உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. - (சங்கீதம் 119:165).
ஸ்பர்ஜன் என்னும் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருமுறை கிறிஸ்தவ வீடு ஒன்றிற்கு சென்றிருந்தார். குடும்பத்தினரோடு பல விஷயங்களை பேசிவிட்டு, தன் பையில் வேதாகமம் இருந்தும், அந்த வீட்டிலிருந்த வேதாகமத்தை கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். அவர்களோ வேதத்தை படிக்கும் பழக்கமேயில்லாத கிறிஸ்தவர்கள். தனி தியானமும் இல்லை. ஆகவே சுமார் இருபது நிமிடம் கழித்து ஒரு மூலையிலிந்து வேதத்தை தேடி எடுத்து, தூசி தட்டி பிரசங்கியார் கையில் கொடுத்து, 'பாருங்கள், வேலைக்காரன் வேதபுத்தகத்தை எங்கே போட்டிருக்கிறான் என்று?' என்று வேலைக்காரன் மேல் குற்றம் சாட்டினார்கள்.
ஸ்பர்ஜன் அதை வாங்கி அதன் நடுவில் நாலைந்து துவாரங்கள் இருப்பதை
கவனித்தார். அநேக ஆண்டுகளாக அவ்வேதத்தை உபயோகிக்காததால்
பூச்சிகள் துளைத்துள்ளன என அறிந்து கொண்டார். இறுதியில்
ஜெபிக்கும்போது, 'ஆண்டவரே, பைபிளை முதல் அட்டையிலிருந்து கடைசி
அட்டை வரை துளைத்துக் கொண்டு போகவல்ல ஒரு பூச்சியாக, புழுவாக
என்னை மாற்றும், எங்களை மாற்றும்' என ஜெபித்தார். அக்குடும்பத்தார்
தங்கள் தவறை உணர்ந்தனர்.
கிறிஸ்தவர்களாகிய நம்மில் அநேகர் வேதத்தை ஞாயிறு ஆராதனைக்கு
மட்டுமே எடுத்துச் செல்கிறோம். ஒரு சிலர் சங்கீதத்தையும்
நீதிமொழிகளையும் மாத்திரமே வாசிக்கிறோம். 'என் வேதத்தின்
மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை
அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று தேவன் நம்மைக்
குறித்து சொல்லாதபடி, வேதத்தை தினமும் வாசித்து அப்பியாசிக்க பழக
வேண்டும். தேவன் நமக்கென்று எழுதி கொடுத்துள்ள மகத்துவமான
காரியங்களை நாம் வாசித்து அவற்றை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள
வேண்டும். அவற்றை யாருக்கோ தேவன் எழுதியிருக்கிறார் என்று அந்நிய
காரியமாக எண்ணக்கூடாது.
நாம் முழு வேதத்தையும் வாசித்து தியானிப்போமானால் இடறலற்ற
சமாதானமான ஒரு வாழ்வை வாழ முடியும்;. காரணம், கிறிஸ்தவ
வட்டாரத்தில் அநேக துர்உபசேதங்களும், வேதத்தில் சொல்லப்பட்டிராத பல
புதிய முறைகளும் எங்கும் பரவி படந்து வருகின்றன. கூடுமானால், தெரிந்து
கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் விதமாக அவைகள் எங்கும்
வலுவாய் தொனிக்கின்றன. ஆகவே இப்படிப்பட்ட நாட்களிலே நாம் முழு
வேதத்தையும் தியானித்து பெரோயா பட்டணத்தாரைப் போல காரியங்கள்
அப்படி இருக்கிறதா என வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து
நற்குணசாலிகளாக நாம் மாற வேண்டியது மிகவும் அவசியம்.
பிரியமானவர்களே, ஒவ்வொரு நாளும் வேதம் நமக்கு ஆத்மீக ஆகாரமாக
மாறுமென்றால், உலகிலுள்ள அனைத்து சோதனைகளிலும் நாம்
ஜெயமெடுக்க முடியும். உலகமோ, மாமிசமோ, பிசாசோ எனக்கு எதிராய்
நிற்பவன் யார் என் நாம் தைரியமாய் சொல்ல முடியும். எப்படிப்பட்ட
பிரச்சனைகளோ, வேதனைகளோ, தோல்விகளோ, துன்பங்களோ எது
வந்தாலும், வேதம் நமக்கு வழிகாட்டியாக மாறும். ஒவ்வொரு நாளும்
வேதத்தை வாசித்து வேதபுத்தகத்தின் புழுவாக மாற நம்மை
அர்ப்பணிப்போம். வேதத்தின் இரகசியங்களை தேவன் நமக்கு
கற்றுத்தருவார். ஆமென் அல்லேலூயா!
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தகர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வேதத்தை வாசித்து, அது காட்டும் வழியில் நடக்க கிருபை செய்யும். வேதத்தை நேசிக்கிற இருதயத்தை தாரும். ஒவ்வொரு நாளும் வேதமே எங்கள் உணவாக மாறட்டும். வேதத்தின் மகத்துவங்களை காணும்படியாக இருதயத்தின் கண்களை திறந்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment