Search This Blog

Tuesday, 11 February 2014

கடவுளை எப்படி அறிந்து கொள்ளலாம்?

கடவுளை எப்படி அறிந்து கொள்ளலாம்?

இது இயேசு கிறிஸ்துவை அறியாத நண்பர்களுக்கான ஒரு பதிவு, இந்நேரமே கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள், அவரை அறிந்துகொள்ள இச்செய்தி உங்களுக்கு வழிகாட்டும்.

சரி, கடவுளை அறிந்து அவரோடு அன்பான உறவொன்றை ஏற்படுத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும்? அனுதினமும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள தியானிக்க வேண்டும், தற்போது நாமிருக்கும் நிலையைக் காட்டிலும் குணநலன்களில் சிறக்க வேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் நற்பணிகளை செய்து வாழ வேண்டும்...

இவ்வாறு பலர் பல விதமாக கூறுவார்கள். ஆனால் இவை எதுவுமே அதற்கான தீர்வு அல்ல. வாழ்வின் உண்மைப் பொருளை இயேசு நமக்கு விளக்கிச் சொல்லியுள்ளார். கடவுளை அறிந்து கொண்டு, அவரை சொந்தங் கொண்டாட அவர் கூறின வார்த்தைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

1. கடவுள் உங்களை நேசிக்கிறார், உங்கள் வாழ்விற்கு நல்ல திட்டத்தை வைத்திருக்கிறார். கடவுள் தான் உங்களை படைத்தவர். அது மட்டுமல்ல, உங்களை அளவிள்ளாமல் நேசிப்பவர். இந்த நேரத்தில் நீங்கள் அவரை அறிந்து கொள்ள விரும்புகிறார், பரலோகத்தில் அவரோடு நீங்களும் நிலைத்து வாழ வேண்டுமென்பது அவரது ஆவலாய் இருக்கிறது. இச்சித்தத்தை தெளியப்படுத்த நம்மிடம் வந்தார் இயேசு. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என தன்னைக் குறித்து இயேசு ஒருமுறை சொன்னார். நாம் கடவுளை அறிய, அவரை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நம்மிடத்தில் வந்தவர் இயேசு. அவரே நம் வாழ்விற்கு பொருளையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தைச் சொன்னவர். ஏன் நம்மால் கடவுளை கிட்டிச் சேர முடியவில்லை?

2. நாம் அனைவரும் பாவிகள், நமது பாவங்களே நமக்கும் நம்மை படைத்தவருக்கும் பிரிவினை உண்டாக்குகிறது. இப்பிரிவை நம்மால் மனதார உணர முடியும். நமது வாழ்நாட்களில் பாவங்களைச் செய்து நம்மைச் சீரழித்துக் கொள்கிறோம். நமக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி நம் பாவச் செயல்களே என்பதில் சந்தேகம் தேவையில்லை. "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்". நமக்கும் நம்மை படைத்த கர்த்தருக்கும் இடையே உள்ள எல்லா போராட்டங்களும் இப்பாவங்களின் நிமித்தமே. இதற்கு நமது மனசாட்சியே சாட்சிக் கொடுக்கிறது. இருந்தாலும், கர்த்தரை கிட்டிச் சேர நாம் முயற்சி செய்யாமல் இருப்பதில்லை. அவரது மனதை கொள்ளையிட நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தைச் சேர்க்கிறோம். ஆனால் இம்முயற்சி பயனற்றது. எத்தனை புண்ணிய காரியங்களைச் செய்தாலும் நாம் செய்த பாவங்கள் பாவங்களே. பாவங்களை மறைக்க இப்புண்ணிய காரியங்கள் உதவாது. இப்பாவத்தை எப்படி போக்க முடியும்?

3. இயேசு நம் பாவங்களை போக்கினார், அவரால் நாம் கடவுளை அறியவும், அவருடன் சொந்தங் கொள்ளவும் தகுதி அடைந்திருக்கிறோம். நமது பாவங்களுக்கு உரிய தண்டனை உண்டு. "பாவத்தின் சம்பளம் மரணம்" என வேதம் கூறுகிறது. கடவுளோடு நமக்குள்ள உறவு முற்றிலும் துண்டிக்கப்பட வேண்டும், இதுவே நமது பாவங்களுக்குரிய தண்டனை. இச்சாபத்தில் இருந்து நம்மை நீக்க ஒரே வழி தான் உண்டு. நமக்குப் பதிலாக நமது ஆக்கினைத் தீர்ப்பை இன்னொருவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நமது பாவத்திற்கான இந்த நிவர்த்தியை எந்த மனிதனும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களும் பாவிகளாக இருக்கின்றனர். தன்னிடத்தில் பாவத்தை வைத்துக் கொண்டு தானே தண்டனை பெற ஏதுவாயிருக்க, எந்த மனிதனும் மற்றவரின் தண்டனையை ஏற்க தகுதியற்றவன். எனவே நமக்காக தேவ குமாரன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்தார். முற்றிலும் பாவமில்லாத தூய வாழ்வை நடத்தினார். பொய்குற்றம் சாட்டப்பட்டு, எல்லாரும் கைவிடப்பட்டவராய், சிலுவையில் அறையப்பட்டார். "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" என சத்தமிட்டு தன் ஜீவனையும் நமக்காக விட்டார். அவரது சிலுவை மரணத்தின் போதே நம்மேல்
விதிக்கப்பட்ட சாபம் ஒழிந்தது. அதன் அத்தாட்சியாக, சாவை வென்று உயிர்த்தெழுந்து தன் வார்த்தைகளின் உண்மையை காட்டினார். அவராலே அன்றி நமக்கு இரட்சிப்பு இல்லை. இதனையே, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்", "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" என பல இடங்களில் வேதம் திட்டமாய்ச் சொல்கிறது. எனவே, நம் பாவங்கள் மன்னிக்கப்பட, கடவுளை அறிந்து அவரைச் சொந்தங் கொள்ள நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும். இயேசு சொல்கிறார், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்". உங்கள் மேல் அன்பு கொண்டு உங்களுக்காக மரித்தவர் இயேசு. இவ்வேளையில் அவர் உங்களை அழைத்திருக்கிறார். கடவுளோடு நித்திய உறவு கொள்ள, இயேசு கிறிஸ்து உங்களுக்காக செய்த எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து, மனப்பூரவமாக விசுவாசியுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக் கொள்வீர்களா?

4. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுதல்.
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என வேதம் கூறுகிறது. நாம் நமது விசுவாசத்தினால் இயேசுவானவரை ஏற்று கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் என்ன? அவரே தேவ குமாரன், என் பாவங்களை சுமந்து தீர்த்தவர் என விசுவாசித்து, நமது வாழ்வை அவரது கரங்களில் அர்ப்பணிக்க வேண்டும். இவ்வேளையில் இயேசு உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அவர் உங்களுக்கு விடுத்த அழைப்பின் வரிகள் இங்கே, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்". நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கத் தயாரா? இயேசுவுக்கென்று உங்களை ஒப்புக் கொடுக்க, நேர்த்தியான வார்த்தைகளோ, சடங்காச்சாரங்களோ முக்கியமல்ல. அவர் உங்கள் உள்ளத்தையே பார்க்கிறார். 

உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட அறியாவிட்டால், கீழுள்ள சிறு ஜெபத்தை சொல்லி பிராத்தியுங்கள்.
"இயேசுவே, நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன், என் வாழ்வில் வாரும். எனக்கு இரட்சிப்புண்டாக சிலுவையில் மரித்தீரே, அதற்காக உமக்கு நன்றி
 சொல்கிறேன். உம் ஒருவராலேயே என் பாவங்களை நீக்கி என் வாழ்வை புதிதாக்க முடியும். என்னை மன்னித்து, எனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இவ்வேளையில் என் வாழ்வை உம் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். உம் சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றும். ஆமென்."

உங்கள் வாழ்வில் அவரை நீங்கள் மனப்பூர்வமாக, உண்மையாக இவ்வேளையில் அழைத்திருந்தால், அவர் சொன்னபடியே உங்கள் வாழ்வில் இப்போது பிரவேசித்து இருக்கிறார். கடவுளோடு ஒரு தனிப்பட்ட அன்பான உறவை இவ்வேளையில் நீங்கள் தொடங்கிவிட்டீர்கள். முற்றிலும் புதிதான வாழ்வை தொடங்க ஆயத்தமாயிருக்கிறீர்கள், இனி, அன்றாட வேதம் வாசித்து, ஜெபித்து, கர்த்தரை அறிந்து அவருக்குள் வளருங்கள். ஊழியத்திலும், விசுவாச சபை கூடுதல்களிலும் தவறாமல் பங்கு பெறுங்கள்.

No comments:

Post a Comment