ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். -(மத்தேயு 7:8).
ஒரு கிறிஸ்தவ பெண் வைத்தியர் தன் வேலையை ஒரு மலையின் மேல் முடித்து விட்டு, கீழே தன் காரில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதும் தன் வியாதியஸ்தர்களை தொடும்போதும், மருந்து கொடுக்கும்போதும், ஒரு சிறிய ஜெபத்தை செய்து கொண்டே மருத்துவம் செய்வார்கள்.
அப்படி அவர்கள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தபோது, தீடீரென்று கார் நின்று விட்டது. பார்த்தால், பெட்ரோல் அளவு மிகவும் குறைவாக இருந்தது. தான் இருந்த பிஸியினால் அதை கவனிக்க மறந்து போனார்கள். உடனே என்ன செய்வது என்று தெரியாமல், ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபித்துக கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுனர் அங்கு நிறுத்தி, உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர், 'நீங்கள் கீழே போனவுடன், எனக்கு ஒரு நான்கு கேலன் பெட்ரோல் யார் மூலமாவது அனுப்பி வையுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அந்த லாரி ஓட்டுனர், 'என்னிடம் 2,000 கேலன் பெட்ரோல் இருக்கிறது' என்று கூறினார். அப்போதும் அந்த வைத்தியர், அந்த பெரிய டாங்கிலிருந்து பெட்ரோல் எடுப்பது கடினம் என்று நினைத்து, மீண்டும், 'தயவுசெய்து, பெட்ரோல் அனுப்பி வையுங்கள்' என்று கேட்டார்கள்.
மீண்டும் அந்த ஓட்டுனர், 'என்னிடம் 2,000 கேலன் பெட்ரோல் இருக்கிறது' என்று கூறினார். அப்போது அந்த வைத்தியர், 'அப்படியானால், உங்களுக்கு என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஓட்டுனர், 'ஆம், என்னிடம் உள்ள சிறிய பை;பினால், இந்த பெரிய டாங்கிலிருந்து என்னால் பெட்ரோல் எடுக்க முடியும்' என்று கூறினார். அப்போது அந்த வைத்தியர், 'தயவு செய்து, என்னுடைய காரில் பெட்ரோலை நிரப்புங்கள்' என்று கேட்டார்கள், கேட்டவுடன் அந்த ஓட்டுனர் பெட்ரோலை ஊற்றி கொடுத்தார்.
நம் தேவன், இந்த வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் கூடாத காரியம் நிச்சயமாக ஒன்றுமே இல்லை. அவரிடம் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்தும், நம்மில் அநேகர் அவரிடம் கேட்பதில்லை. சிறிய தலைவலி என்றால் அவர் தீர்த்து வைப்பார், ஆனால் கேன்சர் வியாதியை குணப்படுத்துவாரா? என்று நம்மில் நாமே ஐயம் கொண்டு, அவரிடம் கேட்காமல் விட்டு விடுகிறோம்.
.
சமீபத்தில் எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பரின் மனைவி கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்த நாங்கள், அவரிடம் நாங்கள் உங்கள் மனைவிக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர் பெரிய காரியம் செய்வார் என்று கூறினோம். நாங்கள் சென்ற பிறகு அவர் அங்கிருந்த தன் நண்பரிடம் எனக்கு ஜெபத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது, யாரும் ஜெபிப்பதையும் நான் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அதை கேள்விப்பட்ட நாங்கள், சரி, அவர் அப்படி சொன்னாலும், நாம் தொடர்ந்து ஜெபிப்போம் என்று ஜெபித்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரிடத்தில் அந்த கணவன் விசுவாசமாய் இல்லாதபடியால், தேவனிடம் தன் மனைவிக்கு சுகத்தை கொடும் என்று கேட்காதபடியால், அந்த சகோதரி மரித்துப் போனார்கள். அதை கேட்டபோது மிகவும் விசனமாயிருந்தது. நாம் ஜெபித்தவுடன் கேன்சர் வியாதியில் இருப்பவர்கள் எல்லாரும் சுகமடைந்து விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை, தேவனுடைய திட்டம் என்றும் சித்தம் என்றும் இருப்பதை நாம் உணர வேண்டும். ஆனால் கேட்க வேண்டியது நமது கடமையல்லவா? ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா?
.
'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்' (மாற்கு 11:24) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நமக்கு நிச்சயமாக விசுவாசம் வேண்டும். ஆனால் அதற்கு முன் தேவனிடம் நம் ஜெபத்தில் நம்முடைய தேவைகளை குறித்து கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது, அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்கும்போது நமக்கு அற்புதம் நடக்கிறது.
.
இயேசுகிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பாகவே, சிலுவையில் நமக்காக
பாடுபட்டு, தம் இரத்தத்தை சிந்தினபடியால், நம் பாவங்களும், சாபங்களும்
நம்மை விட்டு நீங்கினது. அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்
என்று வசனம் கூறுகிறது. அவர் நமக்கு எல்லாவற்றையும் சம்பாதித்து
வைத்துப் போனாலும், நாம் கேட்கும்போது அவற்றை பெற்றுக்
கொள்கிறோம். அதை அவர் தமது சித்தத்தின்படி கொடுக்க
வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.
பிரியமானவர்களே, நம்முடைய தேவைகள் என்னவென்று தேவன்
அறிந்திருக்கிறார். ஒரு தகப்பனிடம், ஒரு பிள்ளை தனக்கு இது
வேண்டுமென்று கேட்கும்போது எப்படி வாங்கி தருகிறானோ, அதைப்போல
நம் பரம தகப்பனும் கொடுக்க ஆவலாயிருக்கிறார். 'இதுவரைக்கும் நீங்கள்
என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்'
(யோவான் 16:24) என்ற வாக்குதத்தத்தின்படி நமக்கு தந்தருளுவார். ஆமென்
அல்லேலூயா!
யெகோவாயீரே எல்லாம் தருபவர்
போதுமானவர் அவர் அவர்
என் தேவைகள் எல்லாவற்றையும்
என் தேவன் தந்து ஆசீர்வதிப்பார்
தம்முடைய தூதர்கட்கு கட்டளையிட்டு
யெகோவாயீரே காத்துக் கொள்வார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் கேட்பதற்கு முன்பே நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீரே உமக்கு நன்றி. நாங்கள் உம்மிடத்தில் எங்கள் தேவைகளை சொல்லி, கேட்டு பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் பெருமையினிமித்தமோ, விசுவாசமின்மையினிமித்தமோ நாங்கள் உம்மிடம் கேட்காதபடி இருக்கும் நிலைகளை மாற்றி, விசுவாசத்தோடு உம்மிடம் எங்கள் தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment