Search This Blog

Thursday, 13 February 2014

பண எல்லை

“உன் பணம் உன்னோடு நாசமாகக்கடவது.” – அப்போஸ்தலர் 8 : 20.

`புவி வெப்பமடைகிறது. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை’ என்று படித்திருக்கலாம். ஓசோன் என்பது ஒருவகை வாய்வு. நீல நிறமாக இருக்கும். மிகக் குறைந்த அளவில் சுவாசித்தாலே (0.01) தலைவலி, கண் எரிச்சல் உண்டாகுமாம். காற்றில் மிகக் குறைவான (0.000041) அளவே ஓசோன் இருக்கிறது. சூரியனின் புறக்கதிர்கள் நம்மைப் பாதிக்காதபடி இது காக்கின்றது. ஓசோனின் அளவு அதிகமானால் உலகம் காலி!

பணம் மனிதனுக்குத் தேவைதான். அளவுக்கு அதிகமாகப் பணம் சேர்ந்தால், சேர்க்க எண்ணினால், நம்மையே அழித்துவிடும், அதுவும் அழிந்துவிடும். பண பலத்தின் எல்லை பற்றி ஆதார வரி கூறுகின்றது. பிலிப்பி என்ற நகரில் பேதுருவும் யோவானும் திருப்பணி செய்து கொண்டிருந்தனர். இவர்கள் விசுவாசிகளின் மேல் கைகளை வைத்தனர், ஜெபித்தனர். புதிய விசுவாசிகள் தூய ஆவியானவரைப் பெற்றுக் கொண்டனர். இதை அறிந்தான் சீமோன் என்றவன். இவன் ஒரு மந்திரவாதி, ஜெபம் செய்தலை ஒரு மந்திரமாக நினைத்து, மிகுந்த பணத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலரிடம் வைத்தார். `நான் தலையில் கை வைக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் இறங்கிட’ எனக்கு அதிகாரம் கொடுங்கள் என்றார். `நீ பாவத்தில் அகப்பட்டிருக்கிறாய். உன் பணம் நாசமாகக் கடவது’ என்றார் பேதுரு. பணம் கொடுத்துப் பாவ மன்னிப்புப் பெற்றனர் மார்டீன் லுத்தர் காலத்தில். இந்தக் காலத்திலும், ஜெபம், சுகமளித்தல், ஆவியானவர் அபிஷேகம் போன்றவை கிறிஸ்தவ சபைகளில் சில விற்பனை செய்கின்றன. பணத்தால் நித்திய ஆசிகளை விற்கவோ வாங்கவோ முடியாது. பணம் பாதாளத்திற்குப் பாயலாம். வானவருக்கும் அருள் பெருகுதலுக்கும், ஆவியர் அருளப்படலுக்கும் பணம் பயன்படுவதில்லை. புரிந்து கொள்வோம். பணத்திற்கு ஓர் எல்லை இருக்கிறது. பணத்தினால், ஆவியானவரை விற்கிற ஊழியர்களை, ஊழியத்தளங்களை அடையாளம் காணுங்கள். இவற்றுக்கு விலகி நில்லுங்கள்.

மாசணுகாத பராபரனே! உம்மையும், உமது குமாரன் இயேசுவின் இரட்சிப்பையும் பணம் கொடுத்து வாங்கலாம் என்ற போலி திருப்தியை எம்மிடமிருந்து அகற்றிவிடும். இயேசு வழியே ஆமேன்.

No comments:

Post a Comment