Search This Blog

Monday, 17 February 2014

கலக்கினவர்கள்

“அவர்களை உட்காவலறையில் அடைத்து…” – அப்போஸ்தலர் 16 : 24

பவுலும் சீலா என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். `உட்காவலறை’ என்பது மிகவும் பத்திரமான அறை. இந்த அறையில் `தொழுமரம்’ என்ற ஒரு கொடுஞ்சாதனம் இருந்தது. சுவரில் இருந்து அரை வட்டமாக துளை இடப்பட்ட சாதனங்கள் நீட்டிக் கொண்டிருக்கும். குற்றவாளி தரையில் அமர வேண்டும். அவருடைய கைகளும் கால்களும் அரைவட்டங்களுக்குள் நுழைக்கப்படும். இதன் பின்பு மற்றொரு கட்டையில் அரைவட்ட கட்டை ஏற்கனவே இருக்கின்ற கட்டையில் வைக்கப்படும். இரண்டு கட்டைகளும் சங்கிலிகளால் கட்டப்படும். பவுல் சீலா இருவரும் கால்கள் தொழுமரத்தில் இணைக்கப்பட்டவர்களாக அசைய முடியாதபடி இன்னல் படுத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இருவரும் கடவுளைத் துதித்துப் பாடினர், ஜெபித்தனர். திடீரென நிலம் அதிர்ந்தது. சிறைக் கட்டிடத்தின் அஸ்திபாரம் கலகலத்தது. சிறைக் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. சிறைப்பட்டிருந்தோரின் கட்டுகள் அவிழ்ந்தன. இவர்கள் பாட்டையும் ஜெபத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சிறைத்தலைவன் ஆடிப்போனான். பவுலும் சீலாவும் பிற கைதிகளும் ஓடிப் போயிருப்பர் என்று நினைத்தார். தனக்குக் கிடைக்கப் போகும் தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்திடத் துணிந்தார். `நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்’ என்று சத்தமிட்டுக் கூறினார் பவுல். சிறைத்தலைவர் பவுலையும், சீலாவையும் வெளியே அழைத்து வந்தார். `நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார் சிறைத் தலைவர். அற்புத விடுதலையைக் கண்டார். தன்னையும் பல்வேறு கட்டுகள் வேதனைகள் சூழ்ந்திருப்பதை உணர்ந்தார். எனக்கும் விடுதலை வேண்டும் என்றார். `இயேசுவை விசுவாசி’ என்ற பதில் அவருக்குக் கிடைத்தது. ஏற்கனவே பவுலின் பரப்புரையால் பிலிப்பி நகர் மக்கள் கலங்கியிருந்தனர். இந்த அற்ப விடுதலை முழு நகரத்தையும் தலைகீழாகப் புரட்டியிருக்கும். `இயேசு கிறிஸ்துவை விசுவாசி. நீயும் உன் குடும்பமும் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்ற செய்தி நகரம் முழுவதும் எதிரொலித்திருக்கும், கலக்கியிருக்கும். விடுதலைச் செய்திக்கு சிறைச்சாலை அற்புதம் ஒரு சாட்சியாக அமைந்தது. நீங்களும் விடுதலை பெறுங்கள். எத்தனை சிறைகள், எத்தனை தாழ்ப்பாள்கள், எத்தனை தொழு மரங்கள், எத்தனை உட்காவல்கள், எத்தனை கட்டுகள் அத்தனையும்.. அத்தனையும் திறக்கும்! அசையும்! அதிரும்! மீட்பு, விடுதலை, இரட்சிப்பு, பாவமன்னிப்பு இவை சிறையிடப்பட முடியாது.

நித்திய நேசரே எமது கட்டுகளிலிருந்து எம்மை விடுவியும். நன்றி சத்திய வாசரே! ஆமேன

No comments:

Post a Comment