Search This Blog

Friday, 11 November 2011

எச்சரிப்பின் பிரசங்கம்

கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன். - (1 இராஜாக்கள் 22:14).

அமெரிக்க தேவ ஆலய ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. ஜெபத்தோடு ஆலய ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர் கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில் அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில் அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின் நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர் சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார், 'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார். பிரசங்கத்தை கேட்ட ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம் கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தப்பட்டார்.

புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்திய யோவானஸ்நானகனின் வனாந்திர பிரசங்கம் அநேகரை எச்சரித்து மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தியது. பதவிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஏன் தேச தலைவர்களையும் யோவான் ஸ்நானகனின் பிரசங்கம் அசைத்தது (லூக்காக 3:6-14). பாவத்தை கண்டித்து உணர்த்தும் பிரசங்கத்தில் மனுஷர்களுக்காக சிறிதும் முகதாட்சண்யம் பாராதவராய் தேவனுக்கேற்கும் விதத்தில் தெளிவாக பிரசங்கித்தார்.

கர்த்தராகிய இயேசுவும் எருசலேமின் தேவாலயத்தில் காணப்பட்ட அருவருப்புகளை கண்டு மென்மையாக அல்ல, சவுக்கை கையில் எடுத்து கொண்டு வேத வசனத்தின் உதவியோடு கடுமையாக சாடி பிரசங்கித்தார்.

இன்றைய நாட்களில் எச்சரிப்பின் செய்திகளை நம் திருச்சபைகளில் கேட்பது மிக அரிதாகி விட்டது. அப்படியே ஒரு போதகர் வேத வசனத்தை வைத்து எச்சரித்து பேசினால், என்னை மனதில் வைத்து தான் பேசுகிறார் என்று முகத்தை தூக்கி கொண்டு செல்லும் விசுவாசிகள் ஏராளம் சபைகளில் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சபையில் பிரசங்கி பீடத்தில் 'சுருக்கமாக பிரசங்கிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள்' என்று எழுதி வைத்திருந்தார்களாம். வேத வசனத்தை தூரமாக்கி, நடனத்தோடு பாடல்கள், ஆராதனைகள், வெளிநாடு சென்று வந்த சாட்சிகள் என இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவ வார்த்தைகளுக்கு இந்த நாட்களில் கொடுக்கப்படுவது இல்லை.

அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று'. - (2 தீமோத்தேயு 4:3-5) என்று கூறி எச்சரித்தார்.

லியானோர்ட் ரேவன்ஹில் என்ற ஊழியர் தன்னுடைய புத்தகத்தில் எழுதும்போது, 'என்றும் இல்லாத அளவு இன்றைய நாட்களில் எலியா பவுல், யோவான்ஸ்நானகன் போன்ற நியாயத்தீர்ப்பை எச்சரித்து பேச கூடிய போதகர்களும், ஊழியர்களும் மிக தேவை' என எழுதியுள்ளார். ஏனெனனில் பாவம் நிறைந்த உலகில், திருச்சபையும் அதன் போக்கிலேயே செல்கிறது. ஆகவே இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நமக்கு தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்போம். நம் சபைகளில் எச்சரிப்பின் வார்த்தைகள் முழங்கத்தக்கதாக ஜெபிப்போம். ஆமென் அல்லேலூயா!

கற்று தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
..

போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லி தருகின்ற
ஆலோசகர் நீர் தானையா

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, விசுவாசிகளை வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்து உணர்த்தும் போதகர்களை ஏராளமாய் எழுப்பும் தகப்பனே. பவுலைப்போலவும், யோவான் ஸ்நானகனை போலவும் தைரியமாக எச்சரித்து உணர்த்த அவர்களுக்கு பெலத்தை தாரும். உம்முடைய வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவத்தை கொடுக்கிறவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment