Search This Blog

Sunday, 4 May 2014

மறுரூபமான வாழ்வு

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2 கொரிந்தியர் 3:18). 

அழகிய வர்ணங்களில் பறந்த திரியும் வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போது, அதன் அழகில் நாம் மயங்குவது இயற்கை. அந்த அழகிய வண்ணத்துப்பூச்சி கிறிஸ்தவர்களை பிரதிபலிக்கிறது என்றால் ஆச்சரியம்தான்! 

வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்துவிடுகிறது. நாமும் நம் பாவத்தை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்ளும் அன்பின் தெய்வம் இயேசுவை விரும்பி ஏற்றுக் கொண்டு, அவரோடு ஜெபத்தின் மூலம் நெருங்கி ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும். 

அடுத்து முட்டைகளை பொரிப்பதற்கு காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் அனுபவித்த வார்த்தையாக இருக்க வேண்டும். ஆம், நம் வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைப்பது போன்று நடந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் கர்த்தரின் வேளைக்காக காத்திருக்க வேண்டும். 

பின் குறித்த காலத்தில் முட்டை பொரிந்து புழு வெளிவரும். அதன் முக்கிய வேலை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். உணவாக சாப்பிடும் இலையைத் தேடிக் கொண்டே இருக்கும். நாமும் அன்றாடம் நம்முடைய ஆவிக்குரிய உணவை வேதத்தில், ஆவிக்குரிய புத்தகங்களில், ஐக்கியங்களில் தேடி அதில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

அப்படி வளர்ந்து வருகிற வேளையில்தான், முக்கியமான மாற்றம் உண்டாகிறது. முன்னிருந்த உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடி அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகிறது. 

கர்த்தரோடு ஜெபத்தில் இணைந்திருந்த நாம், வேதத்தின் வசனத்தை உணவாக உண்ட நாம், வளர்ந்த விசுவாசியாக, இப்போது, கர்த்தருக்காக உழைப்பவர்களாக மாறிவிடுகிறோம். அவருடைய சாயலை பிரதிபலிக்கிறவர்களாக, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். எத்தனை ஆச்சரியம்! 

இப்படிப்பட்ட வாழ்க்கைக்கே ஒவ்வொருவரையும் கர்த்தர் அழைக்கிறார். நான் புழுவாகத்தான் இருப்பேன் என்று அந்த நிலையிலேயே இருப்பதினால் எந்த பிரயோஜனமும் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடித்து பறக்க வேண்டும். கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக நம் வாழ்க்கை மாற வேண்டும். அதனால் கர்த்தர் மகிமைப்படுவார். அவருடைய வருகையில் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் அவருடனே நாமும் பறப்போம். ஆமென் அல்லேலூயா! 

மறுரூபமாக்கிடும் 
மகிமையின் மேகமே 
முகங்கள் மாறணுமே 
ஒளிமயமாகணுமே 

மேகமே மகிமையின் மேகமே 
இந்த நாளிலே இறங்கி வாருமே 
மேகமே மகிமையின் மேகமே 
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்முடைய சாயலாக மாற தேவ ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்வாராக. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்படி ஒவ்வொரு நிலையிலிருந்து முன்னேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறதோ அதைப்போல நாங்களும் எங்கள் ஆதி நிலையிலிருந்து மறுரூபமாக்கப்பட்டு, மகிமையான சரீரத்தில் கிறிஸ்துவின் வருகையில் காணப்பட எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment