Search This Blog

Wednesday, 5 September 2012

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்

பாகம் ஒன்று

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். - (உபாகமம் 33:29).

இஸ்ரவேல் ஒரு தேசமாக உருவெடுத்திருப்பது மிகவும் அதிசயமான ஒரு காரியமாகும். இஸ்ரவேலை அழித்து விடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அநேகர் இந்த சிறிய தேசத்தை சுற்றி இருந்தாலும் இந்த இஸ்ரவேல் தேசம் உருவாகி, இன்றும் ஜொலித்துக் கொண்டிருப்பது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகளாக இருக்கின்றன என்பதற்கான அடையாளங்களாக திகழ்கின்றன. இந்த இஸ்ரவேல் தேசம் எப்படி உருவானது என்பதைக் குறித்தும், அது உருவானப்பின் அதன் மேல் யுத்தம் செய்ய வந்த நாடுகள் எப்படி தோற்றுப் போனார்கள் என்பதைக் குறித்தும் நாம் காணப் போகிறோம். நம் கண்களுக்கு அது அதிசயமாக தோன்றினாலும், தேவனுக்கு அது கூடாத காரியமல்லவே! 

கி.பி. 70 நூற்றாண்டில் தீத்து ராயன் என்னும் ரோம அரசனால் எருசலேம் பிடிபட்டு, எருசலேமிலிருந்த ஆலயம் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி நிர்மூலமாக்கப்பட்டு, அங்கிருந்த யூதர்கள் உலகத்தின் எல்லா மூலைகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். அவர்கள் போன நாடுகளில் அவர்களுக்கு நிம்மதியில்லை. எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் பாடுகளை அனுபவித்த அவர்கள், தங்கள் ஆண்டவர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தில் தங்களை கொண்டு போய் குடியேற்றுவார் என்று நம்பிக்கையுடனே அந்நிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்கள். 

அவர்களது நம்பிக்கையும் ஜெபமும் வீணாகாதபடி, தேவன் கிரியை செய்ய ஆரம்பித்தார். இஸ்ரவேல் நாடு பிறக்க, இரண்டு உலக மகா யுத்தங்கள் நடைபெற வேண்டியதாயிருந்தது. முதல் உலக மகா யுத்தத்தினால் யூத ஜனங்கள் பலஸ்தீனா நாட்டில் போய் குடியேற ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அது எப்படி என்றுப் பார்க்க போகிறோம். . டாக்டர் செய்ம் வீஸ்மேன் (Dr. Chaim Weizman) என்ற யூத இராசாயன விஞ்ஞானி ஸ்விட்சர்லாண்டு நாட்டில் ஒரு கல்லூரியில் பணியாற்றி வந்தார். ஆனால் திடீரென்று 1904ம் ஆண்டு அப்பணியை விட்டுவிட்டு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் பேராயராக பணியாற்ற துவங்கினார். அதே சமயம் சொந்தமாக, சோள வகைகளிலிருந்து அசிட்டோன் என்னும் மருந்து செய்வதைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து வந்தார். 

அசிட்டோன் என்னும் மருந்து கப்பல்களிலுள்ள பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாக இருந்து வந்தது. இது ஐரோப்பாவில் வளர்ந்த வந்த ஒரு வகை மரத்திலிருந்து உண்டாக்கப்பட்டது. 1914ம் வருடம் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கி, அது உலக மகா யுத்தமாக மாறிவிட்டது. அதனால் ஐரோப்பாவிலிருந்து அந்த மரங்களை கொண்டு வர வழியில்லை. அதினால் அசிட்டோன் செய்வதும் நிறுத்தப்பட்டது. பீரங்கிகளுக்கு வேண்டிய குண்டு மருந்து இல்லாதபடியால் இங்கிலாந்து திகைத்து, எங்கே யுத்தத்தில் தோற்று விடுவோமா என்று பயந்தது. 

இதற்கிடையில் செய்ம் வீஸ்மானுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பாதுகாப்பு மந்திரி வீஸ்மானிடம் 'அசிட்டோன் மருந்து பெரிய அளவில் செய்து தர முடியுமா' என்று கேட்டார். வீஸ்மான் அதற்கு போதிய அளவு சோளமும் தொழிற்சாலையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்து தருவதாக கூறினார். அப்படியே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலிருந்தும் வேண்டிய சோளம் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகளும் இயங்கின. வேண்டிய அளவு அசிட்டோன் மருந்தை வீஸ்மான் தயாரித்துக் கொடுத்தார். பிரிட்டன் யுத்தத்தில் ஜெயித்தது. அப்பொழுது இங்கிலாந்தின முதல் மந்திரி லாயிட் ஜார்ஜ். வெளிநாட்டு காரியதரிசி ஜேம்ஸ் பால்போர். 

யுத்தத்தில் ஜெயம் பெறுவதற்கு முக்கிய காரணமாயிருந்த செய்ம் வீஸ்மானுக்கு நல்ல வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணி, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர். அவர் யூதர்கள் பலஸ்தீனாவில் வந்து குடியேற அனுமதிக்கப்பட வேண்டுமென்றார். அப்படியே மந்திரி சபையின் ஒப்புதலின் பேரில் வெளிநாட்டு காரியதரிசியாகிய ஜேம்ஸ் பால்போர் ஒரு பிரகடனம் 9.12.1917ல் வெளியிட்டார். அதன் சாரம்சம் யூதர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்து பலஸ்தீனாவில் வந்து தங்கி தங்களுக்கு அங்கே சொந்த வீடு கட்டி குடியிருப்பதற்கு பிரிட்டனுக்கு ஆட்சேபணை இல்லை என்பதே. அச்சமயத்தில் பலஸ்தீனாவின் நிர்வாக பொறுப்பு பிரிட்டனிடம் இருந்து வந்தது. அதனால் அதற்கு பால்போர் பிரகடனம் என்ற பெயரும் உண்டானது. 

இந்த பிரகடனத்திற்குப் பின் யூதர்கள் பலஸ்தீனாவில் வந்து சேர ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாயிருப்பதால் அதற்கு முன் யூதர் யாவரும் திரும்ப பலஸ்தீனா தேசத்தில் வந்து சேர வேண்டும் என்றும் இருப்பதால் யூதர்கள் சேர துவங்கினாலும், அவர்களில் பலர் அதிக அசதியாயிருந்தபடியால், அவர்களுக்கு உணர்வு உண்டாக்க ஆண்டவர் இரண்டாவது உலக மகா யுத்தத்தை அனுமதித்தார்.

இஸ்ரவேல் என் ஜனமே என்றும் 
இடறிட வேண்டாம் 
யெகோவா உன் தெய்வமானால் 
 ஏதும் பயம் வேண்டாம் . 

ஓங்கும் புயமும் பலத்த கரமும் 
உன் பக்கமேயுண்டு 
தாங்கும் கிருபை தயவு இரக்கம் 
தாராளமாயுண்டு 

ஜெபம் 

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்களுக்காக உண்டு பண்ணியிருப்பதை எங்கள் கண்கள் காணவுமில்லை, காதுகளால் கேட்கவுமில்லை என்ற வார்த்தையின்படி, இஸ்ரவேலருக்காக நீர் கொண்ட வைராக்கியமும், முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த வாக்குதத்தத்தின்படியும், இஸ்ரவேலரை உமக்காக தெரிந்து கொண்டு, அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கென்று ஒரு நாட்டை ஆயத்தப்படுத்தி, அவர்களை அங்கு கொண்டு சேர்க்க வல்லவராயிருக்கிறீரே உமக்கு நன்றி. எருசலேமே உன்னை நேசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்ற வார்த்தையின்படி நாங்கள் எருசலேமையும், இஸ்ரவேலரையும் நேசிக்கிறோம் தகப்பனே. அவர்களை இன்னும் ஆசீர்வதித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். 

பாகம் இரண்டு  

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். - (உபாகமம் 33:29).

முதலாம் உலக மகா யுத்தம் நடைபெற்றதில் இஸ்ரவேல் இங்கிலாந்திற்கு உதவியதால், இஸ்ரவேலருக்கு தனி நாடு வழங்கப்பட்டது. அதன்பின் நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இஸ்ரவேலருக்கு நடந்ததைக் குறித்துப் பார்க்கப்போகிறோம்.

 இந்த யுத்தம் இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும்தான் துவங்கியது. ஆனால் கடைசியில் உலகிலுள்ள 57 பெரிய நாடுகள், இதில் சேர்ந்து நஷ்டப்பட துவங்கின. இந்த யுத்தத்தில் நடந்த துக்ககரமான காரியம் என்னவென்றால், ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் அவன் ஆதிக்கத்திற்குள் இருந்த நாடுகளிலிருந்த யூதரையெல்லாம் பிடித்து, திறந்த வெளி ஜெயிலில் போட்டு பூட்டி, ஆடையின்றி, உணவு, தண்ணீர் கூட இல்லாமல் கடுங்குளிரில் வைத்து சித்திரவதை செய்து, அவர்களை நீண்ட குழிகளை வெட்டச் செய்து, அதன் பக்கத்தில் வரிசை வரிசையாக யூத ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் நிறுத்தி, ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தி, அப்படியே குழிகள் நிறையும் வரை சுட்டுக் குவித்து மண்ணை போட்டு மூடினான். அநேகரை குப்பைகளை எரிக்கும் கிடங்குகளில் போட்டு எரித்து, இவ்விதமாய் ஆறு மில்லியன் அல்லது 60 இலட்சம் யூதரை கொன்று குவித்தான். உலகமே யூதருக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு பிரமித்து, அவர்கள் மேல் பரிதாபப்பட்டது. இன்றும் எருசலேமில் உள்ள புலம்பலின் சுவர் அருகே ஆறு கறுப்பு நிறத்தில் பெரிய விளக்குகள் வைக்கப்பட்டு, தாவீதின் நட்சத்திரம் அதன் மேல் வைக்கப்பட்டு, மரித்த அறுபது இலட்சம் யூதர்களை நினைவுகூரும் பொருட்டு, இரவும் பகலும் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

இதன்பிறகுதான் பிறநாடுகளிலிருந்த யூதர்களுக்கு தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும், அல்லது தாங்கள் திரும்ப குடியேற அனுபமதிக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனா நாட்டை தங்களுடைய நாடாக்கி, அதில் போய் குடியேறிவிட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. 

1946ம் ஆண்டு, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்தவுடன் பலஸ்தீனா நாட்டுக்கு. அதற்கு வடக்கேயுள்ள நாடுகளான ரஷ்யா, போலண்டு. ஜெர்மனி முதலிய நாடுகளிலிருந்து பெரும்பான்மையான மக்கள் இஸ்ரவேலுக்கு வந்து சேர்ந்து தேவ தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள். 'அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்'. - (எரேமியா 3:18) 

இதற்குள் ஐக்கிய நாடுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1947 நவம்பர் மாதம் பலஸ்தீனா நாட்டில் யூதர்களுக்கு ஒரு பகுதியை சுதந்தர நாடாக பிரகடனப்படுத்தியது. அவர்கள் யூதருக்கு பிரித்து கொடுத்ததில் முக்கால் பாகத்திற்க்கு மேல் வனாந்தர பகுதியாய் இருந்தாலும் சுற்றிலுமிருந்த அரபிய நாடுகள் அதை எதிர்த்தன. என்றாலும் ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் மூன்றில் இரண்டு பாகம் யூதருக்கு சாதகமாக ஓட்டளித்ததால் யூதருக்கு ஒரு தனி நாடு என்ற தீர்மானம் நிறைவேறியது. 

இதனால் பிரிட்டன் பலஸ்தீனாவிலிருந்து தன் நிர்வாக பொறுப்பை விலக்கிக் கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தது. 1948ம் வருடம் மே மாதம் 14ம் தேதி இரவு 12 மணியுடன் தன் தொடர்பை நிறுத்தி, தன் படைகளையும் வாபஸ் பெற்றுக் கொண்டது. யூதர்கள் 1948ம் வருடம் மே மாதம் 14ம் தேதி மாலை நேரத்தில் அதுவரை பலஸ்தீனா தேசமாக இருந்தததை இஸ்ரவேல் தேசமாக மாற்றினர். அல்லேலூயா! 

இந்த புதிய நாட்டிற்கு செய்ம் வீஸ்மான் ஜனாதிபதியாகவும், டேவிட் பின்கூரியன் பிரதம் மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு, இஸ்ரவேல் தேசம் உருவானது. புதிய நாடு பிரகடனம் செய்யும் வைபவத்தில் புதிய பிரதம மந்திரி டேவிட்பென்கூரியன் எசேக்கியேலின் தீர்க்கதரிசன புத்தகம் 37ம் அதிகாரம் 1 முதல் 23 வசனங்களை வாசித்து, 'இன்று இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று' என்றார். ஆமென் அல்லேலூயா! 

'அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்' (எரேமியா 3:18) என்ற தீர்க்கதரிசனத்தின்படி இஸ்ரவேலர் தங்களுடைய தேசத்திற்கு திரும்பி வரத்தொடங்கினர்.

முதலாம் யுத்தம்: இஸ்ரவேல் தேசம் சுதந்தர தேசமாக பிரகடனப்படுத்தியவுடன் அதை சுற்றியுள்ள ஆறு நாடுகள் அதாவது, எகிப்து, யோர்தான், ஈராக், சீரியா, லெபனான்,மற்றும் சவுதி அரேபியா தங்கள் வீரர்களை இஸ்ரவேல் நாட்டுக்குள் பல இடங்களில் ஊடுருவ செய்து, இஸ்ரவேலுக்கிருந்த சொற்ப ராணுவத்தையும், தளவாடங்களையும் சிறு சிறு பகுதிகளாக பிரித்து விட்டனர். என்றாலும் இஸ்ரவேல் தன் உயிருக்காக போராடி எல்லா முனைகளிலும் எதிரிகளை பின்வாங்க செய்தனர். 1949ம் வருட ஆரம்பத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி டாக்டர் ரால்ப் பஞ்ச் இஸ்ரவேலுக்கும், லெபனான், யொர்தான், சீரியா முதலிய நான்கு நாடுகளுக்கும் ஒரு இடைக்கால யுத்த நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தினார். ஆனால் அந்த உடன்பாடு நிரந்தர சமாதானத்தை தரலில்லை. 1947லிருந்து 1949 வரை 6,000 இஸ்ரவேலர் உயிரிழந்தனர். இந்த யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் அரபியருக்கு ஒதுக்கப்பட்ட பூமியில் 112 கிராமங்களையும், 500 சதுர மைல் பரப்புள்ள நிலத்தையும் இந்த யுத்தத்தினால் இஸ்ரவேல் பிடித்துக் கொண்டது. 

இரண்டாம் யுத்தம்: 1949க்கும், 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்து தன் இராணுவ பலத்தை ரஷ்யாவின் உதவியுடன் மேம்படுத்திக் கொண்டு 1956 ஜூலை 26ம் தேதி இங்கிலாந்து நிர்வகித்து வந்த சூயஸ்கால்வாயை தேசிய மயமாக்கி, ரத்த சேதமின்றி கைப்பற்றிய காரணத்தினால், எகிப்து. சீரியா, லிபியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு அரபிய கூட்டு அமைத்து, சூயஸ் கால்வாய் வழி இஸ்ரேலிய கப்பல்கள் வர தடைவிதித்தும், இஸ்ரவேலின் தென் முனையிலிருந்து ஏலாத் துறைமுகத்திற்கும் கப்பல்கள் வராமல் தடுத்தும், போர் செய்தது. 

இஸ்ரவேல் தன் ராணுவத்தை பயன்படுத்தி, சீனாயிலிருந்த எகிப்தின் படைகளை அப்புறப்படுத்தி, சூயஸ் கால்வாயை தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. ஆனால் அமெரிககாவின் வற்புறுத்தலின் பேரில் தன் படைகளை அங்கிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. அதன் பின் 10 வருடங்கள் போர் ஓய்ந்திருந்தது. 

மூன்றாவது யுத்தம்: எகிப்து இஸ்ரவேலின் எல்லைப்பகுதியில் சீனாயில் 90,000 வீரரையும் 900 டாங்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டு, ஐக்கிய நாட்டுப் படையை மிரட்டி, தங்களுக்கு வழிவிடாவிட்டால் அப்படைகளையும் அதம் பண்ணுவோம் என்று மிரட்டியது. அதே சமயம் யோர்தானும், சீரியாவும் இஸ்ரவேலை தாக்க தயாராயின. இஸ்ரவேலர் யுத்தத்திற்கு செல்லுமுன் வேதத்தை வாசித்து ஜெபித்தார்கள். 

அவர்கள் வாசித்த வேத பாகம், உபாகமம் 20:3-4: 'இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்'. 

ஏறெடுத்த ஜெபம்: சங்கீதம் 35:1-2: கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்'. இவ்வாறு ஜெபித்ததை கர்த்தர் கேட்டார். உபாகமம் 20ல் கொடுத்த வாக்குத்தத்தையும் நிறைவேற்றினார். எப்படியென்றால் இஸ்ரவேல் ஆறே நாட்களில் எகிப்தின் பலத்த சேனையை முறியடித்தது. சீனாய் தீபகற்பத்தையும் முழுவதும் பிடித்து தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. பார்த்த இடங்களிலெல்லாம் எகிப்தின் தளவாடங்கள் நொறுக்கபட்டும், தீக்கிரையாகியும் கிடந்தன. இஸ்ரவேல், யோர்தான் பகுதிகளில் யோர்தானின் மேற்கு கரையையும் பிடித்துகொண்டது. மட்டுமல்ல, சீரியாவின் எல்லையில் கோலன் என்ற மலை தேசத்தையும் பிடித்துக் கொண்டது. அல்லேலூயா! 

இந்த யுத்தத்தில் கர்த்தர் இஸ்ரவேலுக்காய் யுத்தம் செய்தார் என்று இஸ்ரவேலர் தரப்பிலும், எதிரிகளின் தரப்பிலும் சாட்சி கூறப்பட்டது.  

 ஜெபம்  
எங்கள் அன்பின் நேச தகப்பனே, இஸ்ரவேல் என்னும் நாட்டை உருவாக்கி, அதன் மேல் உம் கண்களை வைத்து காத்து வருகிற நல்ல தெய்வமே, அதற்கு எதிராய் எத்தனை யுத்தங்கள் வந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து அந்த தேசத்தை காத்து, நீர் அந்த நாட்டிற்காக யுத்தம் செய்கிற தயவிற்காக உமக்கு நன்றி. இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம். இயேசுவை மேசியா என்று கண்டுக் கொள்ள அவர்கள் கண்களை திறந்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். 

பாகம் மூன்று 

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். - (உபாகமம் 33:29).

 இஸ்ரவேல் தேசம் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து, அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அந்த தேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ முறை பிரயத்தனம் பண்ணியும், 'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை. 

ஆறுநாள் யுத்தத்தில் யுத்தக்களத்தில் நடந்த அற்புதங்கள்: இஸ்ரவேல் வீரர் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார். 

இரண்டாவது வீரர்: இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர். 

மூன்றாவது வீரர்: இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.

 யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று. யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார். 

நான்காவது யுத்தம்: 1968க்கும், 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலின் எலலைப்பகுதி முழுவதிலும், மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும், இஸ்ரேலியர் சோர்ந்து போகும் வகையிலும் பலஸ்தீன கொரில்லாக்களும், சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தன . 

ஐந்தாம் யுத்தம்: யாம் கிப்பூர் என்பதற்கு பாவ நிவாரண பலி செலுத்தும் நாள் என்று பொருள். கர்த்தருடைய கட்டளைப்படி அந்நாளில் அக்டோபர் 6, 1973ம் வருடம் படைவீரர் உட்பட இஸ்ரவேலர் யாவரும் ஒரு வேலையும் செய்யாமல் அனுசரிப்பார்கள் என்று அறிந்து, எகிப்து திடுதிப்பென்று அதிகாலை 4 மணிக்கு 3000 டாங்குகளோடும், 2000 கன பீரங்கிகளோடும், 1000 ஆகாய கப்பல்களோடும், 6,00,000 வீரர்களோடும் சூயஸ் நகர் சமீபத்தில் சூயஸ் கால்வாயையும் அதற்கு வடக்கே ஒரு பகுதியையும் தாண்டி இஸ்ரவேலர் காத்து வந்த பகுதிக்குள் முன்னேறி விட்டனர். அதே சமயத்தில் சீரியாவும் பலத்த ராணுவத்துடன் வந்து கோலன் பகுதியில் தாக்குதல் நடத்தியது. 

முதலில் இஸ்ரவேல் ராணுவம் நிலைமையை சமாளிக்க அதிக கஷ்டப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு துணை செய்தததினால், போர்ட்செயிடை தன் வசப்படுத்தி, கெய்ரோவிற்கு 10 மைல் தூரமட்டும் எகிப்திற்குள் முன்னேறி விட்டனர். ஆனால் அதற்கு மேல் முன்னேற அமெரிக்க அனுமதி அளிக்கவில்லை. விட்டிருந்தால் எகிப்தையும் அவர்கள் கைப்பற்றியிருந்திருப்பார்கள்! 

இந்த சமயத்தில் இஸ்ரவேலர் ஆண்டவருடைய பாதுகாப்பு தங்களுக்கு அதிகமாக் இருந்ததென்று கூறினர். யுத்தத்தின் ஆரம்ப நாளில் எகிப்திய இராணுவம் இஸ்ரவேலை சுற்றிலும் வளைத்துக் கொண்டபோது, இஸ்ரேலிய வீரர் சிறு புதர்களுக்கு பின்னாலும், சாக்கு மண்ல் மூட்டைகளுக்கு பின்னாலும் ஒளிந்தனர். சிறிது நேரத்தில் திடீரென்று வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் இஸ்ரவேல் படைகளுக்கும், எகிப்திய படைகளுக்கும் இடையில் காணப்பட்டார். அவ்வளவுதான்! எகிப்தியர் பக்கமிருந்து வெடிசத்தம் நின்றது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு எகிப்தியர் ஓடினர். 

கோலன் குன்றுகள் மத்தியில் சீரியா 1200 டாங்கிகளை இஸ்ரவேலுக்கு எதிராக நிறுத்தியிருந்தது. அப்பகுதியை காக்க, இஸ்ரவேல் இரண்டு டாங்கிகளை மாத்திரமே நிறுத்தியிருந்தது, பாவ நிவாரண பலி செலுத்தும் அந்நாளில் இஸ்ரவேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சீரிய இராணுவம் என்ன காரணத்தாலோ முன்னேறாமல் அப்படியே நின்று விட்டது. அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஒரு இஸ்ரவேல் யூதர், அங்கு மிகப்பெரிய பழுப்பு நிறக் கை எதையோ தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி தனக்கு தோன்றியதாகவும், ஆண்டவர்தான் சீரிய துருப்புகள் முன்னேறாதபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்களையும் வெற்றிக் கொள்ள தேவன் இஸ்ரவேலருக்கு கிருபை பாராட்டினார். 

ஈராக் - குவைத் யுத்தம்: 1991அம் ஆண்டு மார்ச் மாதம் சில அமெரிக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தபோது, யூதர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென்று கொடுக்கப்பட்டிருந்த காஸ் மாஸ்க்குகளை உபயோகிக்காமல் உறையில் போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஏன் உபயோகிக்காமல் கட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில், ஆச்சரியத்தை உண்டு பண்ணினது. இராக்கியர் 39 ஸ்கட் ஏவுகணைகளை இஸ்ரவேலுக்கு எதிராக ஏவி விட்டனர். உபாகமம் 25:2-3 வசனங்களின்படி, 'குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்' இந்த வசனங்களின்படி யெகோவா நாற்பதாவது ஏவுகணையை இஸ்ரவேல் தேசத்தின் மேல் அனுப்பமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கட்டி வைக்கிறோம் என்பதே. 

நாற்பது அடிகள் வரை அடிக்கலாம் என்ற விதி இருந்தாலும், தவறுதலாக நாற்பது அடிகளுக்கு மேல் அடித்து விட்டால் நீசன் என்று எண்ணப்படுவானேன் என்று காலக்கிரமத்தில் 39 அடிகளோடு நிறுத்திக் கொள்வது பழக்கமாகி விட்டது, அதன்படி 2 கொரிந்தியர் 11:24ம் வசனத்தில் பரி.பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று கூறியிருக்கிறார். 

பிரியமானவர்களே, இஸ்ரவேல் தேசத்தை தேவன் இத்தனை உறுதியாக காத்து தம்முடைய வாக்குதத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றி இருப்பதைக் காணும்போது, நம் தேவன் எத்தனை அருமையானவர் என்று அவரை துதிக்காமல் இருக்க முடியுமா?

பிரியமானவர்களே, நாமும் கூட பரலோக கானானை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் அதை சென்று அடைய முடியாதபடி சத்துருவானவன் நமக்கு எதிராக எத்தனை போராட்டங்களை கொண்டு வந்தாலும், நாம் தேவனை உறுதியாக பற்றிக் கொண்டிருந்தோமானால், தேவன் எப்படி இஸ்ரவேல் தேசத்தை பாதுகாக்கிறாரோ அப்படியே நம்மையும் காத்து, நம்மை தம்மோடுக்கூட சேர்த்துக் கொள்வார். அவர் 'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' (யோவான் 14:3). என்று வாக்கு பண்ணியிருக்கிறாரே! அவர் அப்படியே நம்மை சேர்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! 

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு 
அவர் உன் துணையும் கேடகமானவர் . 
அவர் உன்னை விட்டு விலகுவதில்லை 
அவர் உன்னை கை விடுவதில்லை 
உள்ளங்கையில் வரைந்தவர் அவர் 
உன்னை என்றும் மறப்பதுமில்லை 

ஜெபம் 

எங்கள் அன்பின் தகப்பனே, இந்த நாட்களில் இஸ்ரவேல் ஒரு தேசமாக உருவானதையும், அதன் மேல் யுத்தங்கள் வந்தாலும் தேவன் அவர்களை பாதுகாத்து வழிநடத்தினதையும் அறிந்துக் கொள்ள கிருபை செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய எங்களையும், எங்களை மறுகரை கொண்டு சேர்க்கும்வதை கூடவே இருந்து வழிநடத்தப்போகிற தயவிற்காக உம்மை துதிக்கிறோம். இஸ்ரவேலின் தேவனே நீர் எங்களுக்கும் தேவனாக இருப்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். உம்மையே நாங்கள் நம்புகிறோம். நீர் எங்களை வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment