த்தமற்றது என்று எண்ணுவதற்கு உண்மையான காரணம் மேற்கண்டது போன்ற துன்ப விஷயங்கள் அல்ல. உங்கள் வாழ்வின் மேல் தேவன் வைத்திருக்கிற உண்மையான நோக்கத்தினை உணர்ந்து, அந்த நோக்கத்தை இலக்காக வைத்து, வாழாமல் போவதே காரணம். அதாவது இந்த வாழ்வு தேவனுக்கென்று வாழ்வதற்காகவே தரப்பட்டுள்ளது என்று அறியாமல், நமக்காகவே வாழ்ந்திருப்பதே விரக்திக்கும், வெறுப்பிற்கும் முக்கிய காரணம்.

பிரியமானவர்களே, வாழ்வை மிக அர்த்தமுள்ளதாகவும், திருப்தியுடையதாகவும் மாற்றுவது தேவ நோக்கத்தை இலக்காக கொண்ட வாழ்க்கை முறையே. மனிதனை தேவன் தமக்காகவும், அவரது திட்டத்தை நிறைவேற்றும் கருவியாகவும் படைத்தார் என்ற செய்திதான் வேதம் தரும் முக்கிய செய்தி. எனவே தேவனுக்காக வாழ்வது மனிதனின் ஒரு தெரிந்தெடுப்பு அல்ல. இயற்கையான கட்டாயம். அவ்விதம் வாழுகிற மனிதன் தான் விரும்பிய எதையும் அடையாமற் போனாலும் சரி, தான் பெற்றிருந்த எதையும் இழந்தாலும் சரி அவனோ தான் வாழ்வது அர்த்தம் மிகுந்தது என்ற நல்ல நிச்சயம் உடையவனாக இருப்பான்.

நான் ஏன் வாழ வேண்டும் என எண்ணும், சகோதரனே, சகோதரியே நீங்கள் மண்ணிற்கு சுமையும் இல்லை, உஙகளுக்கு நீங்கள் பாரமும் அல்ல. தேவன் உங்களுக்கு நியமித்த நாட்கள் வரை அவருக்காய் வாழ இன்றே அர்ப்பணியுங்கள். துக்கத்தையும் சுய பரிதாபத்தையும் விட்டெறியுங்கள். நான் வாழ்வது அவருக்காக என்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள். ஆமென் அல்லேலூயா!

வந்துபோன மனிதர் எல்லாம்
உலகம் நினைப்பதில்லை
மரித்தும் பேசும் மனிதர் உண்டு
என்றும் அவர்கள் கொஞ்சமே
தியாகத்தோடு தீபமாக
வாழ்ந்த தேவ மனிதரை
இதிகாசம் மறந்ததாக
சேதி ஒன்றும் இல்லையே!
..
உனக்கும் எனக்கும் தேவன் தந்த
காலம் அல்லவா .. இதை
உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
தேவனுக்காக வாழும் வாழ்க்கை
உன்னதம் அல்லவா .. இதை
அறிந்து உணர்ந்து வாழும்போது
இலாபம் அல்லவா!

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்கள் ஒவ்வொருவரையும் உருவாக்கின நோக்கத்தை அறிந்து நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை தாரும். நோக்கமில்லாமல் வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல என்பதை உணர்த்தியருளும். நீர் படைத்த எல்லாம் உமக்காகவும் உம்மை கொண்டும் படைக்கப்பட்டது என்பதை உணர கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, 25 May 2011

உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி

'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. - (எசேக்கியேல் 14:14).

இந்த அதிகாரத்தில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிச மூலம் 'மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி' பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள் ஆகிய நான்கு தீங்குகளை அந்த தேசத்தின் மேல் வரப்பண்ணுவேன்' என்று கூறுகிறார். 'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்' என்று பார்க்கிறோம்.

சமீபத்தில் எகிப்தில் தோன்றின மங்கின குதிரை, வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆறாம் அதிகாரம் 8-ம் வசனத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, மங்கின குதிரை வெளிப்படுகிறது. 'நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது' (வெளிப்படுத்தின விசேஷம் 6:8). பாருங்கள், இந்த இடத்திலும், பஞ்சம், பட்டயம், சாவு, துஷ்டமிருகங்களினால் கொலை செய்யப்படுவதை காண்கிறோம்.

இந்த தீங்குகள் நேரிடும்போது, நோவா. தானியேல், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பக்தர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஏன் அவர்கள் பெயர்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் அவர்கள் மாத்திரம் தங்கள் ஆத்துமாக்களை தப்புவிப்பார்கள்?

நோவா: நோவா உலகத்தின் மேல் ஜெயம் கொண்டவராக காணப்பட்டார். எத்தனையோ பேர் அவரிடம் மழையா பெய்ய போகிறது? என்று அவரை கேலி பண்ணினாலும், பேழையை கட்டி அவரும், அவருடைய குடும்பமுமாக எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். பேழைக்குள் இருந்தவர்கள் காக்கப்பட்டார்கள். பேழைக்கு வெளியே இருந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். '...அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,...' (1பேதுரு 3:21) என்று பார்க்கிறோம். பேழையிலே காக்கப்பட்டது, ஞானஸ்நானத்திற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை பாருங்கள். 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்' (மாற்கு 16:16) இந்த வார்த்தைகளின்படி, ஞானஸ்நானம் பெற்றவர்கள் காக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.

தானியேல்: தானியேல் மாம்சத்தின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். 'தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்'. - (தானியேல் 1:8). தானியேல் வாலிப பிராயத்தில் இருந்தாலும், திராட்சரசம் தனக்கு வேண்டாம் என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்து அதன்படி நடந்து கொண்டார். நாமும் கூட மாம்சீகத்திலே வெற்றி பெற்றவர்களாக நடக்க வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் நீங்கினவர்களாக காணப்பட வேண்டும். மதுபானத்தையோ, சிற்றின்பங்களுக்கோ நாம் இடம் கொடாமல், பேரின்ப நாதரை மகிமைப்படுத்தும் வாழ்வையே வாழ வேண்டும். தானியேல் அவற்றை வெறுத்ததால் தாழ்ந்து போய் விடவில்லை. புறஜாதியான இராஜா கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்து காட்டி, பெரும்பான்மையான மக்கள் மத்தியில் சிறுபான்மையான தானியேலின் தேவனே தேவன் என்பதை நிரூபித்து காட்டினார். கர்த்தர் அவரையும், அவருடைய தோழர்களையும், அடிமைகளாக வந்த அந்த நாட்டில் பெரிய அதிபதிகளாக மாற்றினார். அல்லேலூயா!

யோபு: யோபு சாத்தானின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். சாத்தான் எத்தனை தான் சோதனைகளை கொண்டு வந்தாலும், கர்த்தரை தூஷிக்காதபடி வாழ்ந்து தன் உத்தமத்திலே நிலை நின்றவர். தேவனே சாத்தானிடம் அவரை குறித்து சவால் விடும்படி உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார். அவர் தன் பிள்ளைகள், சொத்துக்கள், சுகங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்ட போதிலும், தேவனை தூஷிக்காதபடி பரிசுத்தமாய் வாழ்ந்த அவருக்கு எல்லாமே இரட்டிப்பாய் திரும்பவும் கிடைத்தது.; தேவனுக்கு முன்பாக சாத்தான் தோல்வியடைந்தான். இந்த நாளில் தேவன் நம்மை குறித்து சாத்தானிடம் சவால் விடும்படியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா, அல்லது அவர் வெட்கப்படும்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட மூன்று புருஷர்களை போல நாமும் இந்த கடைசி நாட்களில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனிதர்களை போல உலகத்தின் மேலும், மாம்சத்தின் மேலும், சாத்தானின் மேலும் வெற்றி பெற்றவர்களே, உலகத்தில் வர இருக்கிற பஞ்சம், பட்டயம், கொள்ளைநோய், துஷ்ட மிருகங்களின் பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் ஆத்துமாக்களே தப்புவிக்கப்படும். நாம் அவர்களை போல வாழ்ந்து, வரப்போகும் உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்திற்கு தப்புவோமா? ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், சீக்கிரமாய் ஞானஸ்நான சாட்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!

சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீவா
இயேசுவைப் பின்பற்ற வா
..
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலக, மாமிச இச்சைகளை வெறுத்து, சாத்தானின் மேல் ஜெயம் எடுத்து கர்த்தருக்காக வாழும்படியாக எங்களை ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே. நோவா, தானியேல், யோபுவை போல வாழவும், வரப்போகும் மகா உபத்திரவ காலத்திற்கு எங்களையும், எங்கள் குடும்பங்களையும் தப்புவித்து கொள்ளும்படியாக எங்களை அர்ப்பணிக்கிறோம். ஞானஸ்நான சாட்சிக்கு ஒப்புக்கொடுக்காதவர்கள் இந்த கடைசி நாட்களில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து கீழ்ப்படியவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இலங்கை

இந்த நாளில் விசேஷவிதமாக இலங்கைக்காக ஜெபிப்போம்.

இலங்கையில் 80,000த்துக்கும் மேற்பட்டோர், அங்கு ஏற்பட்டுள்ள போரினால், அடிபட்டு, சரீர பிரகாரமாக மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதை சரி செய்ய முடியாதபடி இலங்கை இராணுவம் எந்த மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு செல்ல முடியாதபடி தடை செய்திருக்கிறது. தமிழர்களில் அநேகர் சாக வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாயிருக்கிறது. அநேகர் தங்கள் பெற்றோரை இழந்தும், அநேகர் தங்கள் கை கால்கள் இழந்தும், அடிப்படை தேவைகளே இல்லாதபடி வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் ஜெபிப்போமா?

..

எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வேளையிலும் இலங்கைக்காக உம்முடைய சமுகத்தில் வருகிறோம். ஐயா அந்த தேசத்தில் சமாதானத்தை தருவீராக. தமிழர் மேல் இலங்கை இராணுவத்தினர் நடத்தும் அராஜகங்களை பார்த்து சும்மா இருக்கிற தேவனல்லவே, தயவாய் இரங்கும். அந்த தேசத்தில் சமாதானத்தை தாரும். அநேகருடைய இரத்தம் சிந்தப்பட்டிருக்கும் அந்த தேசத்தில் உம்மையல்லாமல் வேறு யாராலும் சமாதானத்தை கொடுக்க முடியாது தகப்பனே. அங்கு பெற்றோரையும் தங்களுக்கு பிரியமானவர்களையும் இழந்து தவிக்கிற ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்துவீராக. அவர்கள் கண்ணீரை துடைப்பீராக. தங்கள் உடல் உறுப்புகளை இழந்து பாடுபடுகிற ஒவ்வொருவருக்கும் துணையாய் இருப்பீராக. மருத்துவ வசதிகள் அந்த தேசத்தில் தேவையுள்ளோரை சென்றடையும்படியாக கிருபை செய்யும். அரசாங்கத்தோடு இடைபடும். அவர்கள் தமிழர்களுக்கு விரோதமாக செய்யும் கொடுமைகளை நிறுத்தும்படியாக அவர்கள் இருதயத்தில் கிரியை செய்வீராக. அந்த தேசத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் காணும்படி கிருபை செய்வீராக. அங்கு பாடுகின்ற மக்கள் தங்களை நேசிக்கிற தேவன் ஒருவர் உண்டு என்பதையும், அவரே சமாதான காரணர் என்பதையும் அறிந்து கொள்ள கிருபை செய்வீராக. அகதிகளாக மற்ற நாடுகளுக்கு சென்றிருக்கிற மக்கள் தங்கள் குடும்பங்களோடு இணைய கிருபை செய்வீராக. கர்த்தரை அறிந்து அவருக்குள் வாழ கிருபை செய்யும். தங்கள் தேசத்திற்காக ஜெபித்து, கிருபைகளை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Tuesday, 24 May 2011

உயர பறக்கும் அனுபவம்

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசாயா 40:31).

கழுகின் முட்டைகளில் ஒன்று, தவறுதலாக கோழி முட்டைகளுடன் கலந்து விட்டது. கோழியும் தன் முட்டைகளோடு கழுகின் முட்டையும் அடைகாத்து குஞ்சு பொரித்தது. வளர வளர கழுகு குஞ்சின் உருவமும் சப்தமும் மாற தொடங்கியது. ஒரு முறை கோழிக்குஞ்சுகளை வேட்டையாடும்படி வந்த கழுகு, கோழிகுஞ்சுகளின் நடுவில் தனது இனத்தவனை கண்டதும் மெதுவாய் கழுகு குஞ்சுடன் பேச ஆரம்பித்தது. 'நீ எப்படி இங்கு வந்தாய்?' என்று கேட்டது. அதற்கு கழுகு குஞ்சு 'நான் பிறந்ததிலிருந்தே இங்கு தான் இருக்கிறேன்' என்றது. சற்று தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை காட்டி 'அதுதான் என் தாய்' என்றது. அதற்கு கழுகு 'இல்லையில்லை, நன்றாக பார், என்னை போல நீயும் ஒரு கழுகுதான்' என்றது. கழுகு குஞ்சு உறுதியாக நம்ப மறுத்துவிட்டது. பல விதங்களில இதற்கு புரிய வைத்தும் எதையும் நம்புவதாய் இல்லை குட்டி கழுகு. சற்று நேரம் யோசித்த கழுகு, 'நம்மை பற்றி உலகிலேயே மிக சிறந்த புத்தகமான வேதாகமத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா?' என்று சொல்ல ஆரம்பித்தது.

நாம் கோழிகளை போல குப்பைகளை கிளற கூடாது. எல்லா பறவைகளை காட்டிலும் உயரத்தில் பறக்கும்படி தேவன் நம்மை படைத்திருக்கிறார். - (யோபு 39:27).

நாம் கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும் அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம் ப்ணணும்படி தேவன் நம்மை படைத்திருக்கிறார். - (யோபு 39:28).

நாம் உயரத்திலிருந்து நம் இரையை பார்க்கும்படி (சுமார் 150 அடி பிரகாசமான கண்களை கொடுத்திருக்கிறார். - (யோபு 39:29).

நாம் நம்முடைய குஞ்சுகளை செட்டைகளில் சுமக்க கூடிய பெலன் நமக்கு உண்டு (உபாகமம் (32:1) என்று எடுத்து கூறி, 'நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்ல, கன்மலையின் மேல்' என்று கூறி தன்னுடன் அழைத்து சென்றது.

இந்த கழுகு குஞ்சுகளை போல நாமும் கூட அநேக நேரங்களில் நம் நிலையை மறந்து உலகத்தின் காரியத்தில் மூழ்கி போய் விடுகிறோம். நாம் உலகத்தின் குப்பைகளிலுள்ள புழுக்களையல்ல, உயரத்தில் பறந்து உற்சாகத்தோடு தேவனோடு உறவாட அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியில்லாமல் இந்த உலகிலேயே வாழ்க்கை முடிந்து விடுவதை போல உலகத்தின் காரியங்களிலேயே திருப்தியாக இருந்து விடாதீர்கள். மறுமைக்குரிய மேலான காரியங்களில் வளர பிரயாசமெடுங்கள்.

சுமார் 150 அடி உயரத்திற்கு மேலாக கழுகு பறந்தாலும் தன் இரையை துல்லியமாக பார்க்கும் திறமையுடையது. நாம் எந்த சூழ்நிலையிலிருந்தாலும் நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நோக்கத்தை மற்நது விடக்கூடாது. பரந்த பார்வையோடு இச்சமுதாயத்தை பார்த்து தேவையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். உதவிக்காக நிற்போர் நம் கண்களுக்கு தெரியவில்லை என்றால் ஆவிக்குரிய கண் கண்ணாடி கண்டிப்பாக அணிந்தே ஆக வேண்டும். நம்மால் இயன்றவரை தேவையுள்ளவர்களுக்கு நாம் உதவத்தான் வேண்டும்.

மேலும் கழுகின் பெலன் எப்பொழுதும் குறைவதில்லை. வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் அதற்கு இறகுகளனைத்தும் உதிர்ந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்நிலையில், அது சிகரத்தின் உச்சிக்கு சென்று சூரிய ஒளி தன்மீது படும்படி இரவு பகலாக இறக்கைகளை விரித்து அமர்ந்து விடும். சில நாட்களில் புதிய இறக்கைகளுடன் புது பெலத்துடன் தன் வாழ்வை தொடங்குகிறது. நம் வாழ்விலும் சில நேரங்களில் பள்ளத்தாக்கில் விழுந்து விட்டதை போன்ற உணர்வு, ஏன் இந்த நெருக்கடி என்பது போன்ற பயம் காணப்படலாம். சோர்ந்து போய் விடாதீர்கள். கழுகு சிகரத்திற்கு செல்வதை போல உங்களுக்கு இது ஒரு காத்திருக்கும் காலம். தேவ சந்நிதியில் அமர்ந்திருந்து அவருடைய வார்த்தைகளின் மெல்லிய சத்தத்திற்கு கீழ்ப்படிவோம். புது பெலனை பெற்று கொள்வோம். செட்டைகளை அடித்து எழும்புவோம். சோர்ந்து போகாதபடி, இளைப்படையாதபடி கர்த்தருக்காய் உற்சாகமாய் எழும்பி பிரகாசிப்போம். ஆமென் அல்லேலூயா!

சர்ப்பங்களை எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்ருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்
..
கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் - நீ

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் கோழிகளை போல இந்த உலக குப்பைகளை கிளறி கொண்டு வாழ்கிறவர்களாக இல்லாமல், கழுகுகளை போல உயரத்தில் தேவனோடு இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர எங்களுக்கு ஞானத்தை தாரும். எந்த சூழ்நிலையிலும் தேவன் எங்களை அழைத்த அழைப்பை மறவாதவர்களாக உமக்கு சாட்சிகளாக வாழவும், உமக்கு காத்திருந்து புதுபெலனை பெற்று வாழவும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஸ்விட்சர்லாந்த்

1) கிறிஸ்தவ நாடாகிய இந்த நாட்டில் உள்ள அனைவரும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள ஜெபிப்போம்.

2) வளமிக்க இந்த நாட்டில் தங்களை வளமிக்கவர்களாக்கிய தேவனை மறவாதபடி, அவரையே பற்றி கொள்ளும்படி ஜெபிப்போம்.

3) இங்குள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் கர்த்தரையே சார்ந்து நீதியும் நியாயமுமாய் ஆட்சி செய்ய ஜெபிப்போம்.

Monday, 23 May 2011

ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்

...பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகியதூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து.. - (வெளிப்படுத்தின விசேஷம் 5:8).

ஜெபிக்க மனமற்ற கிறிஸ்தவனை தண்ணீரில்லாத கிணற்றிற்கும், உயிரில்லாத உடம்பிற்கும் ஒப்பிடலாம். அப்படியென்றால் ஜெபம் ஒரு கிறிஸ்தவனுக்கு அவ்வளவு முக்கியமா? ஆம், இதை குறித்து லியோனார்டு ரேவன்ஹில் என்ற தேவ மனிதர் கூறுகிறார், 'பரிசுத்த வாழ்விற்கு ஜெபம் முக்கியமானது என்றார் ஒருவர். உண்மைதான். ஆனால் ஜெபத்திற்கு பரிசுத்த வாழ்வே இன்றியமையாதது என்பது அதிலும் உண்மை. ஜெபத்தின் இரகசியமே இரகசியமாய் ஜெபிப்பது. ஜெபத்தை குறித்த புத்தகங்கள் படிப்பது நல்லது. ஆனால் அது போதாது. சமைக்க பொருளின்றி சமையற்கலை படிப்பினால் என்ன பயன்? அப்படித்தான் ஜெபமும். ஜெபத்தை குறித்து ஆயிரமாயிரமான புத்தகங்களை படித்தும் ஜெபத்தின் வல்லமையை உணராமலிருக்கவும் வாய்ப்புண்டு. ஜெபிக்க கற்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான அநேக புத்தகங்களை ஒருவர் வாசித்து, வாசித்து அதை கடைப்பிடிக்காமல் நலிந்தும் போகலாம். இதய பாரத்தினால் ஜெபிக்காத எந்த ஜெபத்தினாலும் பயன் இல்லை'

ஒரு பழம்பெரும் எழுத்தாளர் சொன்னார், 'ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு வீட்டுக்காரர் கதவை திறப்பதற்கு முன் ஓடிவிடும் சிறுவனை போலவே நாம் அநேக நேரம் ஜெபிக்கிறோம்' என்றார். ஆத்திரம் தோத்திரம் ஆமென் ஜெபம் என்று பழைய காலத்தில் சொல்வார்கள். அப்படித்தான் 'ஆண்டவரே நான் வேலைக்கு போகிறேன், என்னை ஆசீர்வதியும். பிரச்சனை வராதபடி காத்து கொள்ளும்' என்று அவசர அவசரமாக ஜெபித்து போகிறவர்களாகவே நம்மில் அநேகர் காணப்படுகிறோம்.

தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். எனவே ஜெபமும் தேவனைப்போல பரந்தது. பதிலளிக்க தேவன் வாக்குதத்தஙகள் அநேகம் கொடுத்து இருக்கிறார். ஆகவே ஜெபமும் தேவனை போல வலியது. தேவன் தன்மீது ஒளி வீசும்படி தனி அறையில் தனித்திராதவன் காரிருளில் தத்தளிக்கிறான் என்பது உண்மை. கிறிஸ்துவின் நியாயசன சிங்காசனத்தின் முன் நம்மை வெட்கப்பட வைக்கப்போவது நமது ஜெப குறைவாகவே இருக்கும். எலியா தீர்க்கதரிசி நம்மை போல ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் அவர் ஜெபித்த போது, அக்கினி பரத்திலிருந்து வந்து இறங்கியது. இயற்கை அவர் சொல் கேட்டு கீழ்ப்படிந்தது. மழை பெய்யாது என்றார். பெய்யவில்லை. இப்போது மழை பொழியும் என்றார். உடனே பொழிந்தது.

இன்றைய தேவை அப்படி ஜெபிக்கிற ஆட்களே! சபைகளில் ஜெபக்குறைவு அதிகமாய் காணப்படுகிறது. சுவிசேஷ விதைகள் முளைக்காதபடி சபைகள் வறண்டு விட்டன. கண்ணீரின்றி பலிபீடங்க்ள வறண்டு விட்டன. அதிகாரத்தோடு ஜெபிக்கிற எலியாக்கள் இந்நாட்களில் எங்கே?

ஜெப அறை என்பது நமது தேவைகளை ஆண்டவரிடம் சமர்ப்பிக்கும் இடம் மாத்திரம் அல்ல, நம்முடைய ஜெபத்தினால் மனிதர்கள் மாற முடியும்! நாம் இருக்கும் இடத்தை தலைகீழாக மாற்ற நம் ஜெபத்தினால் முடியும்! நம் தேசத்தில் எழுப்புதல் அக்கினியை கொண்டு வர முடியும்! அந்தரங்கத்தில் நாம் தேவனை நோக்கி சிந்தும் கண்ணீருக்கு வெளியரங்கமான பதில் நிச்சயமாய் உண்டு. கர்த்தரே தேவன் என்று மக்களை சொல்ல வைக்கும் எலியாக்கள் இன்று நம் நாட்டிற்கு தேவை. நம் வீட்டிற்கு தேவை. ஜெபிக்க ஆரம்பிப்போமா? நம் நாட்டை ஜெபத்தினால் கலக்குகிறவர்களாக மாற்றுவோமா? 'அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்' (அப்போஸ்தலர் 4:31) என்ற வசனத்தின்படி, நாம் ஜெபிக்கிற போது நாம் கூடியிருக்கிற இடம் அசையட்டும், நாம் தைரியமாய் கர்த்தருடைய வார்த்தையை சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

இடைவிடாமல் ஜெபம் செய்ய,
இடையூறெல்லாம் நீக்கிவிடும்,
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்,
கடைசி மட்டும் காத்திருப்போம்
..
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஜெப ஆவியை எங்கள் மேல் ஊற்றும் தகப்பனே. விண்ணப்பத்தின் ஆவியாலும், மன்றாட்டின் ஆவியாலும் நாங்கள் நிரப்பப்படவும், ஜெபிக்கவும் எங்களுக்கு கிருபை தருவீராக. எலியாவை போல கர்த்தருக்காக வைராக்கியமாய் நின்று ஜெபிக்க கற்று தாரும் தகப்பனே. பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் தூபவர்க்கம் என்று எழுதபட்டிருக்கிறதே. அப்படிப்பட்ட பரிசுத்தவான்களாக நாங்கள் ஜெபத்து, உமது சமுகத்தில் எங்கள் ஜெபங்கள் தூபவர்க்கங்களாக காணப்படட்டும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

போர்ச்சுக்கல்

1) ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்து அந்த தேசத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இந்த தேசத்தில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனை கொடுக்க ஜெபிப்போம்.


3) இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சியை காத்து கொள்ள ஜெபிப்போம்.

Sunday, 22 May 2011

நிச்சயமான பலன்

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். - (பிரசங்கி 11:1).

சாலமோன் ராஜா இந்த வசனத்தை விதைக்கும் காலத்தில் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. அநேக விவசாய நிலங்கள் நைல் நதிக்கு அருகாமையில் இருந்தது. அந்த நதியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் விதைக்கும் காலத்தில் வெள்ளம் வரும்போது ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது விவசாயிகள் என்ன செய்வார்கள்? அடுத்த வருடம் நல்ல நேரம் வரும்வரைக்கும் அப்படியே விட்டுவிடுவோம் என்று சும்மா இருந்தால் அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? அப்போது அவர்கள் வெள்ளம் கரையேறியபிறகு, அந்த தண்ணீர்களின் மேல் விதையை தூவி விடுவார்கள். எப்படியாவது அந்த விதை தண்ணீர் வற்றியபிறகு மண்ணில் போய் பதிந்து துளிர் விடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அவர்களுடைய நம்பிக்கையின்படியே, தண்ணீரெல்லாம் வற்றிய பிறகு, அந்த விதை நிலத்தில் எங்காவது விழுந்து, முளைத்தெழும்பி நெற்பயிராக எழும்பும். இதை பார்த்திருந்த சாலமோன் ஞானி இந்த கருத்தை இந்த வசனத்தில் எழுதியிருக்கிறார்.

நாம் செய்கிற காரியங்களுக்கும், ஊழியங்களுக்கும் ஒருவேளை உடனடியாக பதில் வராமலிருக்கலாம். உடனே பதில் கிடைக்க்காததால், நாம் எதிர்ப்பார்க்கிறபடி நடக்காததால், நம்மில் அநேகர், நாம் செய்கிற காரியங்ளை அப்படியே பாதியில் விட்டு விடுகிறோம். அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று மனம் சோர்ந்து போய் விடுகிறோம்.

நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6:9) என வேதம் நம்மை தேற்றுகிறது. நாம் சோர்ந்து போகாமல், தொடர்ந்து நன்மை செய்வோமானால், நிச்சயமாக மிகப்பெரிய அறுவடையை நாம் அறுப்போம்.

சில இடங்களில் கர்த்தருடைய வார்த்தைகளை எத்தனையோ தடவை சொல்லியும் ஒரு பலனையும் காணாமல் போனதினால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? சோர்ந்து போகாமல் தொடர்ந்து செய்யுங்கள். கர்த்தர் ஒரு நாள் அதன் பலனை நீங்கள் காணும்படி செய்வார்.

சில நேரங்களில், நாம் போய் வசனத்தை விதைத்தவுடனே அதை ஏற்று கொள்வார்கள். ஏனென்றால், நமக்கு முன்னே சென்றவர்கள் அந்த நிலத்தில் விதைத்து, அந்த நிலத்தை ஏற்ற நிலமாக மாற்றியிருந்தபடியால், நாம் விதைத்தவுடனே அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையால் நாம் இப்போது விதைத்து உடனே பதில் வரவில்லை என்றால் அதற்காக சோர்ந்து போகாமல், தொடர்ந்து விதைப்போம். அநேக நாட்களுக்கு பின் அதன் பலனை காண்போம்.

உங்கள் வீட்டில் ஒரு நன்மையும் காணாமல், சோர்ந்து போயிருக்கிறீர்களா? எத்தனை நாள் ஜெபித்தும் கர்த்தர் என் வீட்டின் நிலைமையை மாற்றவில்லை என்று சோர்ந்து போனீர்களா? தளர்ந்து போகாமல் சோர்ந்து போகாமல், ஜெபிப்போமானால், கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் நிலைமையை மாற்றுவார். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18) என்று சொன்னவர், நிச்சயமாகவே உங்கள் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வருவார்;. உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீணாக போவதில்லை. ‘அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்' என்று வேத வசனம் கூறுகிறதல்லவா? காலங்கள் கடந்தாலும், கர்த்தருடைய கிருபைகள் மாறுவதில்லை, கர்த்தர் மாறுவதில்லை. அவர் வாக்குததத்தங்களும் மாறுவதில்லை. ஆகவே சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள். அந்த விவசாயிகளின் நம்பிக்கை வீணாய் போகாமல், அந்த விதை அநேக நாட்களுக்கு பிறகு முளைத்தெழும்பி பலன் கொடுத்தது போல, உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீணாய் போவதில்லை. உங்கள் முகம் பிரகாசமடையும்படி கர்த்தர் உங்கள் ஜெபங்களுக்கு பதில்கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவான் அல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம்
என்ன பேரின்பம்!
..
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே
கண்டுன்னை அழைத்த தேவன்
கைவிடுவாரோ?

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். அநேக நாட்களாகியும் எந்த பதிலும் இல்லையே என்று அங்கலாய்க்கும் ஒவ்வொருவருடைய கண்ணீரையும் துடைப்பீராக, அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக. நிச்சயமாவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்று அவர்களை தேற்றியருளும். எந்த நம்பிக்கையும் அற்றவர்களாக தங்கள் வாழ்நாளை கழிக்கும் ஒவ்வொருவரையும் தேற்றுவீராக, பெலப்படுத்துவீராக, கிருபையால் நிரப்புவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

வாலிபர்களுக்காக

1) புகைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபர்கள் (Chain-Smokers) விடுவிக்கப்பட ஜெபிப்போம்.


2) வேலையில்லா காரணத்தினால் தீவிரவாதிகளாக மாறுகிற இளைஞர்கள் கவனம் திசை திருப்பப்பட ஜெபிப்போம்.


3) போதைப் பழக்கத்தின் மூலம் இளைஞர்களைக் கொண்டே இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் பிசாசின் தந்திரங்கள் அறுக்கப்பட ஜெபிப்போம்.


4) செல் போனுக்கு (Cell Phone) அடிமைகளாக உள்ள வாலிபர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


5) இளைஞர்கள் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமைப்பட்டிருக்கிற தன்மை மாற ஜெபிப்போம்.