1தீமோத்தேயு1:12-16
“முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்!” – எபேசியர் 2 : 13
இம்மாதத்தின் இறுதி நாளை இன்று சந்திக்கிறோம். இறுதியான எதுவும் அற்பமானதன்று! கடைசிக் குழந்தையைச் செல்லப்பிள்ளை என்பர். வாழ்க்கையில் இறுதியிடம் வகிக்கும் எதுவும் முதன்மையானதைப் போலவே மிகவும் முக்கியமானது. முந்தினவை(கடந்தவை)களைத் திரும்பிப் பார்க்கச் செய்வது. இன்றைய சிந்தனை வாக்கியமும் அதைத்தான் செய்கிறது.
கிறிஸ்துவின் பிள்ளைகளாயிருக்கிற நாம், நம்முடைய கடந்த கால வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்ப்பது நல்லது. அது நம் சிந்தனைகளைச் சீர்படுத்தி, கர்த்தருக்கு நாம் எப்பொழுதும் நன்றியுடையவர்களாயிருக்கும்படிச் செய்யும். `கடந்துவந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன், கண்ணீரோடு கர்த்தாவே, நன்றி சொல்கிறேன்!’ என்ற ஒரு பாடல் உண்டு. 1 தீமோத். 1:12-16ல் பவுல் எழுதுகிறார், ‘முன்னே அறியாமை, அவிசுவாசம் இவற்றால் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்.’ பாவிகளில் முதன்மையான பாவியாகிய என்னை இரட்சிப்பதற்கென்றே உலகுக்கு வந்த கர்த்தராகிய இயேசு என்னை உண்மையானவன் என்று எண்ணி, இந்த ஊழியத்துக்கு ஏற்படுத்தினார். அவரைத் தோத்தரிக்கிறேன். எதிர்கால விசுவாசிகளுக்கு நான் மாதிரியாகும் பொருட்டு, அவர் தமது நீடிய பொறுமையை என்மீது காண்பிக்குமளவுக்கு நான் (அவரிடத்தில்) இரக்கம் பெற்றேன் என்கிறார். என்ன அருமையான வாக்குமூலம்? தன்மீது கர்த்தர் கொண்டுள்ள கிருபைக்கு நன்றி செலுத்திய பவுல், தனது கடந்த கால வாழ்க்கையின் அவலங்களோடு இறைக் கிருபையை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
உயர்ந்த வாழ்க்கை வாழுகிறவனைக் கவனிக்கும் ஒருவன் பொறாமையால் மனம்புழுங்குகிறான். தன்னை ஆசீர்வதித்துப் பாதுகாத்துவரும் ஆண்டவரின் கருணையை உணராமற் போகிறான். தன்னைவிடத் தாழ் நிலையிருக்கிறவனைக் காண்கிறவனோ, அவனிலும் தன்னைப் போல உயர்த்தி வைத்திருக்கும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறான். பவுல் முந்நாளின் தனது சொந்தக் கேடான நிலையை இன்றைய கிருபையுடன் ஒப்பிட்டுப் பார்த்ததினால்தான் அவரால் கர்த்தருக்கு நன்றி செலுத்த முடிந்தது!
இதைத்தான் இன்றைய தியான வசனத்தில், முன்னே தூரத்திலிருந்த நீங்கள் இப்போது கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் என எபேசு சபை மக்களுக்கு எழுதுகிறார். நாமும் அப்படித்தான். நம்மைத் தொலைவிலிருந்து கிறிஸ்துவுக்கருகில் அழைத்து வந்த இயேசுவின் இரத்தத்துக்காக அவருக்குத் தோத்திரம் செலுத்துவோம்.
தூரமாகத் திரிந்த என்னைக் கிறிஸ்துவின் இரத்தத்தால் உமக்குச் சமீபத்தில் அழைத்துவந்த கர்த்தாவே, உமக்கு நன்றி. பவுலைப்போலக் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றி வாழும் பண்பை எனக்குத் தந்தருளும்.
No comments:
Post a Comment