“சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.” (ஏசாயா 61:3)
சாம்பலுக்குப் பதிலாக சிங்காரம்: நாம் நொறுங்கிப் போயிருந்த அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்து, நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தராகிய இயேசு இரட்சகராக இந்த உலகிற்கு வந்தார். அவர் நமக்கு சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து, ஒருவருடைய வாழ்க்கையிலுள்ள சாம்பலைப் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் நீக்கி, நம் வாழ்க்கையை அலங்கரிப்பதற்காக வந்தார். ஏற்ற நேரத்தில் கிறிஸ்துவின் அலங்காரத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் அலங்காரமானதாக மாற்றப்படும். (பிரசங்கி 3:11)
ஆனந்த தைலம்: அழுகையின் பாதையின் வழியாக கடந்து செல்வது என்பது கடினமான ஒன்று. அது நம்முடைய நம்பிக்கையை துண்டித்து விடுகிறது. ஆனால் தேவன் நம் மீது ஊற்றும் இந்த ஆனந்த தைலமானது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. வல்லமையுள்ள ஒரு சேனையாக, உங்கள் நம்பிக்கையாக தேவன் உங்களுடன் நிற்பார். அவர் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தம் மகிழ்ச்சியை உங்கள்மேல் பொழிந்தருளுவார். அவர் உங்கள் இருதயத்தில் எழுந்தருளி, துயரத்திற்குப் பதிலாக ஆனந்தத்தைத் தந்தருளுவார். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக, அவர் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, உங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுவார். உங்கள் சத்துருக்கள் அனைவரும் சிதறடிக்கப்படுவார்கள்.
நீதியின் விருட்சங்கள்: சில விசேஷ மரங்கள் அதன் வலிமை மற்றும் வீரியத்திற்கு பெயர் பெற்றவை. அவை எப்போதும் பசுமையாக இருந்து, பல நூறு ஆண்டுகள் வாழக்கூடியவை. அவை வலுவாக வேரூன்றி, நீண்ட கிளைகளுடன் இருந்து, பல ஜீவன்களுக்கு அடைக்கலம் தருகின்றன. ஆம், நீங்கள் நீதியின் விருட்சங்கள் என்று அழைக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்வில் நீதி வரும்போது, ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றாக உங்களைப் பின் தொடர்ந்து வரும். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் இப்போது பலமான விதத்தில் நிலைநிறுத்தப்படும். தேவன் உங்களை நீதியின் மாளிகையாக மாற்றுவார்.
துதியின் வஸ்திரம்: உங்களை என்றென்றும் அழகுபடுத்தும் துதியின் வஸ்திரத்தைத் தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். துன்பங்கள், உபத்திரவங்கள் அனைத்திற்கு மத்தியிலும் அவர் உங்களை மகிமைப்படுத்துவார். உங்களுக்குள் காணப்படும் ஒடுங்கின ஆவியை எடுத்துப்போட்டு, துதியின் உடையால் உங்களை உடுத்துவிப்பார். அவரை நீங்கள் உங்களுடைய பரலோகப் பிதா என்று சொல்லி, அவரை துதிக்கும்படியாக அவர் உங்களை துதியின் உடையால் அலங்கரிப்பார்.
நீங்கள் நீதியின் விருட்சமாகவும், அலங்கார கிரீடமாகவும் மாறி, துதியின் உடையையும், ஆனந்த தைலத்தையும் அனுபவிக்கும் கிருபையை தேவன் தாமே இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் உங்களுக்கு தந்தருளுவாராக. இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
No comments:
Post a Comment