Search This Blog

Saturday, 12 November 2011

இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல்

பாகம் - 1

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.

வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.

குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.

வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.

இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!

ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)


செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்

..

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என்தன் துணை அவரே
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீரே எங்கள் யெகோவா ராப்பாவாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். அந்த நாளில் இயேசுகிறிஸ்து தம்மண்டை வந்த குஷ்டரோகியை முகம் சுளிக்காமல், மனதுருக்கத்தோடு தொட்டு சுகப்படுத்திய அற்புதத்தை நினைத்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. உம்மண்டை வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர், பாவ தொழுநோயால் வாடும் ஒவ்வொருவரையும் கூட தொட்டு சுகப்படுத்துவீராக. பாவ நோயிலிருந்து விடுதலை தருவீராக. மனிதனால் சுகப்படுத்த முடியாத எந்த வியாதியை சுகமாக்க வல்லவராகிய நீர் இந்த வேளையில் வியாதியினால் பாடுகள் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு உம்மண்டை வரும்போது அவர்களை தொட்டு குணமாக்கும்படி ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. உமக்கு சாட்சியாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


பாகம் - 2

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.

'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.

இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.

பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!

கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!

'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!

அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!

இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
..

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்களை கிறிஸ்து சுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது பாவ கறைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக. அந்த குஷ்டரோகியை கண்டு மனதுருகி, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்று அவனை தொட்டு சுகப்படுத்தின தேவன், இன்றும் மாறாதவராக அவரண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவராக, ஏற்று கொள்வதற்காக உமக்கு நன்றி. தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, 11 November 2011

எச்சரிப்பின் பிரசங்கம்

கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன். - (1 இராஜாக்கள் 22:14).

அமெரிக்க தேவ ஆலய ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. ஜெபத்தோடு ஆலய ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர் கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில் அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில் அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின் நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர் சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார், 'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார். பிரசங்கத்தை கேட்ட ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம் கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தப்பட்டார்.

புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்திய யோவானஸ்நானகனின் வனாந்திர பிரசங்கம் அநேகரை எச்சரித்து மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தியது. பதவிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஏன் தேச தலைவர்களையும் யோவான் ஸ்நானகனின் பிரசங்கம் அசைத்தது (லூக்காக 3:6-14). பாவத்தை கண்டித்து உணர்த்தும் பிரசங்கத்தில் மனுஷர்களுக்காக சிறிதும் முகதாட்சண்யம் பாராதவராய் தேவனுக்கேற்கும் விதத்தில் தெளிவாக பிரசங்கித்தார்.

கர்த்தராகிய இயேசுவும் எருசலேமின் தேவாலயத்தில் காணப்பட்ட அருவருப்புகளை கண்டு மென்மையாக அல்ல, சவுக்கை கையில் எடுத்து கொண்டு வேத வசனத்தின் உதவியோடு கடுமையாக சாடி பிரசங்கித்தார்.

இன்றைய நாட்களில் எச்சரிப்பின் செய்திகளை நம் திருச்சபைகளில் கேட்பது மிக அரிதாகி விட்டது. அப்படியே ஒரு போதகர் வேத வசனத்தை வைத்து எச்சரித்து பேசினால், என்னை மனதில் வைத்து தான் பேசுகிறார் என்று முகத்தை தூக்கி கொண்டு செல்லும் விசுவாசிகள் ஏராளம் சபைகளில் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சபையில் பிரசங்கி பீடத்தில் 'சுருக்கமாக பிரசங்கிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள்' என்று எழுதி வைத்திருந்தார்களாம். வேத வசனத்தை தூரமாக்கி, நடனத்தோடு பாடல்கள், ஆராதனைகள், வெளிநாடு சென்று வந்த சாட்சிகள் என இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவ வார்த்தைகளுக்கு இந்த நாட்களில் கொடுக்கப்படுவது இல்லை.

அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று'. - (2 தீமோத்தேயு 4:3-5) என்று கூறி எச்சரித்தார்.

லியானோர்ட் ரேவன்ஹில் என்ற ஊழியர் தன்னுடைய புத்தகத்தில் எழுதும்போது, 'என்றும் இல்லாத அளவு இன்றைய நாட்களில் எலியா பவுல், யோவான்ஸ்நானகன் போன்ற நியாயத்தீர்ப்பை எச்சரித்து பேச கூடிய போதகர்களும், ஊழியர்களும் மிக தேவை' என எழுதியுள்ளார். ஏனெனனில் பாவம் நிறைந்த உலகில், திருச்சபையும் அதன் போக்கிலேயே செல்கிறது. ஆகவே இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நமக்கு தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்போம். நம் சபைகளில் எச்சரிப்பின் வார்த்தைகள் முழங்கத்தக்கதாக ஜெபிப்போம். ஆமென் அல்லேலூயா!

கற்று தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
..

போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லி தருகின்ற
ஆலோசகர் நீர் தானையா

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, விசுவாசிகளை வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்து உணர்த்தும் போதகர்களை ஏராளமாய் எழுப்பும் தகப்பனே. பவுலைப்போலவும், யோவான் ஸ்நானகனை போலவும் தைரியமாக எச்சரித்து உணர்த்த அவர்களுக்கு பெலத்தை தாரும். உம்முடைய வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவத்தை கொடுக்கிறவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 10 November 2011

தேவன் நம் பட்சத்தில்

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். - யாக்கோபு 4:7.

ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார். அந்த மனிதன் அங்கு சுத்தம் பண்ண ஆரம்பித்தான். சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தவுடன் தன் கையில் உள்ள துடைப்பத்தால், அந்த சிங்கத்தை உசிப்பி விட்டவுடன், அந்த சிங்கம் அவனைப் பார்த்து ஒரு புர்ர்ர் என்று உறுமிவிட்டு, எழுந்து வேறிடத்தில் போய் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர், , இந்த மனிதன் மிகவும் தைரியம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், என்று எண்ணி, அந்த மனிதனிடம் போய், 'நீர் மிகவும் தைரியமாக இருக்கிறீர், தைரியமாக உள்ளே நுழைந்து அந்த சிங்கத்தை உசிப்பி விட்டீரே, அந்த சிங்கம் உம்மேல் பாய்ந்து கடிக்கும் என்று பயமில்லையா?' என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் 'இல்லை, நான் தைரியமானவன் இல்லை' என்றுக் கூறினான். அப்போது அந்த மனிதர், ‘ அப்படியானால் அந்த சிங்கம் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன், ‘நான் தைரியவானும் இல்லை, இந்த சிங்கம் பயிற்சி பெற்றதும் இல்லை, ஆனால் இந்த சிங்கம் வயதானது, அதற்கு பல்லும் இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாதுஎன்றுக் கூறி சிரித்தான்.

அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?

உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். என்னுடைய வேலையிடத்திலும், என் அதிகாரி காரணமில்லாமல் எனக்கு விரோதமாக இருந்தார்கள். ஆனால் விடாமல் அவர்களுக்காக அவர்கள் பெயரைச் சொல்லி ஜெபித்தேன். கர்த்தர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப்போட்டார். கர்ததர் என் வேலையிடத்தில் விசேஷித்த ஞானத்தைக் கொடுத்து என்னை உயர்த்துவதை என்னால் நன்கு உணர முடிந்தது. கர்த்தர் நம்மோடு பயங்கர பராக்கிரமசாலியாய், ஞானம் நிறைந்தவராய், எல்லாவற்றிலும் நம்மை வழிநடத்துகிறவராய் இருக்கும்போது நாம் எந்த மோசமான அதிகாரிக்கும் கலங்க தேவையில்லை. நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென் அல்லேலூயா! கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார். அவரை மாத்திரம் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள்.


உனக்கெதிராய் எழும்பும் ஆயதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே

ஜெபம்

எங்களை நேசிக்கும் நல்ல தகப்பனே, சத்துரு எங்களை விழுங்க வகைத்தேடும்போது எங்களை உம்முடைய மறைவிடத்தில் வைத்து காப்பவரே உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் பட்சத்தில் இருக்கும்போது எங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார் ஆண்டவரே! உங்களை தொடுபவன் என் கண் மணியைத் தொடுகிறான் என்றுச் சொல்லி எங்களை உம்முடைய கண்ணின் மணிப்போல காப்பவரே உம்மைத் துதிக்கிறோம். எங்கள் துதிகளை உம்முடைய நாமத்திற்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, 9 November 2011

உயர பறக்கும் அனுபவம்

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. - (1யோவான் 2:15).


தங்கள் வழக்கம் போல காட்டு வாத்துக்கள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஒரு V வடிவிலே பறப்பதை கீழே இருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அவைகள் இருந்தன.


அந்த வாத்துகளோடு பறந்து கொண்டிருந்த சேனி என்ற வாத்து கீழே பார்த்தது. அப்பொழுது வாத்துக்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை கண்டது. அங்கு அநேக வாத்துக்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் சோளத்தை ஆவலோடு பொறுக்கி தின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், அவைகளோடு தானும் சென்று உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த எண்ணம் வந்த உடன், அது மற்ற வாத்துக்கள் சொல்வது ஒன்றும் கேட்காமல், ஒரு டைவ் அடித்து, கீழே மற்ற வாத்துக்களுடன் சேர்ந்து கொண்டது. அவைகளோடு சேர்ந்து, சோளத்தையும், மற்ற தானியங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. அது நினைத்தது, 'திரும்ப என் கூட்ட வாத்துக்கள் வரும்போது, அவைகளோடு நான் சேர்ந்து கொள்வேன்' என்று.


கொஞ்ச மாதங்கள் கழித்து, அந்த கூட்ட வாத்துக்கள், மேற்கு நோக்கி வர ஆரம்பித்தன. கீழே இருந்த சேனி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, பறக்க ஆரம்பித்தது. ஆனால் அது அங்கு சாப்பிட்டு சாப்பிட்டு, எடை கூடி, அதனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்க முடியவில்லை. அது திரும்ப திரும்ப முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அதன் கூட்டத்தில் இருந்த பறவைகள், அதை தாண்டி பறந்து சென்று விட்டன. சேனி, 'நான் மறுபடியும் இவர்கள் வரும்போது எப்படியாவது அவர்களோடு சேர்ந்து விடுவேன்' என்று எண்ணி கொண்டது.


அடுத்த முறையும் வந்தது. சேனி அவர்களோடு பறக்க ஆசைப்பட்டது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை, காரணம் அதனுடைய எடையும், பறக்காமலேயே இருந்தபடியால் அதனுடைய சிறகுகள் சக்தியையும் இழந்து விட்டன. அதனுடைய தோழ வாத்துக்கள் ஒவ்வொரு முறையும் சேனியை அழைத்தபடி பறந்து கொண்டிருந்தன. ஆனால் சேனியால் திரும்பவும் பறக்கவே முடியவில்லை.


மாதங்கள் ஆக, ஆக தோழ வாத்துக்கள் கூப்பிட்டாலும், அது அதை கவனிக்காமற் போக ஆரம்பித்தது. அது தான் ஒரு முறை உயர பறந்த வாத்து என்பதை மறந்து, ஒரு பண்ணை வாத்தாகவே மாறி விட்டது.


நாமும் கூட உயர பறப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனோடு உறவாடும்படியாக, அவர் வரும்போது அவரோடு மறுரூபமடைந்து, பறப்பவர்களாக மாறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும்போது அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்போது நம் கவனம் உலக காரியங்களில் ஈடுபாடு கொள்கிறதோ, அப்போது, நாம் நம் தரிசனத்தை இழந்தவர்களாக, அவைகளிலேயே சிக்கி கொள்கிறோம். மீண்டும் நாம் வரவேண்டும் என்று ஆசித்தாலும் வரமுடியாதபடி, அவை நம்மை இழுக்க ஆரம்பிக்கின்றன. உலக பாரங்களும், ஆசை இச்சைகளும் நம்மை மேலே பறக்க விடாதபடி தடை செய்து விடுகின்றன.


லோத்தின் மனைவி பின்னால் திரும்பி பார்க்காதே என்று எச்சரிக்கப்பட்டும், உலக இச்சைகளும், உலக இன்பங்களும் அவளை திரும்பி பார்க்க வைத்து விடுகின்றன. கர்த்தருக்கு பயந்த, கர்த்தரால் கைபிடித்து, அழிவிற்கு தப்ப வைக்கப்பட்ட குடும்பம், உலக ஆசையால், நினைத்து பார்க்கவே கூசும் அளவிற்கு பயங்கர பாவ வாழ்க்கைக்குள் கடந்து செல்ல வேண்டி வந்தது. அந்த மனைவி திரும்பி பார்க்காமல் இருந்திருந்தால், ஒரு அருமையான குடும்பமாக, ஒரு எடுத்துகாட்டான குடும்பமாக லோத்தின் குடும்பம் வேதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் மேல் வைத்த ஆசை அந்த குடும்பத்தையே நாசமடைய வைத்தது.


'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அவைகளில் அன்பு வைத்தால் அந்த வாத்து எப்படி தான் ஆசைபட்டாலும் பறக்கவே முடியாமற் போயிற்றோ அந்த நிலை ஏற்படலாம். 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது' (2பேதுரு 3:7) என்று வேதம் கூறுகிறது. ஆகையால் ஒரு நாள் வானமும் பூமியும் அழிந்து போகும், இவை என்றும் நிலைத்திருப்பதில்லை. அதன் மேல் பற்று வைத்திருப்போர் நிலை என்னவாகும் என்பதை நாம் அறிவோம். கர்த்தர் மேல் நாம் பற்று வைப்போம், உலகத்தின் மேலும், அதின் ஆசை இச்சைகள் மேலும் நம் பற்றை வைக்காதபடி, கர்த்தர் வரும்போது நாம் அவரோடு பறக்கும்படியாக, எந்த உலக பாரங்களும், எந்த பற்றும் நம்மை தடை செய்யாதபடி நம்மை காத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!


சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாரங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் என்ற எச்சரிப்பின் சத்தத்திற்கு நாங்கள் செவி கொடுக்கிறவர்களாக உலக இச்சைகளை வெறுக்க கிருபை தாரும் தகப்பனே. இந்த உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருப்தால், நாங்கள் அதிலிருந்து தப்பும்படியாக, உயர பறப்பவர்களாக, உம்மோடு உறவு கொண்டு, கர்த்தர் வரும்போது அவரோடு பறந்து செல்லும்படியாக எங்கள் வாழ்க்கையில் உலகத்திற்கு இடம் கொடாதவர்களாக எங்களை மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, 8 November 2011

அடைப்பைப் பிடுங்காதே!

அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். - (பிரசங்கி 10:8ம் வசனத்தின் பின்பகுதி).

சீன பெரிய மதில் சுவர் (Great wall of China) உலக அதிசயங்களில் ஒன்றாகும். அது 4000 மைல்கள் நீளமுள்ளதாகவும், வட புறத்திலிருந்து வரும் தாக்குதலுக்கு சீனாவை தப்புவிப்பதற்காக கட்டப்பட்ட ஒரு பாதுகாப்பின் சுவராகும். அதைக் கட்டியவர்கள், அந்தச் சுவரை மிகவும் உயரமாக கட்டியதால், அதன் மேல் யாரும் ஏறிவிட முடியாது. மிகவும் தடிப்பமாக இருப்பதால் அதை ஊடுருவ முடியாதபடியும், மிகவும் நீளமாக கட்டியதால், அதை சுற்றி வர முடியாதவாறும் மிகவும் பாதுகாப்பாக அதை மிகுந்த ஞானத்தோடு கட்டி முடித்தார்கள்.


அப்படி பாதுகாப்பாய் கட்டியிருந்தபோதிலும், அது கட்டி முடித்த 100 வருடங்களில் சீனாவை மூன்று முறை எதிரிகள் படைஎடுத்துவந்து தாக்குதல் நடத்தி உள்ளே நுழைந்தார்கள். ஆனால் யாரும் அந்தச் சுவரை தாண்டவோ, உடைக்கவோ இலலை. பின் எப்படி சாத்தியமாயிற்று? அந்தச் சுவரில் பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் காவல் காத்த வீரர்களுக்கு படை எடுத்து வந்தவர்கள் லஞ்சம் கொடுத்து, அந்த காவலர்கள் கதவுகளை திறந்து விட்டபடியால் அவர்கள் மிகவும் எளிதாக உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தார்கள்.


அந்தச் சுவர் எத்தனை வலிமையாக கட்டப்பட்டிருந்த போதிலும், அதன் பெலன், அதன் கதவை காப்பவர்களின் கைகளிலேயே இருந்தது. நமக்குக்கூட ஆண்டவர் கண்கள், காதுகள், நாவு என்னும் கதவுகளைக கொடுத்துள்ளார். நாம் என்னதான் ஆவிக்குரியவர்களாய் இருந்தாலும், மிகவும் பலமுள்ளவன் என்று நினைத்திருந்தாலும், காணக்கூடாதக் காரியங்களையும், கேட்கக்கூடாத காரியங்களையும், பேசக் கூடாத காரியங்களையும் பார்த்தால், கேட்டால், பேசினால் சத்துரு எப்படியும் உள்ளே நுழைந்து விடுவான். அவனது தந்திரங்களுக்கு நாம் எதிர்த்தது நின்று அவனை ஜெயிக்க வேண்டும்.


கர்த்தர் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் வேலி அடைத்து வைத்திருக்கிறார். சத்துரு உள்ளே நுழையாதபடி நம்மைச் சுற்றிலும் வேலி பாதுகாப்பாய் இருக்கிறது. சுத்துரு எத்தனைதடவை சுற்றி வந்தாலும் அவன் நம்மை வந்த தாக்க முடியாது. ஆனால் நாம் அந்த வேலியை தாண்டி வந்தால், அவர் நம்மை சுற்றி வைத்திருக்கிற அடைப்பை பிடுங்கினால் நிச்சயம் பாம்பு கடிக்கும். அதாவது நாம் பாவம் செய்வோமானால், நம் நாவினாலே, காதுகளாலே, கண்களினாலே தேவையற்ற் காரியத்தில் ஈடுபடுவோமானால் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தைச் செய்வோமானால், நம்மைச் சுற்றி இருக்கிற வேலியை நாமே எடுத்துப் போட்டு, அடைப்பை பிடுங்கிப் போடுகிறோம். அப்போது சத்துரு மிகவும்எளிதாக உள்ளே நுழைந்துவிட நாம் இடம் கொடுக்கிறோம்.


கணவன் மனைவி மாறி மாறி வார்த்தைகளை பேசி சண்டையிட்டுக் கொள்ளும்போது, நாவை சத்துருவுக்கு கொடுத்து விடுகிறோம். நம் வாழ்வில் உள்ள அடைப்பை பிடுங்கி விடுகிறோம். நம் குடும்பம் சத்துருவின் தந்திரங்களுக்கு திறந்துவிடப்பட்டு விடுகிறது.


தமிழ் நாட்டில் சீரியல் நாடகங்களுக்கு அடிமைப் பட்டோர் அநேகர். கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு. அதைக் கண்டு தங்கள் மருமகள்களை மோசமாக நடத்தும் மாமியார்களும் உண்டு. மருமகள்களும் உண்டு. கணவன் மனைவிக்கும் இடையே வரும் பிரச்சனைகளுக்கும் இந்த நாடகங்கள் சில வேளைகளில் காரணமாய் விடுகின்றன. சில வேளைகளில் அதில் காட்டப்படும் விக்கிரக வழிபாடுகளின் வழியாக சத்துரு வீட்டிற்குள் வரும் அபாயங்களும் உண்டு. நாம் ஜாக்கிரதையாக இவைகளுக்கு விலகி ஜீவிக்க வேண்டும். நாம் காண்கிறதைக் குறித்தும், கேட்பதைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன மதில்சுவர் எத்தனை வலிமையுள்ளதாக இருந்தாலும் அதையும் மீறி எதிரி உள்ளே வர முடியுமென்றால், நாம் நம் வாழ்க்கையை எத்தனை பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டும்!

தேவன் நம் வாழ்வில் கிருபையாக கொடுத்துள்ள வேலியை நாம் எறிந்துப்போட்டுவிடாதபடி, அடைப்பை; பிடுங்கிவிடாதபடி நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காத்துக் கொள்வோம்.


நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே


ஜெபம்

எங்களை சுற்றி வேலி அடைத்துக் காக்கும் எங்கள் நல்லக் கர்த்தரே உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் தேவையில்லாத காரியஙகளைச் செய்து நீர் எங்களைச் சுற்றி வைத்திருக்கும் வேலியையும் அடைப்பையும் பிடுங்கி விடாதபடி எங்களைக் காத்துக் கொள்ள உதவிச் செய்யும். சத்துருவுக்கு இடம் கொடாதபடி உம்மைப் பற்றிக்கொண்டு வாழ எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday, 7 November 2011

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்

தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். - (எபேசியர் 5:28ன் பின்பகுதி).

நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.

அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது.

தேவன் ஒவ்வொருவருக்கும் அருமையான தோட்டத்தை போன்று திருமண வாழ்க்கையை தருகிறார். அதை அழகாக ஒரு நல்ல கனி தரும் தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. அதற்காக நேரம் எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, எரு இட்டு, களைகளை பிடுங்கி வேலி அடைத்து காத்து கொள்ளும்போது, அந்த தோட்டம் நல்ல கனிதரும் மரங்களையும், செடிகளையும் கொடுத்து அருமையான தோட்டமாக மாறுகிறது. அதுபோல குடும்பத்திற்காக நேரம் எடுத்து, மனைவி பிள்ளைகளுக்காக நேரம் கொடுத்து, அவர்களின் தேவைகளை சந்தித்து, தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குடும்பமாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, பிள்ளைகளுக்கு வேதத்தை குறித்து போதித்து, கர்த்தருடைய வழியில் நடத்தும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக உருவாகிறது.

அதே சமயத்தில் களைகளை வளரவிட்டு, தண்ணீர் கூட பாய்ச்சாமல் இருந்தால் அந்த தோட்டத்தின் செடிகள் வளரவது எப்படி? ஒரு அன்பான வார்த்தைக்கூட பேசாமல் ஒரு கணவன் இருந்தால் அவனை நம்பி வந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? எப்போது பார்த்தாலும் கோபம், கோபம், எதற்கெடுத்தாலும் கையை ஓங்குதல் போன்றவை இருந்தால் அந்த குடும்பம் எப்படி அழகான தோட்டமாக இருக்க முடியும்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மனைவியை அடிக்கிற கணவர்கள் எத்தனை பேர்? உண்மையிலேயே வேதனையான விஷயம்! வீட்டிலே சாட்சியை காத்து கொள்ளாமல் வெளியே போய் சாட்சி சொன்னால் அது யாருக்கும் பிரயோஜனமாயிருக்காது.

குடும்ப வாழ்க்கையிலே எப்போது வேண்டுமானாலும் சமாதானத்தை குலைக்கும் காரியங்கள் ஏற்படலாம். பிரச்சனை, கசப்பு, கோபம் வரலாம். ஆனால் அவற்றை உடனே களைந்து, மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு, உடனுக்குடன் சரி செய்து விடும்போது, அது மீண்டும் சந்தோஷத்தை கொடுக்கும் வீடாக மாறுகிறது.

தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மில் அன்புகூருவதால்தானே, வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறோம். அதை போலவே நாம் நம் மனைவியின் மீது அன்புகூர வேண்டும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கணவன் வேறு, மனைவி வேறு என்று இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை விட்டு கொடுத்து, மன்னித்து வாழும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக மாறி விடுகிறது.

பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் மன்னித்து விடாதிருக்கும் பட்சத்தில், களைகள் வளர்ந்து, முடசெடிகள் செழித்து, வளர்ந்து தோட்டத்தையே பாழாக்கி விடும். ஆகவே சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக நம் கோபம் மறையட்டும். மறுநாள் மறுநாள் என்று பிரச்சனையை இழுத்து கொண்டே போவாமானால், பிரச்சனைக்கு முடிவே வராது. வளரும் களைகளை அன்றே பிடுங்குவோம், பிரச்சனைக்கு உடனே முடிவு கட்டுவோம். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
செல்ல பிள்ளைகள் தந்தீரையா
அணைக்கும் கணவரை தந்தீரையா
அன்பு மனைவியை தந்தீரையா
..

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று குடும்பமாக அவனை சேர்த்து வைத்து அந்த குடும்பத்தில் பிரியப்படுகிற நல்லவரே, அந்த குடும்பத்தை ஒரு அழகிய தோட்டமாக மாற்றவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் குடும்பமாக வாழவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீரே தலைவராக இருந்து நடத்துவீராக. மனைவியை எந்த காரணத்தை கொண்டும் அடிக்காதபடிக்கு ஞானத்தை தருவீராக. தன் சொந்த சரீரத்தை சிநேகிப்பது போல மனைவியையும் நேசிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday, 6 November 2011

பெருமைக்கு எதிர்த்து நிற்போம்

..நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். - (1 பேதுரு 5:5).

கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால், யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனமாயிருக்க வேண்டும். வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணங்கள் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.

டி.எல். மூடி என்ற தேவ ஊழியர் ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில், மிக பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும், ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, 'இன்று மிக பிரமாதமாக பேசினீர்கள்' என்று பாராட்டினார். உடனே மூடி, 'இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்' என்றார். அந்த நபர் குழம்பிப்போய் தனக்கு முன் எவரையும் காணாததினால், 'எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?' என்று கேட்டார். மூடி கூறினார், 'நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, 'மூடியாரே, இன்று உம் பிரசங்கம் அபாரம் என்று பாராட்டினான்' என்றார்.

மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம், சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.

பொதுவாக, வேத வசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி இருக்க ஜாக்கிரதையாக இருப்போம். ஆனால் சில நேரங்களில் நற்காரியத்தை தேவ நாமத்தின் மகிமைக்ககாக செய்யும்போது, அதை பிறர் பாராட்டும்போது, நம்மையும் அறியாமல் பெருமையான எண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறது. மறுமுறை இத்தகைய நற்காரியம் செய்யும்போது, மனிதர்கள்pன் பாராட்டை எதிர்ப்பார்க்கிறோம். அவாகள் பாராட்டாத போது செய்த செயல்களின் மீதும், பிறர் மீதும் சலிப்பு ஏற்படுகிறது.

ஆகவேதான் பிலிப்பியர் 2:3-ல் பவுல் கூறுகிறார், 'ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் ஜீவனத்தின் பெருமையை மாம்சத்தின் இச்சையோடும், கண்களின் இச்சையோடும் பட்டியலிட்டுள்ளார்.

பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்த வாழ விரும்பும் ஒவ்வொருவரையும் பிசாசு தந்திரமாய் பாவத்தில் விழ வைக்க எண்ணுகிறான். அதில் குறிப்பாக மாயையான தாழ்மை என்னும் மறைமுக பெருமையையும் புகுத்தி விடுகிறான். சாத்தானின் இப்படிப்பட்ட தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் அதை இனம் கண்டறிந்து எதிர்த்து நிற்க முடியும். ஆகவே வேத வசனத்தை தெளிவாய் அறிந்தவர்களாக ஜெபத்திலே எப்போதும் விழிப்பாயிருக்க தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!


பெருமையின் ஆவியை எடுத்தீரே

பொறுமையின் ஆவியை கொடுத்தீரே

ராஜாதி ராஜனே அப்பா பிதாவே

உம் பாதம் எந்தன் தஞ்சமே

கண்ணோக்கி பாரும் தேவாஎன்னை

கண்ணோக்கி பாரும் தேவா


ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்ற வசனத்தின்படி நாங்கள் தாழ்மையுள்ளவர்களாக உம்முடைய கிருபையை எப்போதும் பெற்று கொள்கிறவர்களாக எங்களை மாற்றும். பெருமை என்னும் பேர் கூட எங்கள் மீது கூறப்படாதபடி, நாங்கள் தாழ்மையோடு எப்போதும் நடந்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.