கர்த்தர் நம்மிடம் விரும்புவது, சாட்சி சொல்லுவது அல்ல, மாறாக சாட்சியாக வாழ்வதே! கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவனே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போல, நம் பார்வை மனதுருக்கம் நிறைய வேண்டும். நம் பேச்சு சுத்தமாயும், பிறர் காயம் ஆற்றுவதாயும் இருக்க வேண்டும். நம் செயல்கள் அனைத்தும் தேவனுக்கு மகிமை உண்டாக்குவதாக இருக்கவேண்டும். ஒருவர் கர்த்தரின் சாட்சியாக வாழ (யோவான் 15 ம் அதிகாரத்தில்) மூன்று நிலைகள் கூறப்பட்டுள்ளது.
அ) நாம் கொடிகளாக இருக்கிறோம், கிறிஸ்து எனும் மெய்யான திராட்சை செடியோடு இணைந்திட வேண்டும். (15:5)
ஆ) நாம் கர்த்தரின் சீஷர்கள், கிறிஸ்துவை குருவாகக் கொண்டவர்கள். அவரே நம்மை வழி நடத்துபவராக இருக்க வேண்டும். நாம் அவர் காட்டும் வழியில் நடப்போராக இருக்கவேண்டும். (15:8)
இ) மேற்கண்ட இரண்டு நிலைகளில் நாம் நிலைத்திருக்கும்போது, நாம் இயேசு கிறிஸ்துவின் சிநேகிதர் என உயர்வுபெறுவோம். அவர் பரம ராஜ்ஜியத்துக்கு அடுத்த அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார். (15:14)
நாம், கர்த்தரின் சாட்சிகளாக வாழமுடியாதபடி அனேக தடைகள் (இச்சைகள், பாவங்கள், பிரச்சனைகள்) நம்மை பெலவீனப்படுத்தும். ஆனால் கர்த்தர் நம்மை பெலப்படுத்தி வழி நடத்துவார்.
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப் 1:8) ஆமென்!
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! இந்த உலகில் நாங்கள் வாழும் நாட்களெல்லாம் உமது சாட்சிகளாய் வாழ உதவிசெய்யும். பிறர் உம்மை அறிந்துகொள்ள, எங்களைப் பயன்படுத்தும். அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்!
No comments:
Post a Comment