(மாற் 8:24) அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
பெத்சாயிதா எனும் ஊருக்கு இயேசு சென்றபோது, பார்வையற்ற ஒருவரை, இயேசுவிடம் அழைத்து வந்து, தொட்டு சுகமாக்கும்படி சிலர் வேண்டிக்கொண்டனர். அவர் பார்வையற்ற அம்மனிதனைத் தொட்டு, கண்களில் உமிழ்ந்து, எதையாகிலும் காண்கிறாயா? என்று கேட்டார். மேற்காணும் வசனத்தில் வாசிக்கிறோம்.. "அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்" என்பதாக.
நடக்கிற மனிதர் சுற்றிலும் இருந்ததை உணரமுடிந்த அவரால், அம்மனிதரை நடக்கின்ற மரங்களாகவே பார்க்கும் குழப்பமே மிஞ்சியது. இங்கே சுகம் கொடுக்க விழைந்த இயேசு ராஜாவின் வல்லமையில் எவ்வித சந்தேகமும் இல்லை. "அவன் ஏறிட்டுப்பார்த்து" என்கிற அவனது முயற்சியில்தான் குழப்பம் விளைந்துவிட்டது.
இப்போது அவனது வாழ்வில், கிறிஸ்துவின் கிரியையைக் காண்போம். "பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்." என்ற 25ம் வசனத்தைப் படித்துப்பாருங்கள்! "ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்" என்பதினை தியானித்தால், ஆம், மனித முயற்சியில் குழப்பமே மிஞ்சும்; தெளிவு இருக்காது என்பதில் ஐயமில்லை! தேவனது கிரியை மனிதரில் சரியாக நடக்கும்போது, வாழ்வே தெளிவாகும் என்பதிலும் மாற்றுக் கருத்தேயில்லை! தேவனது கிரியைகள் நம்மில் துவங்க அவர் பாதத்தில் அமைதலாய்க் காத்திருப்போம்! அதிசயம் காண்போம்! . ஆமென்!!
ஜெபம்
அன்புத் தகப்பனே! எங்கள் முயற்சியில் குழப்பமே மிஞ்சும்! உமது கிரியைகளிலோ தெளிவு உண்டாகும். எமது வாழ்வில் தெளிவு உண்டாகும்படி, உமது கிரியைகள் எம்மில் இப்போதே துவங்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால், ஆமென்!!
No comments:
Post a Comment