Search This Blog

Saturday, 2 April 2011

சபை

1. எல்லா சபைகளையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.


2. கர்த்தருடைய மணவாட்டி சபைகளாக ஒவ்வொரு சபையும் விளங்கத்தக்கதாகவும், அவருடைய வருகையில் எடுத்து கொள்ளப்படத்தக்கதாக ஆயத்தமாக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு சபையும் விளங்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.


3. சபைகளில் ஊழியங்கள் பெருகத்தக்கதாக ஜெபிப்போம். சபை விசுவாசிகள் ஊழிய வாஞ்சையோடு, ஒருவருக்கொருவர் அன்போடும், தாழ்மையோடும், மற்றவர்களை கனத்தோடு எண்ணுகிறவர்களாகவும், ஆத்தும பாரத்தோடு ஜெபிக்கிறவர்களாகவும் விளங்க ஜெபிப்போம்.


4. சபை போதகர்களை கர்த்தர் பலமடங்கு ஆசீர்வதிக்கத்தக்கதாகவும், போதகர்களின் ஒவ்வொரு பிரசங்கங்களும், விசுவாசிகளை தட்டி எழுப்பத்தக்கதாகவும், சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் போதகர்களாக விளங்கவும் ஜெபிப்போம்.


5. ஒவ்வொரு சபையிலும் ஆத்துமாக்கள் பெருகத்தக்கதாகவும், சத்தியத்தை கேட்டு அதன்படி கீழ்ப்படியத்தக்க இருதயத்தை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் தேவன் கொடுக்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.

இதுவே நொறுங்குதல்

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - (சங்கீதம் 51:17).


தேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கம் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா? அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா? நொறுங்குதல் என்றால் என்ன? இந்த நொறுங்குதலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல! ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரிடமிருந்து ஏற்பட்ட பிரதிபலிப்பிலிருந்து இதற்கான விடையை தெளிவாக காணலாம்.

என் சாட்சி வாழ்விற்கு களங்கம் கற்பிக்கப்படும் போதும், வேண்டுமென்றே என்னைக் குறித்து பொய்யாய் திரித்து பேசப்படும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, என் இயேசுவும் அவ்வாறு பொய்யாய் குற்றம் சாட்டப்படுகையில் வாய் திறவாமல் இருந்ததை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் குற்றம் சாட்டப்பட்டதை சிறிதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுகொண்டேன். இதுவே நொறுங்குதல்.

பகிரங்கமாய் என்னை உதாசீனம் செய்துவிட்டு எனக்கு முன்பாக வேறொருவரை உயர்த்தும்போது, என்விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து அவரையும் ஜனங்கள்இவரை அகற்றும், பரபாசை எஙகளுக்கு விடுதலையாக்கும்என சத்தமிட்டதை நினைவுகூர்ந்தேன். அப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் தள்ளுண்டதை ஏற்றுக் கொளகிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்

நான் ஒழுங்குபடுத்திய திட்டங்கள் அனைத்தும் நசுங்குண்டு, நான் பல்லாண்டுகளாக பிரயாசப்பட்ட என் உழைப்புகள் அத்தனையும் சிலருடைய சுயநல விருப்பத்தால் நாசமாக்கப்பட்டதை காணும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கிப் பார்த்து, தன்னைப் புறம்பே தள்ளி சிலுவையில் அறைந்தவர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தோல்வி என கருதப்பட்ட ஸ்தானத்தை அவர் ஏற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தேன். இப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கொஞ்சமும் கசப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

தேவனோடு சீர் பொருந்தி பரிசுத்தமாய் வாழ்வதற்கு பிறரிடம் மன்னிப்பு கேட்டு இவ்வொப்புரவாகுதலின் தாழ்மை வழியை நான் நிச்சயமாய் கடந்து சென்றே ஆகவேண்டும் என்று அறிந்த போது, என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, இயேசுவும் தன்னைத்தானே வெறுமையாக்கி, சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்து தன்னைத்தானே தாழ்த்தினார் என்ற வசனத்தை நினைவு கூர்ந்தேன். இவ்வித ஒப்புவாகுதலால் பகிரங்கமாக்கப்படும் என் அவமானத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

ஒருவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதமானது இனி மன்னிக்கவே முடியாது என்ற உச்சக்கட்டத்தை எட்டும்போது மனம் வெதும்ப என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, அவர் கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்ட போதும் 'பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள்செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என ஜெபித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது என் சிரம்தாழ்த்தி, மற்றவர்களின் எப்பேர்ப்பட்ட கொடிய செய்கைகளும் என் அன்பின் பிதாவின் அனுமதியுடனேயே சம்பவிக்கிறது என ஏற்றுக்கொண்டேன். இதுவே நொறுங்குதல்.

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். - (1 பேதுரு 2:21-23)

இதுபோன்று எல்லாவிதத்திலும் இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்து நமக்கு முன்மாதிரியாக நொறுக்கப்பட்டார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். - (எபிரேயர் 4:15). ஆகவே சோர்ந்து போகாதிருப்போம். நம் பிரச்சனையில் கர்த்தர் நம்முடனே இருக்கிறார். அல்லேலூயா!

கிறிஸ்துவின் பொருட்டு நொறுக்கப்பட்டால்

பாக்கியம் நமக்கு பாக்கியமே

சோர்ந்து போகாதே நீ

சோர்ந்து போகாதே

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

இந்த லேசான உபத்திரவம்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும்; எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் படும் எந்த பாடுகளையும் எங்கள் இயேசு முதலிலே சுமந்து தீர்த்துவிட்டார் என நாங்கள் அறியும்போது, எங்கள் பாரங்கள், எங்கள் சுமைகள் எங்களுக்கு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. எங்கள் பாடுகளின் மத்தியில் அதை மாற்றுவதற்கும் எங்களை தேற்றுவதற்கும் எங்கள் இரட்சகர் எங்களுக்கு இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, 1 April 2011

பொதுவாக ஜெபக்குறிப்பு

1. கர்த்தரை ஏற்று கொள்ளாமல், நித்திய அழிவிற்கு நேராக சென்ற கொண்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவிற்காகவும் ஜெபிப்போம்.


2. நாம் பெற்று கொண்ட இரட்சிபை அந்த ஆத்துமாக்களும் பெற்று கொள்ள வேண்டுமே என்று மனபாரத்தோடு கர்த்தரிடம் மன்றாடுவோம்.


3. கிறிஸ்துதான் வழி என்று அறியாதபடி வேறு எத்தனையோ வழிகளில் பரலோகத்தை தேடி அலைந்து திரிகிற ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் கிறிஸ்துதான் வழி என்பதை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.


4. போதை மருந்துகளுக்கும், குடிப்பழக்கத்திற்கும், கெட்ட காரியங்களுக்கு அடிமையான ஒவ்வொருவரையும், தேவன் விடுவிக்கத்தக்கதாக, அவர்கள் மனம் திரும்பத்தக்கதாக ஜெபிப்போம்.

ஒருமனம் ஒற்றுமை

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். - (யோவான் 17:22).


கோல்டன் கேட் பாலம் எனப்படும் சான் பிரான்சிஸ்கோவின் மிகப்பெரிய பாலம் மிகவும் அதிகமான போக்குவரத்து நடைபெறும் பாலமாகும். அது அத்தனை அதிக போக்குவரத்து உடையதாய் இருந்தாலும் இரண்டு உறுதியான கம்பி கயிறுகளால் மட்டுமே இது தாங்கப்பட்டு வருகிறது. இரண்டு கம்பி கயிறுகள் தாங்கினாலும், ஒரு கம்பி கயிற்றில் மாத்திரம், சுமார் 20,000த்துக்கும் மேலான சிறு சிறு கம்பி வடங்கள், ஒன்றாக இணைத்து பின்னப்பட்டு, ஒரே உறுதியான கம்பி கயிறாக மாற்றப்பட்டு, அந்த பெரிய பாலத்தை தாங்குகிறதாயிருக்கிறது. அதில் ஒரு சிறு கம்பி வடம் ஒரு புதிய காரை தாங்கும் திறனுடையது. எத்தனைதான் போக்குவரத்து இருந்தாலும் எந்தவித தடங்கலுமின்றி, எந்தவித பாதிப்பும் இன்றி இந்த கம்பிகயிறுகள் பாலத்தை உறுதியாய் தாங்குகிறவைகளாய் இருக்கின்றன.

அதைப்போலத்தான், ஒவ்வொரு சிறு கம்பிவடங்களை போல ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும், கர்த்தர் கொடுத்த தாலந்துகளினால், கர்த்தர் கொடுத்த கிருபை வரங்களினால் நிறையப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனோடு இணைந்து ஒரே கம்பி கயிறாக மாற்றப்படும்போது, தேவனுக்காக பெரிய காரியங்களை செய்கிறவர்களாக மாறுகிறார்கள்.

தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாலந்துகளை கொடுத்திருக்கிறார். யாரும் எனக்கு எந்த தாலந்தும் இல்லை என்று கூறவே முடியாது. ஆனால் தேவன் தங்களுக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிகள் உணர்வதில்லை. தங்களால் தேவனுக்கென்று பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று விசுவாசிப்பதும் இல்லை. காலம் முழுவதும் கேட்கிறவர்களாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வசனம் கேட்கும்போதுதான் விசுவாசம் பெருகும். வசனத்தை கேட்டப்பின் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்கவே வேண்டும். அப்படியே மாணவர்களை போல உட்கார்ந்து கேட்டு கொண்டே இருக்க கூடாது.

இஸ்ரவேலில் சவக்கடல் என்று ஒரு கடல் இருக்கிறது. அதில் அதிக உப்பேறி இருப்பதால் அதன் நீர் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இந்த கடலில் யோர்தான் நதியின் தண்ணீர் விழுகிறது. மழை நீரும் அதில் விழுகிறது. ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்ட கடல், ஒன்றுக்கும் பயனில்லாமல், விவசாயத்திற்கோ, உயிரினங்கள் வாழ்வதற்கோ பயனில்லாதவாறு வெறுமனே இருக்கிறது. அதுப்போல நாமும் வசனங்களை கேட்டு அதன்படி செய்யாமலோ, கர்த்தருக்காக எதையாவது செய்யாமல் போனாலோ, நாம் கேட்டு கொண்ட வசனங்களினால் யாருக்கும் பயனில்லாமல் போகும்.

தாலந்துகளாலும் கிருபை வரங்களாலும் நிறைந்த விசுவாசிகளும், தேவ பிள்ளைகளோடு இணைந்து சபையில் இருந்து ஊழியத்தை செய்ய வேண்டும். எனக்கு வசனம் தெரியும், தேவன் எனக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார், நான் யார் கீழ் இருந்தும் ஊழியம் செய்ய தேவையில்லை என்று போவோமானால், அது கர்த்தருக்கு வருத்தத்தையே கொடுக்கும். தேவன் சபையின் பக்திவிருத்திக்காகத்தான் ஊழியங்களை கொடுத்திருக்கிறார். 'பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்' (எபேசியர் 4:12-13) என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

தேவன் கொடுத்த ஊழியங்களை சபையில் இருந்து, மற்ற விசுவாசிகளோடு ஒன்றிணைந்து ஒரே தேவனுடைய பிள்ளைகளாக அவற்றை நிறைவேற்ற வேண்டும். தேவனோடு நாம் இருந்து செய்யும்போது நாம்தான் ஹீரோ, தேவன் இல்லாமல் நாம் செய்யும் எந்த காரியமும் ஜீரோதான்.

சபையில் சக விசுவாசிகளோடு ஐக்கியமாயிருக்க வேண்டும். ஒன்றாக இணைந்த கம்பி வடங்களே, பெரிய உறுதியான கம்பிகயிற்றுக்கு உறுதியை கொடுக்கின்றன. ஆப்படி கம்பி வடங்கள் தனித்தனியாக இருந்தால், அது ஒரு கார் போவதற்குள் அறுந்து விழுந்து விடும். அதுப்போல சபையின் விசுவாசிகளுக்குள் ஒரு மனம் மிகவும் முக்கியம். ஒரு மனம் இருக்கும் இடத்தில் ஆவியானவர் பெரிய காரியங்களை செய்வார். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபையில் ஒருமனதோடு அவர் நாமத்தை உயர்த்துவோமாக! தேவனின் நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு

ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

..

இனிவரும் நாட்களில் நமது கடன்

வெகு அதிகம் விசுவாசிகளே

நம்மிடம் உள்ள ஐக்கியமே

வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

..

இருள் சூழும் காலம் இனிவருதே

அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்

திறவுண்ட வாசல் அடைபடும் முன்

நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்



ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, விசுவாசிகள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, மற்றவர்களை கனப்படுத்தவும், அன்பு கூரவும் இருதயங்களில் அன்பை ஊற்றுவீராக. ஒரு மனதை கட்டளையிடுவீராக. ஓற்றுமையோடு இந்த கடைசி நாட்களில் உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. போட்டிகளையும் பொறாமைகளையும் மாற்றி ஒருவரையொருவர் நேசிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, 31 March 2011

கண்ணீரோடு வாழ்கிற மக்களுக்காக

இந்த நாளில் சரீரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு, கண்ணீரோடு வாழ்கிற மக்களுக்காக ஜெபிப்போம்.


1. விதவைகளுக்காக, தகப்பனை இழந்து தவிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்காக, கணவனை இழந்து சம்பாதிக்க வழி தெரியாமல் தவிக்கிற ஒவ்வொரு விதவைகளுக்காக, இளவயதில் கணவரை இழந்து தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு விதவைகளுக்காக ஜெபிப்போம்.


2. அனாதைகளுக்காக, தங்களை அரவணைப்பாரில்லாமல், நேசிக்க யாருமில்லாமல், அனாதை இல்லங்களில் வாழ்ந்து வருகிற அனாதை பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.


3. ஊனமுற்றவர்களுக்காக, ஒரு வேளை உணவில்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்காக ஜெபிப்போம்.


4. மனநிலை பாதிக்கப்பட்டு துன்பப்படுகிறவர்களுக்காக, தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்காக ஜெபிப்போம்.


5. ஆஸ்பத்திரியில் மரண வேதனையில் துடிப்பவர்களுக்காக, கேன்சர் வியாதியில் நாட்களை எண்ணி கொண்டு இருப்பவர்களுக்காக, வியாதியின் கொடூர பிடியில் சிக்கி வேதனையோடு நாட்களை கடத்தி கொண்டு இருப்பவர்களுக்காக தேவன் அவர்கள் வேதனைகளை நீக்கி சுகம் தரத்தக்கதாக ஜெபிப்போம்.

இதயங்கள் மலரட்டும், முகங்கள் சிரிக்கட்டும்

அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். - (சங்கீதம் 126:2).


ஒரு ஆசிரியரும், ஒரு டாக்டரும், ஒரு வக்கீலும் மரித்து, பரலோகம் சென்றார்களாம். அங்கு அவர்கள் போனபோது, அங்கு வாசலை காப்பவர், இங்கு உள்ளே நுழைய வேண்டுமென்றால், 'நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் அனுமதி இல்லை' என்று கூறினார். சரி என்று இவர்கள் கூறவும், ஆசிரியரிடம், 'ஒரு பெரிய கப்பல் பனி மலை மேல் மோதி மூழ்கி போனதே அந்த கப்பலின் பெயர் என்ன' என்று கேட்டார். அதற்கு ஆசிரியர் 'டைடானிக்' என்று கூறியவுடன், கதவை திறந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அடுத்ததாக டாக்டரிடம், 'அதில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்' என்று கேட்க, அவரும் பட்டென்று, சுமார் 1500 பேர் என்று கூறினவுடன், அவருக்கும் வாசல் திறக்கப்பட்டது. இப்போது வக்கீல் மிகவும் குஷியுடன், இத்தனை எளிதான கேள்விதானே என்று நினைத்து கொண்டு, என்ன கேட்க போகிறார் என்று ஆவலோடு பார்த்தபோது, அந்த காவல் காப்பவர், 'அந்த மரித்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றையும் சொல்' என்றவுடன் பார்க்க வேண்டுமே அவர் முகத்தை!

நாம் சிரிக்க வேண்டும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று தமிழில் பழமொழி சொல்வார்கள். நாம் சிரிக்கும்போது, நம்மிடத்தில் இருக்கிற டென்ஷன், கவலை, பயங்கள் மற்றும் சோர்வுகள் நீங்கி போகும். சிரிக்கும்போது, நம் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல் நன்கு விரிவடைந்து, நன்கு மூச்சு எடுக்க முடியும். நல்ல இரத்த ஓட்டம் உண்டாகும். முறுக்கேறின தசைகள்; தளர்ச்சி அடையும். நம்முடைய நாடி துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

கோபப்படும்போது நாம் உடல் இரத்த அழுத்தம் அதிகமாகி, சில வேளைகளில நாம் என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்து விடுகிறோம். அது நம் உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். ஆனால் சிரிக்கும்போதோ, நாம் நமது கவலைகளை எல்லாம் மறந்து நம்முடைய இறுக்கமான சூழ்நிலைகள் மாறி, நாம் சந்தோஷமாய் இருக்க முடியும்.

சரி, எதை வைத்து சிரிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். சிலர் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் அதில் வெளிவரும் காமெடிகளை பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். நான் சிரிக்கத்தானே செய்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம் (நீதிமொழிகள் 14:13) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டு அவற்றை பார்த்து கொண்டிருந்தால், அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலமே! 'பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராக்கூடாது' என்று வேதம் கூறுகிறது. மற்றவர்களை பரியாசம் செய்து சிரிக்க வைக்கும் எதிலும் நாம் பங்கு பெற கூடாது.

எந்த மொழியிலும் மற்றவர்களை பரிகசியாமல், அசுத்தங்களில்லாத நம்மை சிரிக்க வைக்க கூடிய எத்தனையோ காரியங்கள் உண்டு. அவற்றை நாம் பார்க்கலாம், படிக்கலாம், சிரிக்கலாம்.

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் (நீதிமொழிகள் 17:22) என்று வேதம் கூறுகிறது. சிலர் தங்கள் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சிரித்தால் தங்கள் பரிசுத்தம் கெட்டு போய் விடும் என்று அவர்கள் நினைப்பார்கள் போலிருக்கிறது. 'அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது' என்று வேதத்தில் காண்கிறோம். வாய்க்குள்ளே சிரித்தால் ஆனந்த சத்தம் வராது. தேவன் வாய் விட்டு சிரிப்பதை அனுமதிக்கிறார் என்பதை இந்த வசனத்திலிருந்து காண்கிறோம்.

'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). இந்த வசனத்தை படித்தபோது என்னில் ஒரு ஆச்சரியம் எழுந்தது. சந்தோஷமாயிருப்பதற்கு நாம் என்னென்ன வார்த்தைகள் வைத்திருக்கிறோமோ அத்தனையும் இந்த வசனத்தில் வருகிறது. மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம், சந்தோஷம்! இவையெல்லாம் யாருக்கு? நீதிமான்களுக்குத்தான்! நீதிமான்களுக்கென்று தேவன் அத்தனை சந்தோஷத்தையும் வைத்திருக்கிறார். யாருக்கு முன்பாக? சினிமா மற்றும் டிவிக்கு முன்பாகவா சந்தோஷத்தை தேவன் வைததிருக்கிறார்? இல்லை! ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் ஆனந்த சந்தோஷமடைவார்கள்! எவ்வளவு நல்ல தேவன், எத்தனையாய் நாம் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தேவன்!

சிலர் சிறு காரியத்திற்கும் பயங்கர டென்ஷன் ஆவார்கள். நாம் உண்மையான கர்த்தருடைய பிள்ளைகளாய் இருந்தால், நம்முடைய தேவனுடைய கரத்திற்கு மீறி எதுவும் நடக்க போவதே இல்லை! தேவையில்லாத டென்ஷன்களை நம்மிடத்தில் இருந்து மாற்றி, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்போம். வாய் விட்டு சிரிப்போம். மனமகிழ்ச்சியாய் இருப்போம். தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தமாய் சந்தோஷமாயிருக்க தேவன் தானே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

சந்தோஷமாயிருங்க

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும், தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

..

என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்துபோகாதீங்க

நம்மை அழைத்த தேவன்

கைவிடமாட்டார்சந்தோஷமாயிருங்க


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் சந்தோஷமாய் இருப்பதை நீர் விரும்புகிற தேவனாய் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வேதத்தில் எழுதியிருக்கிறபடி நாங்கள் எப்போதும் மனமகிழ்ச்சியோடு இருக்க கிருபை செய்யும். நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள் என்ற வசனத்தின்படி நாங்கள் உம்மில் களிகூர கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, 30 March 2011

இந்தியா

இந்த நாளில் தேவன் எழுப்பி தந்துள்ள ஊழியங்களுக்காக தேவனை துதிப்போம், ஜெபிப்போம்.


நம் இந்திய தேசத்தில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். டெலிவிஷன் மூலமாக, கன்வென்ஷன் கூட்டங்கள் மூலமாக, டிராக்ட் மூலமாக செய்யப்படும் ஊழியங்களுக்காக புத்தக ஊழியங்களுக்காக, சிறைச்சாலைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, குருடர் மத்தியில் நடக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அவற்றை செய்கிற ஒவ்வொருவரையும், தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய தேவைகளை கர்த்தர் அதிசயவிதமாக சந்திக்கவும் ஜெபிப்போம்.


1. செய்யப்படும் ஊழியங்களில் அற்புத அதிசயங்களை தேவன் செய்ய ஜெபிப்போம்.


2. அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.


3. சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு காணப்படும் தடைகள் தகர்ந்து போக ஜெபிப்போம்.


4. அறுவடைக்கு ஆட்களை தேவன் எழுப்பவும், ஊழியர்களுக்காக ஜெபிக்கிற ஜெப வீரர்களை தேவன் எழுப்பவும் ஜெபிப்போம்.

சாத்தானின் தந்திரங்கள்

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. - (1 யோவான் 2:15).


நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.

இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.

இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

'அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்' (ஆதியாகமம் 3:6). அந்த கனி அவளுடைய கண்களுக்கு இன்பமாயிருந்ததாம், இச்சிக்கப்பட தக்கதாய் இருந்ததாம், அதாவது விரும்பத்தக்கதாக இருந்ததாம். அந்த பிசாசின் தந்திரத்தை அவள் நம்பி, அதை புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆதனால் பாவமும் சாபமும் உலகத்திற்குள் நுழைந்தது.

எப்படி அந்த குதிரை அந்த டிராய் நகருக்குள் தந்திரமாய் நுழைந்து, பேதைகளாயிருந்த டிரோஜானியரை எப்படி ஏமாற்றியதோ, அப்படியே சத்துருவும், கண்களுக்கு இன்பம் காட்டி, ஆசை வார்த்தைகளை பேசி, உள்ளே நுழைவான். ஆனால் அவன் வந்த பின், தருணம் பார்த்து, வெளியே வந்து, எல்லாவற்றையும் அழித்து போடுவான். சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரிந்தியர் 11:14) என்று வேதம் நமக்கு கூறுகிறது. நல்லனை போல நடித்து, அவன் காரியத்தை சாதித்து கொள்வான். சில வேளைகளில் நல்ல நண்பனை போல இருந்து நம்மை ஏமாற்றுவான். சில வேளைகளில், நல்லவனை போல நல்ல வார்த்தைகளை பேசி மயக்கலாம். சில வேளை நல்ல ஆலோசனை கூறுவது போல இருக்கலாம். ஆனால் அவனுக்கு பின்னாக இருப்பது நயவஞ்சகமாகும். 'சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே' (2கொரிந்தியர் 2:11). அவனுடைய தந்திரங்களை அறிந்த ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழித்திருந்து ஜெபித்து பிசாசானவனை எதிர்த்து நிற்க வேண்டும். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். - (மத்தேயு 26:41).

நம் கண்களுக்கு எத்தனை இன்பமானதாய் இருந்தாலும், எவ்வளவுதான் இச்சிக்கப்பட தக்கதாக இருந்தாலும், அது எந்த மனிதனாகவோ, அல்லது மனுஷியாகவோ எந்த காரியமாகவோ இருந்தாலும் அதை நாம் நமக்கென்று எடுத்து கொள்வதற்கு முன் ஜாக்கிரதையாக நாம் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். உடனே அதற்கு நம்மை விட்டு கொடுத்து விடக்கூடாது. அதற்கு தேவ ஆலோசனையும், தேவ சமுகத்தில் தேவ மனிதர்கள் தருகிற ஆலோசனையோடும், வேதத்தில் தேவன் கற்று தருகிற காரியங்களையும் ஜெபத்தோடு பெற்று நம் வாழ்வில் சாத்தானின் தந்திரங்களிலிருந்து ஜெயமெடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே

ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே

ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே

ஆவிகளின் சேனைகளை வெல்வோமே

கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவா

..

கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே

கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே

கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே

கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்

கர்த்தர் வல்ல யுத்த வீரரே

..

யெகோவாநிசி யெகோவாநிசி

யெகோவாநிசியை யெகோவாநிசியை

ஏற்றிப் பாடுவோம்

எங்கள் கொடி வெற்றிக் கொடியே

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, இந்த உலகத்தில் நாங்கள் சாத்தானுடன் நடத்தும் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயமெடுக்க எங்களுக்கு உதவி செய்யும். அவனுடைய தந்திர ஆலோசனைகளுக்கு எங்களை விலக்கி காத்து கொள்ள ஏற்ற ஞானத்தை எங்களுக்கு தருவீராக. சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய எங்களுக்கு ஆவியானவரின் ஒத்தாசையை நாள்தோறும் தருவீராக. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை எதுவும் எங்களை தொடாதபடிக்கும், உலகத்திலும் அதிலுள்ளவைகளிலும் நாங்கள் அன்பு கூராதபடிக்கும் எங்களை காத்து கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, 29 March 2011

திருச்சபை

இந்த நாளில் தேவன் எழுப்பி தந்துள்ள எல்லா திருச்சபைகளுக்காகவும் தேவனை துதிப்போம், ஜெபிப்போம்.


1. தேவன் நாம் ஆராதிக்கும்படியாக நமக்கென்று கொடுத்திருக்கிற ஒவ்வொரு சபைக்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்போம்.


2. சபைகளில் தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து தம்முடைய வார்த்தையை தம்முடைய ஊழியக்காரர் மூலம் உறுதிப்படுத்த ஜெபிப்போம்.


3. சபைகள் இல்லாத இடங்களில் தேவன் சபைகளை எழுப்பித்தர ஜெபிப்போம்.

4. சபைகளை நடத்துகிற போதகர்கள், மேய்ப்பர்கள், மூப்பர்கள் பாவத்தில் விழாமல், உண்மையோடும், சத்தியத்தை சத்தியமாக போதிக்கவும், கர்த்தருடைய வார்த்தையை எந்தவித கலப்பும் இல்லாமல், கள்ள போதகங்களை செய்யாமல், கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் போதிக்கும்படி ஜெபிப்போம்.


5. சபைக்கு வருகிற ஆத்துமாக்கள் சத்தியத்தை கேட்டு, அதை விசுவாசித்து இரட்சிப்படையவும், தேவ நாம மகிமைக்கென்று அநேக ஆத்துமாக்களை தேவ சபையில் கொண்டு சேர்க்கவும் ஜெபிப்போம்.

வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை

இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. - (பிரசங்கி 12:7).


ஒரு சுவிசேஷகர் உல்லாசமாய் தன் வாழ்வை நடத்தி கொண்டிருந்த ஒரு வாலிபனிடம் போய், 'நீ மனம் திரும்பி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள். அவரே உன் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வை தருவார்' என சுவிசேஷத்தை அறிவித்தார். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'வாலிபம் வாழ்வதற்கே, நான் வயதானபின் ஆண்டவரை ஏற்று கொள்வேன்' என்றான். ஆம்; உலக மக்கள் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள். 'வயதானப்பின் கோவில் குளம் என்று சுத்து' என்பதுதான் நம் நாட்டவரின் சகஜ பேச்சு. எனக்கு தெரிந்த 80 வயதான ஒருவர், நடக்கவே முடியாத நிலை, உடலில் வேறு வியாதிகள், ஆனால் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு 18 படிகள் ஏறிவிட்டு வருவார். அவரின் வாலிப நாட்களில் செய்யாததை இப்போது உடலில் எல்லாம் ஒடுங்கி விட்ட நிலையில் செய்து கொண்டிருக்கிறார்.

தேவனை ஏற்று கொள்ள வாலிப வயதே ஏற்றது. அதுதான் முழு வாழ்க்கைக்கும் பாதுகாப்பு. ஆகவேதான் 'உன் வாலிப பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை' என்று சாலமோன் வாலிபர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனை கூறுகிறார். பிரசங்கி 12ம் அதிகாரத்தில் வாலிபத்தையும் வயோதிபத்தையும் அழகாய் ஒப்பிட்டு சாலமோன் ஞானி கூறுகிறார். வயோதிபத்தின் இயலாமையை இலை மறைக்காயாக அவர் கூறி இப்படிப்பட்ட இயலாமை வரும் முன் கர்த்தரை உறுதியாய் பற்றி கொள் என வாலிபர்களுக்கு அவர் கூறும் ஆலோசனையை தேவ கிருபையோடு காண்போமா?

பிரசங்கி 12:3-6 வரை உள்ள வசனங்களின் அர்த்தத்தை காணுவோம்.

மழைக்குப்பின் மேகங்கள் திரும்ப திரும்ப வராததற்கு முன்னும், -அதாவது வயோதிபத்தில் ஒரு வியாதி போனால் மற்றொன்று வரும். அப்படிப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்னும்,

.

வீட்டுக்காவலாளிகள் தள்ளாடிஅதாவது கால்கள் இரண்டும் தள்ளாடி போவதற்கு முன்னும், பெலசாலிகள் கூனிப்போய் - அதாவது உடலை நிமிர்ந்து நிற்கச்செய்யும் முதுகெலும்பு வளைந்து கூன் விழும் முன்னும்,

.

எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்துஅதாவது நாம் உண்ணும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்கிறது. முதுமையில் அநேக பற்கள் விழுந்து விடும். இப்படிப்பட்ட நாள் வரும்முன்னும்,

.

பலகணி வழியாய் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும் - அதாவது கண்கள் இருளடைந்து பார்வையற்று போகிற வயோதிக காலம் வருவதற்கு முன்னும்,

.

எந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெரு வாசலின் கதவுகள் அடைப்பட்டு - அதாவது காது கேட்பது குறைய தொடங்கு முன்னும்,

.

குருவியின் சத்தத்திற்கும் எழுந்திரிக்கவேண்டியதாகி, - அதாவது வயதானவர்கள் ஒரு சிறு சத்தத்திற்கும் தூக்கம் கலைந்து விடுவர். இப்படிப்பட்ட நிலை வருவதற்கு முன்னும்,

.

கீத வாத்திய கன்னிகைகளெல்லாம் அடங்கி போகாததற்கு முன்னும் - அதாவது தொண்டை வறண்டு, சப்தம் ஒடுங்கி ஒலி எழுப்பும் தொண்டையின் உள் உறுப்புகள் அடங்கி போவதற்கு முன்னும்,

.

மேட்டிற்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி - அதாவது வயதானவர்கள் உயரமான சாலையை பார்த்தாலே ஏறிச்செல்ல பயப்படுவார்கள். விழுந்து விடுவோமோ, விபத்து வந்து விடுமோ என்று பயங்கள் தோன்றும். இப்படிப்பட்ட நாட்களுக்கு முன்னும்,

.

வாதுமை மரம் பூ பூத்துஅதாவது வாதுமை மரம் வெள்ளை வெளேறென பூ பூப்பதைப்போல முடியெல்லாம் நரைப்பதற்கு முன்னும்,

.

வெட்டுக்கிளியும் பாரமாகி, பசி தீபனமும் அற்று போகாததற்கு முன்னும் - அதாவது வயது முதிரும்போது, ஒரு சிறு காரியமும் பாரமாகி விடும். அதோடு பசியும் மிகவும் குறைந்து விடும். அப்படி ஆவதற்கு முன்னும்,

.

வெள்ளிக்கயிறு கட்டுவிட்டுஅதாவது நரம்புகளெல்லாம் தளர்ந்து போய், பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கிஅதாவது பொற்கிண்ணியாகிய இருதயம் நசுங்கி சாவு வருவதற்கு முன்னும்,

.

இப்படி மண்ணாண நம் சரீரம் பூமிக்குள் புதைக்கப்பட்டு ஆவி மறுபடியும் தேவனிடம் போகும் முன்பே நம் வாலிப பிராயத்திலே தேவனை நாம் நினைத்து அவரை ஏற்று கொள்வோமாக.

வாலிப நாளில் உன் தேவனை தேடி ஓடி வா

பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, வாலிப நாட்களிலே சிருஷ்டிகராகிய உம்மை நினைக்கவும், ஏற்று கொள்ளவும் வாலிபர் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும். வாலிப நாட்களிலே உம்மை நேசிக்கிறவர்களாகவும், உம்மை முதன்மையாக வைத்து தங்கள் காரியங்களை செய்கிறவர்களாகவும் ஒவ்வொருவரையும் மாற்றும். தங்கள் தாலந்துகளை உமக்கென்று உபயோகப்படுத்தவும் கிருபை செய்யும். வயோதிப காலம் வரை காத்திராமல் வாலிபத்திலேயே உம்மை ஏற்றுகொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday, 28 March 2011

இந்தியா

இந்த நாளிலும், நம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுக்காக்களிலும் செயல்பட்டு வரும் அரசுத்துறை அலுவலர்களுக்காகள மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், உதவியாளர்களுக்காக ஜெபிப்போம்.


1. ஓவ்வொரு துறையை சேர்ந்தவர்களும் தங்கள் வேலைகளில் உண்மையாக இருக்க ஜெபிப்போம்.


2. இலஞ்சத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்பட்டு தங்கள் வேலைகளை செய்யாதபடி, நீதியோடும் நேர்மையோடும் தங்கள் வேலைகளை செய்யவும், தங்களிடத்தில் தேவைக்காக வந்து உதவி செய்ய கோரும் ஏழை எளியவர்களுக்கு தங்கள் உதவி கரத்தை நீட்டத்தக்கதாகவும் ஜெபிப்போம்.


3. வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தவும், நல திட்டங்களை ஏழை எளியவர்களும் பெற்று கொள்ளும்படியாக செயல்படுத்தவும் ஜெபிப்போம்.


4. தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளில் திறமையாக செய்யவும், பேருக்கு செய்கிறவர்களாக, மாசமானால் சம்பளம் வந்து விடும், ஆகவே நான் உழைத்தால் என்ன, உழைக்காவிட்டால் என்ன என்ற எண்ணத்தோடு இல்லாமல், உண்மையாக உழைக்கவும், தங்கள் வேலையிடங்களுக்கு பெருமை கொண்டு சேர்க்கிறவர்களாக மாறவும் ஜெபிப்போம்.

யார் பிரிக்க முடியும் நாதா

'பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:16).


கர்த்தர் மோசேயிடம் மீதியானியர் யாவரையும் பழிவாங்கும்படி கூறினபோது, இஸ்ரவேலர் மீதியானிய புருஷர் யாவரையும் சிறைபிடித்து கொன்று போட்டார்கள். ஆனால், ஸ்திரீகளையோ விட்டுவிட்டார்கள். 'அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே' (எண்ணாகமம் 31:14-16) என்று கூறினதாக வாசிக்கிறோம்.

பாலாக் என்னும் மோவாபிய ராஜா பிலேயாம் என்னும் தீர்க்கதரிசியினிடம், இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளியிலே வந்து பாளையமிறங்கியிருக்கிறார்கள். இவர்களை இப்படியே விட்டுவிட்டால் 'மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும்' (எண்ணாகமம் 22:4) என்று அவர்களை குறித்து பயந்து அவர்களை சபிக்கும்படி ஆளனுப்பினான். இரண்டு முறை அவர்கள் வந்து, பிலேயாம் அவர்களுடன் சென்று இஸ்ரவேலரை சபிக்க வாயை திறந்த போது, கர்த்தர் அவன் வாயில் வாக்கு அருளி, அவர்களை சபிக்காமல், ஆசீர்வதிக்கவே செய்தான். அவர்களை அவனால் சபிக்கவே முடியவில்லை.

ஆகையால் பிலேயாம், தந்திர உபாயம் செய்து, வேறு எந்தபடியும் அவர்களை அழிக்க வழியில்லை என்று கண்டு, மிகவும் தந்திரமாக, இஸ்ரவேலரை மோவாபிய ஸ்திரீகளுடன், வேசித்தனம் செய்யும்படி, அவர்களுடனே அவன் அந்த ஸ்திரீகளை கலந்து விட ஆலோசனை கொடுத்தான். அதன்படி, 'ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்' - (எண்ணாகமம் 25:1-3). அதுவரை கர்த்தரையே சார்ந்து வாழ்ந்த ஜனங்கள், அந்த மோவாபிய பெண்களுடன் சேர்ந்து, பாகாலை வழிபட ஆரம்பித்தார்கள். ஆகையால் கர்த்தருடைய கோபம் மூண்டு, ஜனங்களுக்குள் வாதை ஏற்பட்டு, அதனால் 24,000 பேர் ஒரே நாளில் மடிந்து போனார்கள். இந்த பிலேயாமின் துராலோசனையை குறித்து, இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரங்களில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 'ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு' - (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).

நாமும் கூட பாவத்திற்கு விரோதமாக போராடுகையில், சில காரியங்களில நாமும் மெத்தனமாக இருந்திருக்கிறோமில்லையா? சே, இந்த நட்பு நம்மை ஒன்றும் பாதிக்காது, இது நம்மை கர்த்தரிடமிருந்து பிரிக்காது என்று நினைத்து விட்டிருக்கிறோமில்லையா? பாவத்திற்கு விரோதமாக நாம் எது நம்மை பாதிக்காது என்று நினைத்திருக்கிறோமோ அதுவே நம்மை கர்த்தரிடமிருந்து பிரித்து விடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இஸ்ரவேலர் மோவாபிய ஸ்திரீகள் தங்களிடம் வந்து அவர்களை வசீகரித்த போது, அவர்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை, ஆனால் அது அவர்களை பாவம் செய்ய வைத்தது மட்டுமல்ல, அவர்களை வேறு கடவுள்களை வணங்கவும் வைத்தது. தேவன் அருவருக்கிற காரியங்களை செய்ய வைத்தது. இத்தகைய காரியங்களுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மற்ற மதத்தினரோடு நாம் நட்பு கொண்டிருப்பது தவறல்ல, ஆனால் அந்த நட்பு நம்மை அவர்களோடு சேர்ந்து, பாவம் செய்ய வைக்கவோ, அல்லது, தேவன் விரும்பாத மற்ற காரியங்களில் நம்மை ஈடுபடுத்துமானால், அப்படிப்பட்ட நட்புகளுக்கு நாம் விலகியிருப்பது மிகவும் முக்கியம்.

தேவனால் தெரிந்து கொண்ட மக்கள் மேல், பிலேயாம் சாபத்தை கூற முயன்ற போது, அவனால் முடியவில்லை, ஏனெனில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்பதை அவன் கண்டு கொணடான். ஆகவே கர்த்தருடைய பிள்ளைகளை யாரும் சபிக்க முடியாது. அவர்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம். ஆனால் நம்மை பாவ காரியங்களில் ஈடுபட வைப்பதன் மூலம் சாத்தான் கர்த்தருடைய கோபத்திற்கும், வாதைக்கும் நம்மை இலக்காக்கிவிட முடியும். ஆகவே கர்த்தரை விட்டு பிரிய வைக்கும் எந்த காரியத்தையும் நாம் நம் வாழ்வில் அனுமதிக்கவே கூடாது. 'அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது' (2 கொரிந்தியர் 6:14-15). ஆமென் அல்லேலூயா!

நிகழ்வனவோ வருவனவோ

வாழ்வோ சாவோ பிரித்திடுமோ

அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்

அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

யார் பிரிக்க முடியும் நாதா

உந்தன் அன்பிலிருந்து தேவா



ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவையற்ற, எங்களை பாவத்திற்குட்படுத்துகிற நட்போ அல்லது வேறு எந்த காரியமோ எங்களுக்குள் காணப்பட்டால், அதை நாங்கள் உடனே விட்டுவிட கிருபை செய்யும். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எந்த காரியமும் எந்த நபரும் எங்களை பிரித்து விடாதபடி, நாங்கள் உம்மையே பற்றி கொள்ள கிருபை தாரும். அந்நிய நுகமும், அந்நிய காரியங்களும் எங்கள் வாழ்க்கையில் காணப்படாதபடி எங்களை கழுவி சுத்திகரித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday, 27 March 2011

தமிழ்நாட்டின் தேர்தல்

ஒவ்வொருவரும் கூட்டணி சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்து, தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் தேவனுக்கு சித்தமானவர்கள் ஆட்சிககு வரும்படி ஜெபிப்போம்.

நம்முடைய ஜெபம் மிகவும் முக்கியமானது. நம் ஜெபமே நம் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தேர்தல் வாக்குறுதிகளோ, தேர்தல் பிரச்சாரமோ அல்ல, நம்முடைய ஜெபமே யார் பதவியில் அமரப்போகிறார்கள் என்பதை நிச்சயிக்கும். தேர்தலுக்காக எல்லா சபையினரும் ஜெபிக்க ஆரம்பித்த விட்ட நிலையில் நாமும் தொடர்நது ஒவ்வொரு நாளும் நம்முடைய தமிழகத்தின் தேர்தலுக்காக ஜெபிப்பது மிகவும் முக்கியம்.


1. சுவிசேஷத்திற்கு தடை செய்யாத, மதமாற்ற சட்டம் கொண்டு வராத ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்படியாக ஜெபிப்போம்.


2. இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்தும் ஆண்டவர், தமக்கு சித்தமானவரை நம் முதலமைச்சராக தெரிந்தெடுக்க ஜெபிப்போம்.


3. எந்த இடத்திலும் தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டுகளோ, குண்டர்களின் பயமோ, மிரட்டுதலோ இல்லாதபடி மக்கள் சுயாதீனமாக ஓட்டு போட ஜெபிப்போம்.


4. போடப்பட்ட ஓட்டுகள் ஒழுங்காக எண்ணப்படவும், எந்த தில்லுமுல்லுவும் இல்லாதபடி எண்ணப்படதக்கதாக ஜெபிப்போம்.


5. மக்கள் எந்தவித தடையுமில்லாமல், தங்களுக்கு பிடித்தவர்களையும், ஆட்சியை ஒழுங்காய் செய்து, மக்களுக்கு நன்மை கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போடவும் ஜெபிப்போம்.

கல்வாரி அன்பு

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். - (கலாத்தியர் 2:20).


நாம் அனைவரும் கிறிஸ்து நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், நமக்கு இரட்சிப்பை இலவசமாக தம்முடைய இரத்தத்தை சிந்தி சம்பாதித்து கொடுத்திருக்கிறார் என்றும் விசவாசிக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருந்தால், அவருடைய அன்பும் நமக்குள் இருக்க வேண்டும். கீழே காணப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையும் நாம் வாசித்து, நமக்குள் அந்த காரியங்கள் காணப்படுகிறதா என்று நம்மையே ஆராய்ந்து பார்ப்போமா?

அன்பற்ற வார்த்தையை பேசிவிட்டு, அன்பற்ற சிந்தை கொண்டுவிட்டு, அதைக்குறித்து சிறிதுகூட எனக்கு மனத்துயரம் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறருக்கு ஊறு விளைவிக்கும் ஜோக்குகளில் நான் இன்பம் கொண்டால், சாதாரண சம்பாஷணைகளில் பிறரை எளிதில் மட்டம் தட்டவோ அல்லது என் சிந்தையில் கூட பிறரை இளப்பமாய் எண்ணினாலோ நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

சிலருடைய நட்பை இழந்து விடக்கூடாது என்பதற்காவோ அல்லது அன்புள்ளவன் என்ற என் நற்பெயரை இழந்து விடகூடாது என்பதற்காகவோ நான் உண்மையை மனதார பேசுவதற்கு நான் அஞ்சுவேன் என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கு நானே இங்கிதமாய் நடந்து கொண்டு, சுய அனுதாபம் என்னும் கொடிய துர்க்குணத்தில் சவுகரியமாய் வீழ்ந்து கொண்டு என்னை குறித்தே எப்போதும் கவலையில் முழ்கியிருந்தால் எல்லாவற்றையும் தேவ கிருபையின் உதவியோடு தைரியமாய் தாங்கி சகித்து கொள்ள முடியவில்லை என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

மனபூர்வமான மகிழ்ச்சியோடு இரண்டாவது ஸ்தானத்தை என்னால் எடுக்க முடியவில்லை என்றாலோ, அல்லது ஒருவேளை முதலாவது ஸ்தானத்திற்கு வரவேண்டியிருக்கும்போது, 'நான் தகுதியே இல்லாதவன்' என பாசாங்காய் சொல்வேனானால் நான் கல்லவரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

தித்திப்பான தண்ணீர் நிறைந்த ஒரு டம்ளரை எவ்வளவு மோசமாய் அசைத்தாலும் அதிலிருந்து சிந்தும் தண்ணீரில் ஒரு துளி கூட கசப்பாய் மாறுவதில்லை. அவ்வாறிருக்க என்னை திடீரென்று குலுங்க செய்யும் சந்தர்ப்பம் என்னை பொறுமையற்ற அன்பில்லாத வார்த்தைகளை பேச செய்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறென்.

என்னை யாரோ அநீதியாய் குற்றம் சாட்டி விடுகிறார்கள். அவ்வேளையில் என்னை நான் அறிந்திருக்கிறது போல அவர்கள் எனனை அறிந்திருந்தார்களானால் இப்போது சாற்றிய குற்றத்தை விட அதிகமாய் என்னை குற்றம் சாட்ட முடியும் என்ற உண்மையை மறந்து அவர்களிடம் கசப்பு கொள்வேன் என்றால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கென்று விசேஷித்த நண்பர்களை இணைத்து கொண்டு அதனிமித்தம் என்னோடுள்ள மற்றவர்கள், 'தாங்கள் விரும்பப்படாதவர்கள்' என எண்ணும் நிலையை நான் உருவாக்கியிருந்தால், இவ்வாறு என்னுடைய சிநேகம் பரந்த மனதுடையதாய் இராமல் எல்லாரையும் உண்மை ஐக்கியத்திற்குள் இணைத்து கட்டுவதாய் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறரால் முரட்டுதனமாக நடத்தப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல், விரும்பாத சூழ்நிலையில் வைக்கப்படுதல் போன்ற கடுமையான துன்புறுத்தலுக்கு நான் உள்ளாக வேண்டியது தேவனுடைய ஊழியத்திற்கு அல்லது தேவன் என்னை வனைய தேவையாய் இருக்கும்போது, நானோ அதை தவிர்க்க முயற்சித்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

உங்களிடம் கல்வாரி அன்பு உண்டா? - (சகோதரி ஏமிகார்மைக்கேல்)

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கண்கள் கலங்கிடுதே

கர்த்தா உம் பாடுகள் எப்போதும் நினைத்தால்

நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே

உம் ஜீவன் தந்தீரன்றோ

எங்களைத் தரைமட்டும் தாழ்த்துகின்றோம்

தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே

ஏற்று என்றும் நடத்தும்


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன் என்று கூறி கொள்ளும் எங்கள் இருதயங்களில் உண்மையான கல்வாரி அன்பு இருக்கிறதா என்று நாங்கள் எங்களையே ஆராய்ந்து பார்க்க கிருபை செய்யும். மேலே சொல்லப்பட்ட காரியங்களில் நாங்கள் எதிலே குறைவுபட்டிருந்தாலும் தயவாய் எங்களுக்கு மன்னித்து, உண்மையான கல்வாரி அன்பு எங்களுடைய இருதயத்தில் காணப்பட கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.