Search This Blog

Thursday, 18 September 2014

கசப்பான விரோதம்

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். - (யாக்கோபு 3:14). 

இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலை கர்த்தர் எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல சாமுவேல் தீர்க்கதரிசி, தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக் கொண்ட மக்கள், அருமையான குடும்பம், பிள்ளைகள், ஆட்சி, சமாதானமான நிலைமை எல்லாம் இருந்தும், சவுல் மனதில் கசப்புள்ளவராகவே மரித்தார். அவருடைய சரித்திரத்தை பார்த்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவரைப் போல மரித்தார். அவருடைய வாழ்வு நமக்கு படிப்பினையானது. 

தாவீது கோலியாத்தை தன் கவணில் உள்ள கல்லினால் கொன்று போட்டபோது, 'அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்ததுளூ அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்ளூ இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று' (1 சாமுவேல் 18:7-10) என்று வேதம் கூறுகிறது. என்று கசப்பும் பொறாமையும் சவுலின் உள்ளத்தில் வந்ததோ, அப்போதே ஒரு அசுத்த ஆவியும் அவர் மேல் வந்திறங்கிற்று என்று பார்க்கிறோம். 

பிரியமானவர்களே, நாமும் நம் குடும்பத்தாரிடமோ, கூட வேலை செய்கிறவர்கள் மேலோ, நம்முடைய சபையில் உள்ள யார் மீதோ இருந்த கோபம் தீர்க்கப்படாததினால் கசப்புக் கொண்டு உள்ளோமா? உடனே அதை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அசுத்த ஆவி நம்மில் குடி கொண்டு, நம்முடைய சமாதானத்தை கெடுக்கும் பயங்கரமான நிலைக்கு கொண்டு நம்மை கொண்டு சென்று விடும். 

அந்த பெண்கள் அப்படி பாடினதில் இருந்து சவுலின் நல்ல மனநிலை மாற ஆரம்பித்தது. தாவீது எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார். தாவீது இத்தனைக்கும் சவுலின் சேனைகளோடு சென்று பெலிஸ்தியரோடு போராடி வெற்றியைக் கொண்டு வந்தாலும், எல்லாவற்றையும் சந்தேகக்கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார். தன்னை தள்ளிவிட்டு இந்த தாவீது ஆட்சியை பிடித்துக் கொள்வானோ என்ற பயம் சவுலை ஆட்டிப்படைத்தது. . தன் சொந்த மகளையே தாவீதுக்கு கட்டிக் கொடுத்திருந்தாலும், அவரை கொல்லவே திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சவுல். எங்குச் சென்றாலும் அவரை துரத்தி, துரத்தி பிடிக்க ஆட்களை அனுப்பினார். சில வேளைகளில் எதிரிகளிடம் கூட சென்று அடைக்கலம் தேடினார் தாவீது. 

சவுலின் கடைசி காலம் வரைக்கும் அந்த கசப்பு மாறவே இல்லை. தாவீது நன்மைகள் செய்தாலும், அவரை எதிரியாகவே அவர் பார்த்து, தன் வாழ்நாளை முடித்தார். கசப்பு இருந்தபடியால் இரவும் பகலும் தூங்காமல் எப்படி தாவீதை பிடிக்கலாம் என்று திட்டம் போட்டு, போட்டு, தன் வாழ்நாளை வீணாளாக கழித்தார். எத்தனை பரிதாபம்! அவரால் தாவீதை அசைக்க முடிந்ததா? இல்லவே இல்லை. ஏனெனில் கர்த்தர் தாவீதோடே இருந்தார். 

பிரியமானவர்களே, நமக்கும் கூட யார்மீதாவது கசப்பு, வைராக்கியம் இருந்தால் அதை உடனடியாக கர்த்தரிடம் கொண்டு செல்வோம். உடனே அதை களைந்து போடுவோம். அதை வளருவதற்கு நாம் இடம் கொடுத்தால், அது நம் இருதயத்தை விஷமாக்கி, எதையெடுத்தாலும் சந்தேகக்கண்ணோடு நோக்கி, நம்முடைய சமாதானத்தையே குலைத்துப் போடும். பின் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாத கடின மனதாகி விடும். 

'உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்' கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அந்த கசப்பும் வைராக்கியமும் வேண்டாம். எந்த விரோதமும் வேண்டாம். எது நடந்தாலும் கர்த்தரிடம் சொல்லி விட்டு, நாம் அமைதலாய் செல்வோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! 

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் 
யார் மேலும் கசப்பு இல்லப்பா 
எல்லாருக்காகவும் மன்றாடுவேன் 

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 
கவலைகள் பெருகும்போது 
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 
வலப்பக்கத்தில் இருப்பதனால் 
நான் அசைக்கப்படுவதில்லை (தகப்பன்) 

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் யார் மேலும் கசப்பான வைராக்கியம் வைத்து எங்கள் மன நிம்மதியை இழக்காதபடி, எல்லாவற்றையும் நீர் பார்த்துக் கொள்வீர் என்று உம்முடைய சமுகத்தில் வைத்து விட கிருபை செய்யும். யாரையும் மன்னிக்கிற கிறிஸ்துவின் அன்பு எங்கள் உள்ளத்திலும் எப்போதும் இருந்து கசப்பிற்கு இடம் கொடாதபடி காத்துக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment