அப்போஸ்தலர் 8 :26-33
“எத்தியோப்பியனாகிய ஒருவன் தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.” - அப்போஸ்தலர் 8 : 27, 28
அந்நியனாகிய எத்தியோப்பியன் ஒருவன் வேதம் வாசிக்கிறான். அதுவும் பயணத்திலிருக்கும்போது! இன்றும் கூடப் பரம்பரைக் கிறிஸ்தவர்களை விட, அந்நியராயிருந்து, இடையில் கிறிஸ்துவால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களே வேதாகமத்தை அதிகம் நேசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள்.
கறுப்பு இனத்தவராகிய எத்தியோப்பியர் நிர்விகாரமுடையவர்கள். ஆயினும் அவர்களிலும் கர்த்தரை நம்பினதினால் ஜீவன் தப்பினவர்களுமுண்டு. கர்த்தரை நம்புவதற்கு முன், முதலில் அவரைத் தேட வேண்டும். அப்படி ஒருவர் அவரைக் கருத்தாய்த் தேடினதினால், கடவுளின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம் ஒருநாள் அற்புதமாக அவருடைய கைக்குக் கிடைத்தது! அக்காலத்தில் குருக்களைத் தவிர வேறு எவருமே வேதப்புத்தகத்தைக் கண்டதில்லை. அவரது உள்ளம் மகிழ்ந்து துள்ளியது! வேதாகமத்தைச் சிரமப்பட்டு மொழிபெயர்த்து தன் மக்களுக்கெல்லாம் வாசிக்கும்படிக் கொடுத்தார். தானும் வேதாகமத்தை நாள்தோறும் பலமணிநேரம் ஆழ்ந்து படித்தபோது தான், அரிய போதனைகள் அதில் அடங்கியிருக்கக் கண்டார்.
மனிதனின் நற்கிரியைகளல்ல கடவுளின் கிருபை மட்டுமே மனிதனை எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கும். கடவுளின் திருமொழியாகிய பரிசுத்த வேதாகமம் மட்டுமே மனிதன் நடக்கவேண்டிய சரியான பாதையில் அவனை நடத்தும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் ஒருவன் வைக்கிற விசுவாசம் மட்டுமே கர்த்தருடைய சமூகத்தில் அவனை நீதிமானாக நிறுத்தும். இந்த மூன்று இரகசியங்களை ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தினார்.
இந்த சத்தியத்தைத் தனது போதனையின் மையக்கருத்தாகக் கொண்டே அவரது இறையியல் கோட்பாடுகளும், செயல்பாடுகளும் அமைந்திருந்தன. அவர்தான் ஜெபவீரன் (Knight of Payer), விசுவாசவீரன் என (Knight of faith) அழைக்கப்படும் பல்கலை முனைவராகிய மார்ட்டீன் லூதர். இன்று மார்ட்டீன் லூதர் இயற்றிய சிறிய ஞானோபதேசம் (சிறிய கத்தேகிஸ்மு) என்னும் அரிய நூல் தமிழ் மொழியில் முதன்முதல் அச்சேறிய நாளாகும்.
தந்தையாம் கடவுளின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம் வழியாக மைந்தனாகிய கிறிஸ்துவின் கிருபையைப் பெற்றுக்கொள்ள தூயாவியானவரின் அருட்கொடையாகிய விசுவாசம் என்னும் துடுப்பைப் பற்றிக்கொண்டு வாழ்க்கைக் கடலில் தொடர்ந்து பயணிப்போம்.
பரம தந்தையே, வேதவசனம் காட்டும் வெளிச்சத்திலே, என் மீட்பராகிய இயேசு கிறிஸ்து என்மீது வைத்துள்ள கிருபையின் இரகசியங்களைப் பரிசுத்த ஆவியானவர் வழங்கும் விசுவாசத்தினால் புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமேன்.
No comments:
Post a Comment