Search This Blog

Friday, 9 March 2012

கேட்கிறவன் பெற்றுக் கொள்கிறான்

ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். -(மத்தேயு 7:8).

 ஒரு கிறிஸ்தவ பெண் வைத்தியர் தன் வேலையை ஒரு மலையின் மேல் முடித்து விட்டு, கீழே தன் காரில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதும் தன் வியாதியஸ்தர்களை தொடும்போதும், மருந்து கொடுக்கும்போதும், ஒரு சிறிய ஜெபத்தை செய்து கொண்டே மருத்துவம் செய்வார்கள். 

 அப்படி அவர்கள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தபோது, தீடீரென்று கார் நின்று விட்டது. பார்த்தால், பெட்ரோல் அளவு மிகவும் குறைவாக இருந்தது. தான் இருந்த பிஸியினால் அதை கவனிக்க மறந்து போனார்கள். உடனே என்ன செய்வது என்று தெரியாமல், ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபித்துக கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுனர் அங்கு நிறுத்தி, உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர், 'நீங்கள் கீழே போனவுடன், எனக்கு ஒரு நான்கு கேலன் பெட்ரோல் யார் மூலமாவது அனுப்பி வையுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அந்த லாரி ஓட்டுனர், 'என்னிடம் 2,000 கேலன் பெட்ரோல் இருக்கிறது' என்று கூறினார். அப்போதும் அந்த வைத்தியர், அந்த பெரிய டாங்கிலிருந்து பெட்ரோல் எடுப்பது கடினம் என்று நினைத்து, மீண்டும், 'தயவுசெய்து, பெட்ரோல் அனுப்பி வையுங்கள்' என்று கேட்டார்கள்.

 மீண்டும் அந்த ஓட்டுனர், 'என்னிடம் 2,000 கேலன் பெட்ரோல் இருக்கிறது' என்று கூறினார். அப்போது அந்த வைத்தியர், 'அப்படியானால், உங்களுக்கு என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஓட்டுனர், 'ஆம், என்னிடம் உள்ள சிறிய பை;பினால், இந்த பெரிய டாங்கிலிருந்து என்னால் பெட்ரோல் எடுக்க முடியும்' என்று கூறினார். அப்போது அந்த வைத்தியர், 'தயவு செய்து, என்னுடைய காரில் பெட்ரோலை நிரப்புங்கள்' என்று கேட்டார்கள், கேட்டவுடன் அந்த ஓட்டுனர் பெட்ரோலை ஊற்றி கொடுத்தார்.

 நம் தேவன், இந்த வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் கூடாத காரியம் நிச்சயமாக ஒன்றுமே இல்லை. அவரிடம் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்தும், நம்மில் அநேகர் அவரிடம் கேட்பதில்லை. சிறிய தலைவலி என்றால் அவர் தீர்த்து வைப்பார், ஆனால் கேன்சர் வியாதியை குணப்படுத்துவாரா? என்று நம்மில் நாமே ஐயம் கொண்டு, அவரிடம் கேட்காமல் விட்டு விடுகிறோம். . சமீபத்தில் எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பரின் மனைவி கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்த நாங்கள், அவரிடம் நாங்கள் உங்கள் மனைவிக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர் பெரிய காரியம் செய்வார் என்று கூறினோம். நாங்கள் சென்ற பிறகு அவர் அங்கிருந்த தன் நண்பரிடம் எனக்கு ஜெபத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது, யாரும் ஜெபிப்பதையும் நான் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அதை கேள்விப்பட்ட நாங்கள், சரி, அவர் அப்படி சொன்னாலும், நாம் தொடர்ந்து ஜெபிப்போம் என்று ஜெபித்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரிடத்தில் அந்த கணவன் விசுவாசமாய் இல்லாதபடியால், தேவனிடம் தன் மனைவிக்கு சுகத்தை கொடும் என்று கேட்காதபடியால், அந்த சகோதரி மரித்துப் போனார்கள். அதை கேட்டபோது மிகவும் விசனமாயிருந்தது. நாம் ஜெபித்தவுடன் கேன்சர் வியாதியில் இருப்பவர்கள் எல்லாரும் சுகமடைந்து விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை, தேவனுடைய திட்டம் என்றும் சித்தம் என்றும் இருப்பதை நாம் உணர வேண்டும். ஆனால் கேட்க வேண்டியது நமது கடமையல்லவா? ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? . 'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்' (மாற்கு 11:24) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நமக்கு நிச்சயமாக விசுவாசம் வேண்டும். ஆனால் அதற்கு முன் தேவனிடம் நம் ஜெபத்தில் நம்முடைய தேவைகளை குறித்து கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது, அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்கும்போது நமக்கு அற்புதம் நடக்கிறது. . இயேசுகிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பாகவே, சிலுவையில் நமக்காக பாடுபட்டு, தம் இரத்தத்தை சிந்தினபடியால், நம் பாவங்களும், சாபங்களும் நம்மை விட்டு நீங்கினது. அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்று வசனம் கூறுகிறது. அவர் நமக்கு எல்லாவற்றையும் சம்பாதித்து வைத்துப் போனாலும், நாம் கேட்கும்போது அவற்றை பெற்றுக் கொள்கிறோம். அதை அவர் தமது சித்தத்தின்படி கொடுக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.

 பிரியமானவர்களே, நம்முடைய தேவைகள் என்னவென்று தேவன் அறிந்திருக்கிறார். ஒரு தகப்பனிடம், ஒரு பிள்ளை தனக்கு இது வேண்டுமென்று கேட்கும்போது எப்படி வாங்கி தருகிறானோ, அதைப்போல நம் பரம தகப்பனும் கொடுக்க ஆவலாயிருக்கிறார். 'இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' (யோவான் 16:24) என்ற வாக்குதத்தத்தின்படி நமக்கு தந்தருளுவார். ஆமென் அல்லேலூயா! 

யெகோவாயீரே எல்லாம் தருபவர் 
போதுமானவர் அவர் அவர் 
 என் தேவைகள் எல்லாவற்றையும் 
என் தேவன் தந்து ஆசீர்வதிப்பார் 
தம்முடைய தூதர்கட்கு கட்டளையிட்டு 
யெகோவாயீரே காத்துக் கொள்வார் 

ஜெபம் 
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் கேட்பதற்கு முன்பே நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீரே உமக்கு நன்றி. நாங்கள் உம்மிடத்தில் எங்கள் தேவைகளை சொல்லி, கேட்டு பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் பெருமையினிமித்தமோ, விசுவாசமின்மையினிமித்தமோ நாங்கள் உம்மிடம் கேட்காதபடி இருக்கும் நிலைகளை மாற்றி, விசுவாசத்தோடு உம்மிடம் எங்கள் தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 8 March 2012

வேத புத்தக புழு

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. - (சங்கீதம் 119:165).

 ஸ்பர்ஜன் என்னும் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருமுறை கிறிஸ்தவ வீடு ஒன்றிற்கு சென்றிருந்தார். குடும்பத்தினரோடு பல விஷயங்களை பேசிவிட்டு, தன் பையில் வேதாகமம் இருந்தும், அந்த வீட்டிலிருந்த வேதாகமத்தை கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். அவர்களோ வேதத்தை படிக்கும் பழக்கமேயில்லாத கிறிஸ்தவர்கள். தனி தியானமும் இல்லை. ஆகவே சுமார் இருபது நிமிடம் கழித்து ஒரு மூலையிலிந்து வேதத்தை தேடி எடுத்து, தூசி தட்டி பிரசங்கியார் கையில் கொடுத்து, 'பாருங்கள், வேலைக்காரன் வேதபுத்தகத்தை எங்கே போட்டிருக்கிறான் என்று?' என்று வேலைக்காரன் மேல் குற்றம் சாட்டினார்கள்.

ஸ்பர்ஜன் அதை வாங்கி அதன் நடுவில் நாலைந்து துவாரங்கள் இருப்பதை கவனித்தார். அநேக ஆண்டுகளாக அவ்வேதத்தை உபயோகிக்காததால் பூச்சிகள் துளைத்துள்ளன என அறிந்து கொண்டார். இறுதியில் ஜெபிக்கும்போது, 'ஆண்டவரே, பைபிளை முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை துளைத்துக் கொண்டு போகவல்ல ஒரு பூச்சியாக, புழுவாக என்னை மாற்றும், எங்களை மாற்றும்' என ஜெபித்தார். அக்குடும்பத்தார் தங்கள் தவறை உணர்ந்தனர்.

 கிறிஸ்தவர்களாகிய நம்மில் அநேகர் வேதத்தை ஞாயிறு ஆராதனைக்கு மட்டுமே எடுத்துச் செல்கிறோம். ஒரு சிலர் சங்கீதத்தையும் நீதிமொழிகளையும் மாத்திரமே வாசிக்கிறோம். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று தேவன் நம்மைக் குறித்து சொல்லாதபடி, வேதத்தை தினமும் வாசித்து அப்பியாசிக்க பழக வேண்டும். தேவன் நமக்கென்று எழுதி கொடுத்துள்ள மகத்துவமான காரியங்களை நாம் வாசித்து அவற்றை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை யாருக்கோ தேவன் எழுதியிருக்கிறார் என்று அந்நிய காரியமாக எண்ணக்கூடாது.

 நாம் முழு வேதத்தையும் வாசித்து தியானிப்போமானால் இடறலற்ற சமாதானமான ஒரு வாழ்வை வாழ முடியும்;. காரணம், கிறிஸ்தவ வட்டாரத்தில் அநேக துர்உபசேதங்களும், வேதத்தில் சொல்லப்பட்டிராத பல புதிய முறைகளும் எங்கும் பரவி படந்து வருகின்றன. கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் விதமாக அவைகள் எங்கும் வலுவாய் தொனிக்கின்றன. ஆகவே இப்படிப்பட்ட நாட்களிலே நாம் முழு வேதத்தையும் தியானித்து பெரோயா பட்டணத்தாரைப் போல காரியங்கள் அப்படி இருக்கிறதா என வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து நற்குணசாலிகளாக நாம் மாற வேண்டியது மிகவும் அவசியம்.

 பிரியமானவர்களே, ஒவ்வொரு நாளும் வேதம் நமக்கு ஆத்மீக ஆகாரமாக மாறுமென்றால், உலகிலுள்ள அனைத்து சோதனைகளிலும் நாம் ஜெயமெடுக்க முடியும். உலகமோ, மாமிசமோ, பிசாசோ எனக்கு எதிராய் நிற்பவன் யார் என் நாம் தைரியமாய் சொல்ல முடியும். எப்படிப்பட்ட பிரச்சனைகளோ, வேதனைகளோ, தோல்விகளோ, துன்பங்களோ எது வந்தாலும், வேதம் நமக்கு வழிகாட்டியாக மாறும். ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து வேதபுத்தகத்தின் புழுவாக மாற நம்மை அர்ப்பணிப்போம். வேதத்தின் இரகசியங்களை தேவன் நமக்கு கற்றுத்தருவார். ஆமென் அல்லேலூயா! 

 சத்திய வேதம் பக்தரின் கீதம் 
சுத்தகர்கள் போகும் பாதையின் தீபம் 
உத்தம மார்க்கம் காட்டும் 
 எத்தனை துன்பம் துயரம் வந்தும் 
பக்தனை தேற்றிடும் ஒளஷதம் 

ஜெபம் 

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வேதத்தை வாசித்து, அது காட்டும் வழியில் நடக்க கிருபை செய்யும். வேதத்தை நேசிக்கிற இருதயத்தை தாரும். ஒவ்வொரு நாளும் வேதமே எங்கள் உணவாக மாறட்டும். வேதத்தின் மகத்துவங்களை காணும்படியாக இருதயத்தின் கண்களை திறந்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, 7 March 2012

கிறிஸ்துவின் உறவினர்கள்

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - (மத்தேயு 12:50).

 நம்மில் அநேகருக்கு பிரபலமானவர்களின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறவர்களாக இருக்கிறோம். ஒரு வேளை ஒரு மந்திரி மிகவும் தூரத்து உறவினராக இருந்தாலும், நம்ப நாட்டு இந்த துறையின் மந்திரி, என்னுடைய அப்பாவினுடைய, அண்ணனுடைய, மனைவியினுடைய, தம்பியினுடைய மனைவியின் தம்பிக்கு மாமனார் என்று எப்படி எப்படியோ உறவின் முறையை சொல்லி, அந்த மந்திரி எனக்கு உறவினர் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் உண்டு. அந்த மந்திரிக்கு அவர் யாரென்றே தெரியாதாயிருக்கும்! 

ஒருமுறை இயேசுகிறிஸ்து ஜனங்களோடு அமர்ந்து அவர்களுக்கு போதித்து கொண்டிருந்தபோது, அவருடைய தாயாரும் சகோதரரும் வெளியே நின்று அவரிடத்தில் பேச வேண்டுமென்று நின்றிருந்தார்கள் (மத்தேயு 12:46). இயேசுகிறிஸ்து ஓய்வுநாளில் ஒரு சூம்பின கையுடைய மனிதனை சுகப்படுத்தினபடியால் அதை பார்த்த பரிசேயர் அவரை கொலை செய்யவேண்டுமென்று ஆலோசனை பண்ண ஆரம்பித்தார்கள். அவரை பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூல் என்று சொன்னார்கள். அதனால் அவர் அவர்களை விரியன் பாம்பின் குட்டிகளே என்று அழைத்து, கடினமாக பேசி, வேதபாரகருக்கும், பரிசேயருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஒருவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, 'உமது தாயாரும், சகோதரரும் வெளியே உமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னான்.

 ஒருவேளை அவர்கள் இயேசுவிடம் 'நீ வேதப்பாரகரையும், பரிசேயரையும் பகைத்துக் கொள்ளாதே, அவர்கள் உன்னை கொலை செய்யும்படி ஆலோசனை செய்கிறார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இரு' என்று எச்சரித்து போகும்படி வந்திருக்கலாம். ஆனால் 'தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு இயேசு பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்' (மத்தேயு 12:48-50). 

நமக்கெல்லாருக்கும் நாம் இயேசுகிறிஸ்துவின் உறவினர் என்று சொல்லி கொண்டால் மிகவும் அருமையாகத்தான் இருக்கும். நாம் அவருடைய உறவினர் என்று சொல்லிக் கொண்டாலும், இயேசுகிறிஸ்து நம்மைக் குறித்து என்ன சொல்கிறார் என்று நாம் அறிந்து அதன்படி நடக்க கவனமாயிருக்க வேண்டும். . இயேசுகிறிஸ்து என் அப்பா, என் சகோதரர் என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின்படி, பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு சகோதரியும், சகோதரனுமாய் இருக்கிறார்கள். அப்படியானால் பிதாவின் சித்தம் என்ன? 

1. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது (யோவான் 6:39) . 

2. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 4:3) . 

3. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்ளூ அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:18) . 

4. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது - (1 பேதுரு 2:15). 

5. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் - (1தீமோத்தேயு 2:4) . 

இந்த வார்த்தைகளின்படி அவருடைய சித்தத்தின்படி செய்வோமானால் நாம் அவருடைய சகோதரிகளும், சகோதரர்களுமாய் இருப்போம். கிறிஸ்துவும் நம்மை அவருடைய சகோதரன் அல்லது சகோதரி என்று சொல்லி மகிழ்வார். அவருடைய சித்தத்தின்படி வாழ்ந்து, கிறிஸ்துவின் உறவினர்களாக இருக்க தேவன் தாமே நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! 

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே - இயேசு 
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே 
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே . 

காலத்தின் வேகத்தை பார்க்கும்போது 
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் 
வாழ்ந்து விடும்படி அழைக்கிறாரே 

ஜெபம் 

எங்கள்அன்பின் நேச தகப்பனே, பிதாவின் சித்தத்தை செய்வதினால் உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் சகோதரனாக, தாயாக, சகோதரியாக நாங்கள் ஜீவிக்கும்படியாக எங்களுக்கு உணர்த்தும். எந்த காரியத்திலும் உம்முடைய சித்தத்தை அறிந்து அதன்படி செய்ய கிருபை தாரும். தேவ சித்தமில்லாமல் எங்கள் வாழ்வில் ஒன்றும் செய்யாதபடி உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, 6 March 2012

இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். - (யோவான் 19:16-18).

 பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டிலிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இயேசுகிறிஸ்து அங்கு நியாயம் விசாரிக்கப்படுகிறார். பிலாத்து அவரிடம் குற்றம் ஒன்றையும் காணாமல் அவரை விடுதலையாக்க தீர்மானித்த பொது யூதர்கள் அவரை சிலுவையில் அறைய சொல்லி சத்தமிட்டபடியால், அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். எருசலேமில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்த பாதை 14 நிலையங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது சிலுவை பாதை அல்லது Via Dolorosa என்றழைக்கப்படுகிறது. 

1. பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தல். (யோவான் 19:16). இப்போது பிலாத்துவின் அரண்மனையில் அரபிய பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து முதலாம நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது. 

2. இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது. இங்கு ரோம போர்ச்சேவகர், அவரை வாரினால் அடிப்பித்து, முள்ளுகளினால் ஒரு முடியை உண்டு பண்ணி, அவர் சிரசின்மேல் வைத்து, விசப்பான அங்கியை உடுத்திய இடம் (யோவான் 19:1-2) 

3. இயேசுகிறிஸ்து முதன் முறையாக சிலுவையின் பாரம் தாங்காமல் கீழே விழுகிறார். 

4. இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள் தன் மகன் சிலுவை சுமந்து செல்வதை காண்கிற இடம். இதில் ஒரு சிறிய ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள்.

 5. சிரேனே ஊரானாகிய சீமோனை சிலுவையை சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள் (லூக்கா 23:26).

 6. வெரோனிக்கா என்னும் சகோதரி இயேசுவின் முகத்தை தன்னிடம் இருந்த துணியால் துடைத்த இடம். அந்த துணியில் இயேசுவின் முகம் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.

 7. இயேசுகிறிஸ்து இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்.

 8. எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்ன இடம். (லூக்கா 23:27-31).

 9. இயேசுகிறிஸ்து மூன்றாம் முறையாக கீழே விழுகிறார். . மேற்கண்ட ஒன்பது நிலையங்களும் சந்தடி நிறைந்த பாலஸ்தீனியரின் கடைவீதிகளுக்கு நடுவே இருக்கிறது. 10-14 நிலையங்கள் Holy Sepulchre என்னும் பெரிய ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

 10. இயேசுகிறிஸ்து உடுத்தியிருந்த துணி உரியப்படுகிறது.

 11. இயேசுகிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் கடாவப்படுகிறார்.

 12. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி இருந்த கொல்கதா மலையின் பெரிய கற்பாறை ஒரு பெரிய கண்ணாடியில் மூடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இயேசுகிறிஸ்துவின் தாயார் மரியாளின் இருதயத்தை ஒரு பட்டயம் ஊடுருவி இருப்பதைப் போன்று சிலையில் வடிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்குவதை போன்று பிரத்யேகமாக செய்திருக்கிறார்கள்.
 
13. இயேசுவின் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது. யோசேப்பு அந்த சரீரத்தை பிலாத்துவினிடத்தில் கேட்டு பெற்று கொள்கிறான் (யோவான் 19:38). இவை அங்கு படங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த படத்தில் சிறு சிறு தூதர்களும் தங்கள் கண்களை ஒரு துணியால் துடைத்தபடி பறந்து செல்லும் காட்சி மனதை உருக்க வைக்கும். அங்கு பக்கத்திலேயே நிக்கோதேமு வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றி கட்டின இடம் உள்ளது (யோவான் 19:40) . 

14. இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. - (யோவான் 19:41). 

 இந்த 14 நிலையங்களையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் மூன்று மணிக்கு Franciscans எனப்படும் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வருகிறார்கள். இயேசுகிறிஸ்து கூறின ஏழு வார்த்தைகளும் இந்த 14 நிலையங்களில் அடங்கி விடுகிறது. இந்த சிலுவை பாதை சரியானது அல்ல, மற்ற ஒரு பாதை உண்டு என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாயிருந்தாலும், இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றது உண்மை, அவர் கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டது உண்மை, அவருடைய பாடுகள் அத்தனையும் உண்மை! தம் ஜீவனை அந்த கொடிய குரிசில் பிதாவினிடம் அர்ப்பணித்து மரித்ததும் உண்மை, அப்படியே மூன்றாம் உயிரோடெழுந்ததும் உண்மை! ஆமென் அல்லேலூயா!

இயேசுகிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்ட இடம் வேறு இடம் என்று எருசலேமிலே வேறு ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறார்கள். அங்கு கபாலஸ்தலம் என்னும் இடத்திற்கு இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து செல்கிறார் (யோவான் 19:17) என்பதை வெளிப்படுத்தும்படியாக கபாலம் போன்ற ஒரு மலை இங்கு உள்ளது. மற்றும், அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது (யோவான் 19:41) என்பதை குறிக்கும் வகையில் ஒரு தோட்டமும் உள்ளது. இந்த இடத்தை பார்த்தால் இதுதான் சரியான இடமோ என்று தோன்றும். இந்த இடம் Garden Tomb என்றழைக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவன் சரீரத்தை வைத்த இடத்தை குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், ஒன்று மட்டும் சத்தியம், இயேசுகிறிஸ்து இரண்டு இடத்திலும் இல்லை. அவர் சாவை வென்று உயிரோடு எழுந்தார். ஆமென் அல்லேலூயா!

 ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே 
என் இயேசு குருசை சுமந்தே 
என் நேசர் கொல்கதா மலையின் மேல் 
நடந்தே ஏறுகின்றார் 

இந்த பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
 சொந்தப்படுத்தி ஏற்று கொண்டார் 
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை 
நேசித்து வா குருசெடுத்தே 

ஜெபம் 

எங்களைஅதிகதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். எங்களுக்காக பாவமறியாத இயேசுகிறிஸ்து கொடிய குருசை சுமந்து, போர் சேவகர்களால் வாரினால் அடிக்கப்பட்டு, நிந்தையை சுமந்தவராக கொல்கதா மலையின் மேல் ஏறி, சிலுவையில் அறையப்பட்டு, தம் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி அந்த கோர குருசிலே மரித்தாரே, எங்கள் பாவங்கள் அல்லவோ அவரது சரீரத்தில் ஆணிகளை கடாவ வைத்தது, எங்கள் பாவங்கள் அல்லவோ அவரை இந்த பாடுகளை சகிக்க வைத்தது. எங்களை மீண்டும் ஒரு விசை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறோம் தகப்பனே, எங்களை மன்னித்து உம்முடைய பிள்ளைகளாய் ஏற்று கொள்வீராக. இயேசுகிறிஸ்துவின் பாடுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த பாடுகளினாலே எங்களுக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்தீரே உமக்கு நன்றி. அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோமே அதற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் பாடுகளை சிந்திக்கிற ஒவ்வொருவரையும் இரட்சித்தருளும்.

Monday, 5 March 2012

மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். - (1 கொரிந்தியர் 15:3-5) 

 'அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்' (மத்தேயு 26:31-32) என்று இயேசுகிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்று ஆணித்தரமான விசுவாசம் இருந்தது. . ஆனால் ஒரே இராத்திரியில் எல்லாம் மாறுதலாக முடிந்தது. வியாழனன்று இராப்போஜனத்தை ஆசரித்த சில மணி நேரங்களில் யூதாஸ்காரியோத் கிறிஸ்துவை காட்டிக் கொடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, ஏரோதின் அரண்மனைக்கும், பிலாத்துவின் நியாயாசனத்திற்கும் முன்பு நிறுத்தப்பட்டு, அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிப் போல அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்தும் போனாரே என்று ஆதங்கத்தோடு பேதுரு நடந்த நிகழ்ச்சிகளை சிந்தித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். . இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவரோடு எந்த சீஷனும் இருக்கவில்லை யோவானைத்தவிர. பேதுருவும் கூட்டத்தோடு கூட்டமாக போய் விட்டிருந்தார். 

இயேசுகிறிஸ்துவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்டபோது, ஒரு சீஷரும் இருக்கவில்லை. 'சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான். அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்' (மத்தேயு 27:57-61). ஒரு சீஷனும் அவரை அடக்கம் செய்யும்வரைக் காத்திருக்கவில்லை.

 பேதுரு நடந்த காரியங்களை நினைத்தபடி ஆதங்கத்தோடு நடந்து கொண்டிருந்தார். கர்த்தரை மறுதலித்து விட்டோமே என்று மனதில் குற்ற உணர்ச்சியோடும், மனம் நிறைந்த துக்கத்தோடும், சனிக்கிழமை இரவு நெடுநேரம் தூக்கம் வராமல், திரும்பி திரும்பி படுத்து, கடைசியாக கண் அயர்ந்தபோது, விடிய ஆரம்பித்திருந்தது. அப்போது திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அதை கேட்டவுடன் பேதுருவின் இருதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது. ஐயோ அரசாங்க வீரர்கள் தன்னை கைது செய்துப்போகத்தான் வந்திருக்கிறார்கள் என்று பயப்பட ஆரம்பித்தார்.

 அதற்குள் மகதலேனா மரியாளின் சத்தம் கேட்டது. 'நான்தான் கதவை திறவுங்கள்' என்ற சத்தம் கேட்டு, எழுந்து கதவை திறந்து, 'என்ன இந்த காலையிலே' என்று கேட்டார். அதற்குள் மரியாள், மேல் மூச்சு வாங்க, 'இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து விட்டார்' என்று கூறினபோது, பேதுருவின் தூக்கம் எங்கோ ஓடிப்போனது. பக்கத்தில் படுத்திருந்த யோவானை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கல்லறை இருந்த இடத்திற்கு வேகமாக ஓடினார். . கிறிஸ்து வைக்கப்பட்டிருந்த கல்லறையை மூடியிருந்த கல் புரட்டபட்டு இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கு இயேசுகிறிஸ்துவை சுற்றி வைக்கப்பபட்டிருந்த சீலைகள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. 'பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்' (லூக்கா 24:12) ஆம், மீண்டும் பேதுரு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்காமல், இயேசுகிறிஸ்து நிஜமாகவே உயிர்த்தெழுந்து விட்டாரா என்று சந்தேகமும், வியப்பும், கலக்கமும் உடையவராக நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று இயேசுகிறிஸ்து அவருக்கு முன் தோன்றினார். 'கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்' (1கொரிந்தியர் 15:5).

 இயேசுகிறிஸ்து அவர் முன் தோன்றிய உடனேயே பேதுருவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கர்த்தரை மறுதலித்த தனக்கு, தகுதியில்லாத தனக்கு முன், தான் நேசித்த ஆண்டவர், தான் மரித்ததாக எண்ணியிருந்த கர்த்தர் தனக்கு முன் நிற்பதை கண்ட பேதுரு அவருடைய காலில் விழுந்து, சந்தோஷ மிகுதியால் கண்ணீர் விட்டார்.

 உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை கண்ட பேதுரு இயேசுகிறிஸ்து கர்த்தரை கண்டோம் என்று அப்படியே இருந்து விடவில்லை. மீண்டும், 'மீன்பிடிக்கப் போகிறேன்' என்று தன்னோடு சீஷர்களையும் அழைத்துக்கொண்டு சென்றபோது, இயேசுகிறிஸ்து தாம் அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தும்படி அவரை அழைத்து மீண்டும் தம் ஊழியத்தில் நிலைநிறுத்தினார். அதன்பின் பேதுரு திரும்பி போகவில்லை. கர்த்தருக்கு உண்மையாக இறுதிவரை வாழ்ந்து, தன்னை கிறிஸ்துவைப்போல சிலுவையில் அறையும்படி கொண்டுப்போகப்படும்போது, தான் கிறிஸ்துவைப்போல தன் தலை நேராக வைத்து அடிக்கப்பட பாத்திரவான் அல்ல என்று சொல்லி, தலைகீழாக தன்னை சிலுவையில் வைத்து அறையும்படி சொல்லி, அப்படியே அறையப்பட்டு, இரத்தசாட்சியாய் மரித்தார். 

பிரியமானவர்களே, இது ஒரு கதைப்போல இருந்தாலும், இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்தப்பின் பேதுருவிற்கு தனிப்பட்ட முறையில் தரிசனமானார் என்று 2 கொரிந்தியர் 15:5லும், லூக்கா 24:34லிலும் பார்க்கிறோம். கர்த்தரை மறுதலித்த பேதுருவையும் அன்புக்கூர்ந்து தம்முடைய ஊழியத்தில் நிலைநிறுத்தின கிறிஸ்து, ஒருவேளை அவரை விட்டுப்பிரிந்து தூரப்போயிருக்கிற நம்மையும் கூட திரும்ப அவருக்குள் நிலைநிறுத்த வல்லவராகவே இருக்கிறார்.

 ஒருவேளை நான் அதற்கு தகுதியல்ல என்று நினைக்கிறோமா? பேதுருவை அழைத்த தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். மீண்டும் அவருடைய அழைப்பிற்கு செவி சாய்த்து அவருடைய அன்பிற்குள் வந்து விடுவோம். கர்த்தர் ஒருபோதும் நம்மை தள்ளிவிட மாட்டார். அவருடைய ஊழியத்தில் நம்மை நிலைநிற்க வைத்து நிச்சயமாகவே அநேகருக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். ஆமென் அல்லேலூயா! 

ஜெபம் 

எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்துவை விட்டு பின் வாங்கி சென்ற பேதுருவிற்கு தரிசனம் கொடுத்து, மீண்டும் அவரை ஊழியத்தில் நிலைநிறுத்தின கிறிஸ்துவின் அன்பிற்காக நன்றி செலுத்துகிறோம். அதுப்போல கிறிஸ்துவின் மேல் வைத்திருந்த ஆதி அன்பை இழந்தவர்களாக அவருடைய ஊழியத்தில் நிலை நிற்காமல் பின்மாற்றத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தேவன் தாமே தொடுவீராக. மீண்டும் உம்முடைய அன்பிற்குள் அவர்கள் வந்துவிட அவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்வீராக. உமக்கென்று உண்மையாய் இறுதிநாள் வரை ஊழியம் செய்ய கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday, 4 March 2012

விரல் போனால் என்ன?

சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. - (2 தீமோத்தேயு 1:8). 

 அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர். ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார். குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே! 

 யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை. 'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார். விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரி;சுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை. 

ஊழியம் செய்ததனிமித்தம், வந்த நிந்தனையால், உபத்திரவத்தினால், சொந்த ஜனத்தாரின் அவமானப் பேச்சினால் சோர்ந்து போயுள்ள அருமை சகோதரனே, சகோதரியே, நான் சவுக்கடி பட்டால் என்ன, என் விரல் போனால் என்ன? என்று கேட்ட பக்தர்களின் வைராக்கியம் உங்களையும் பற்றி பிடிக்கட்டும். 'அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் என்ன? என்னை நிந்தித்தால் என்ன? நான் மீண்டும் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாய் செய்வேன். நான் மீண்டும் அங்கு செல்வேன். என் இலக்கு பூமிக்குரியதல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே! அதை யாரோ ஒருவரது வார்த்தைக்காக ஒருபோதும் இழக்க மாட்டேன்' என வைராக்கியமாய் இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடிருக்கிறார்! ஆமென் அல்லேலூயா! 

வியாதியோ வறுமையோ வேதனையோ 
எதுவும் பிரிப்பதில்லை 
உயிர் உள்ள வரை உம்மைத்தான் நேசிப்பேன்
 வேறெதற்கும் நான் அடிமைப்படேன் . 

என் நேசர் நீர் தானையா 
நேசிக்கின்றேன் உம்மைத்தானையா 

ஜெபம் 

எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, வியாதியோ, வேதனையோ எந்த பாடுகளுமோ உம்முடைய அன்பிலிருந்தும், உமக்கு நாங்கள் செய்யும் ஊழியங்களிலிருந்தும் பிரித்து விடாதபடி, உயிர் உள்ளவரை உம்மையே நேசித்து உமக்கே ஊழியம் செய்ய பெலனைத்தாரும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.