கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர்கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். - (2 தெசலோனிக்கேயர் 3:1-2).
கனடாவிலிருந்த ஒரு சபையிலிருந்து நைஜீரியாவிற்கு ஒரு தம்பதியினர் மிஷனெரிகளாக அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் சீக்கிரமாய் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டு, ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களது ஊழியத்தின் மூலமாய் அநேகர் கர்த்தரை அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
.
சில வருடங்கள் கழித்து, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது. பின் அதன் தாயும் வியாதிப்பட்டு, மரித்துப் போனார்கள். அந்த ஊழியர் மிகவும் மனம் உடைந்தவராக யாருக்கும் சொல்லாமல், மீண்டும் கனடாவிற்கு வந்தார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் சபைக்கு சென்றார். சபை வழக்கம் போல நடந்தது. முடியும் தருவாயில் சபை போதகர், 'நாம் முடிக்க போகிறோம், ஏதாவது உண்டா சொல்வதற்கு' என்று கேட்டார். சபை அமைதியாக இருந்தது. அவர் ஆசீர்வாதத்தை கூறுமுன், பின்னால் இருந்து ஒருவர் விசும்பும் சத்தம் கேட்டது. தொடந்து, அந்த மிஷனெரி கதறி அழ ஆரம்பித்தார்.
யாருக்கும் அவர்தான் தாங்கள் அனுப்பின மிஷனெரி என்று தெரியாது. அவர் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தபடியால். பக்கத்தில் ஒரு சகோதரர் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொல்வதற்கு நிமிர்ந்தபோதுதான் அவர் தாங்கள் அனுப்பி வைத்த மிஷனெரி என்று எல்லாருக்கும் தெரிய வந்தது.
மிஷனெரி அழுது முடித்தப்பின், முகத்தை துடைத்து, எழுந்து நின்று, சபையாரை பார்த்து, 'நான் உங்களை சில வருடங்களுக்கு முன் பார்த்தபோது, நீங்கள் எல்லாரும் என்னையும் என் மனைவியையும் அன்போடு மிஷனெரிகளாக அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் அனைவரும் ரயில் நிலையம் வரை வந்து உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் சொன்னமாதிரி இரண்டு மூன்று வருடங்கள் ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தர் அந்த ஆண்டுகளில் அநேக ஆத்துமாக்களை கொடுத்தார். பின் நீங்கள் ஜெபிக்காமற் போனபோது, நான் அநேக இழப்புகளை சந்திக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் நினைத்தேன், என்னுடைய தவறுகளோ, பாவமோ ஏன் இப்படி தொடர்ந்து இழப்புகள் என்று, இன்றுதான் தெரிந்தது, நீங்கள் எங்களுக்காக ஜெபிக்கவில்லை என்று. நான் வந்த நேரத்தில் இருந்து பார்க்கிறேன், எங்களுக்காக ஒருவர் கூட ஜெபிக்கவில்லை என்பதை காண்கிறேன்' என்று கூறினார். சபையார் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.
பிரியமானவர்களே, நாம் அனுப்பும் ஊழியர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோமா? நம் ஜெபங்கள்தான் அவர்களை எல்லாவிதத்திலும் தாங்குகின்றன. நாம் ஜெபிக்காவிட்டால், கர்த்தரால் அங்கு செயல்பட முடியாது. நம்முடைய ஜெபங்கள் அத்தனை இன்றியமையாதது.
நம்மால் அங்கு சென்று ஊழியம் செய்ய முடியாது. ஆனால் ஜெபிக்க முடியுமல்லவா? தினமும் நம்முடைய ஜெபங்களில் இப்படிப்பட்ட ஊழியர்களை நினைக்க வேண்டும். நான் ஜெபித்தால் என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, நாம் ஜெபிக்காமல் விட்டால், களத்தில் இருக்கும் அவர்களுக்கு யார் துணை செய்ய முடியும்? யார் உதவ முடியும்?'
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்' (அப்போஸ்தலர் 12:5). சபையார் ஊக்கமாக ஜெபித்தபடியால், தேவன் தூதனை அனுப்பி பேதுருவை விடுதலை செய்தார்.
அதுப்போல சபையாக, குழுக்களாக, தனியாக நாம் ஜெபிக்கும் ஜெபங்கள் மிஷனெரிகளை தாங்கும், ஆபத்திலிருந்து தப்புவிக்கும், பொல்லாதவர்களின் கரங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும், பாவத்திலிருந்து அவர்களை காத்துக் கொள்ளும். அதிசயங்களை செய்ய வைக்கும். வியாதியில் விழுந்து விடாதபடி அவர்களை பாதுகாக்கும்.
நம் ஜெபம் என்னும் கவசத்தினால், ஊழியர்களை தாங்குவோமா? கர்த்தர் கேட்டு, அவர்களுடைய தேவைகளை சந்திப்பார். காத்துக் கொள்வார். நாம் ஜெபிக்காவிட்டால், கனடாவில் அனுப்பப்பட்ட மிஷனெரி போல எனக்காக, எங்களுக்காக ஜெபிக்க மறந்தீர்களே என்று நம்மிடம் சொல்லும்போது, நாம் பதில் என்ன சொல்ல முடியும்? ஜெபிப்போம், ஜெயம் எடுப்போம். ஆமென் அல்லேலூயா!
திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்
எழுப்புதல் தனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்
ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மிஷனெரிகளாய், ஊழியர்களாய் நாங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கர்த்தரை அறிவிக்கிற பாத்திரங்களாக செல்லும் ஒவ்வொருவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களை ஜெபத்தில் தாங்குவது எங்களது கடமை என்பதை உணர்ந்து, அவர்களுக்காக உண்மையாக ஜெபிக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் ஜெபிக்க மறந்தால் அவர்கள் அநேக இழப்புகளை சந்திக்க நேரிடுமே, அவர்களது பாதுகாப்பிற்காகவும், அவர்களது தேவைகளுக்காகவும், சுகபெலன் ஜீவனுக்காகவும் தொடர்ந்து நாங்கள் ஜெபித்து அவர்களை தாங்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment