Search This Blog

Friday, 9 May 2014

விலையற்ற செல்வம

அப்போஸ்தலர் 8 :26-33  

“எத்தியோப்பியனாகிய ஒருவன் தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.” - அப்போஸ்தலர் 8 : 27, 28

அந்நியனாகிய எத்தியோப்பியன் ஒருவன் வேதம் வாசிக்கிறான். அதுவும் பயணத்திலிருக்கும்போது! இன்றும் கூடப் பரம்பரைக் கிறிஸ்தவர்களை விட, அந்நியராயிருந்து, இடையில் கிறிஸ்துவால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களே வேதாகமத்தை அதிகம் நேசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள்.

கறுப்பு இனத்தவராகிய எத்தியோப்பியர் நிர்விகாரமுடையவர்கள். ஆயினும் அவர்களிலும் கர்த்தரை நம்பினதினால் ஜீவன் தப்பினவர்களுமுண்டு. கர்த்தரை நம்புவதற்கு முன், முதலில் அவரைத் தேட வேண்டும். அப்படி ஒருவர் அவரைக் கருத்தாய்த் தேடினதினால், கடவுளின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம் ஒருநாள் அற்புதமாக அவருடைய கைக்குக் கிடைத்தது! அக்காலத்தில் குருக்களைத் தவிர வேறு எவருமே வேதப்புத்தகத்தைக் கண்டதில்லை. அவரது உள்ளம் மகிழ்ந்து துள்ளியது! வேதாகமத்தைச் சிரமப்பட்டு மொழிபெயர்த்து தன் மக்களுக்கெல்லாம் வாசிக்கும்படிக் கொடுத்தார். தானும் வேதாகமத்தை நாள்தோறும் பலமணிநேரம் ஆழ்ந்து படித்தபோது தான், அரிய போதனைகள் அதில் அடங்கியிருக்கக் கண்டார்.

மனிதனின் நற்கிரியைகளல்ல கடவுளின் கிருபை மட்டுமே மனிதனை எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கும். கடவுளின் திருமொழியாகிய பரிசுத்த வேதாகமம் மட்டுமே மனிதன் நடக்கவேண்டிய சரியான பாதையில் அவனை நடத்தும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் ஒருவன் வைக்கிற விசுவாசம் மட்டுமே கர்த்தருடைய சமூகத்தில் அவனை நீதிமானாக நிறுத்தும். இந்த மூன்று  இரகசியங்களை ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தினார். 

இந்த சத்தியத்தைத் தனது போதனையின் மையக்கருத்தாகக் கொண்டே அவரது இறையியல் கோட்பாடுகளும், செயல்பாடுகளும்  அமைந்திருந்தன. அவர்தான் ஜெபவீரன் (Knight of  Payer), விசுவாசவீரன் என (Knight of faith) அழைக்கப்படும் பல்கலை முனைவராகிய மார்ட்டீன் லூதர். இன்று மார்ட்டீன் லூதர் இயற்றிய சிறிய ஞானோபதேசம் (சிறிய கத்தேகிஸ்மு) என்னும் அரிய நூல் தமிழ் மொழியில் முதன்முதல் அச்சேறிய நாளாகும்.

தந்தையாம் கடவுளின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம் வழியாக மைந்தனாகிய கிறிஸ்துவின் கிருபையைப் பெற்றுக்கொள்ள தூயாவியானவரின் அருட்கொடையாகிய விசுவாசம் என்னும் துடுப்பைப் பற்றிக்கொண்டு வாழ்க்கைக் கடலில் தொடர்ந்து பயணிப்போம்.

பரம தந்தையே, வேதவசனம் காட்டும் வெளிச்சத்திலே, என் மீட்பராகிய இயேசு கிறிஸ்து என்மீது வைத்துள்ள கிருபையின் இரகசியங்களைப் பரிசுத்த ஆவியானவர் வழங்கும் விசுவாசத்தினால் புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமேன்.

Wednesday, 7 May 2014

சுயநல ஜெபமா? பொதுநல ஜெபமா?


“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்”மத்தேயு 6:8

முதிர்ந்த போதகர் ஒருவரை ஒரு மனிதன் சந்திக்க சென்றார். ஜெபத்திலே வல்லவரான அந்த முதிர்ந்த போதகர் அந்த மனிதனை அன்போடு உபசரித்தார். அந்த மனிதன் அனுதினமும் ஜெபிக்கும் பழக்கம் உடையவராக இருந்தாலும், தனது அநேக ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் அந்த அம்மனிதனுக்குள் இருந்தது. இதைக் குறித்து அந்த முதிய போதகரிடம் கேட்க்க தொடங்கினார். எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? எவ்வளவு நேரம் ஜெபம் செய்ய வேண்டும்? தேவனை பிரியப்படுதும் வகையில் எந்த வசனங்களைச் சொல்லி ஜெபிக்க செய்ய வேண்டும்? போன்றதான பல கேள்விகளை கேட்டார். முதிய போதகர் அம்மனிதன் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் பொறுமையோடு பதிலளித்தார். பின்னர் அந்த மனிதனைப் பார்த்து, தன்னிடம் அநேக மனிதர்கள் ஜெபங்களை குறித்தான அவர்களுடைய கேள்விகளை கேட்கின்றனர். ஆனால் ஒரே ஒரு முக்கியமான கேள்வியை மட்டும் கேட்பதில்லை என்றார். தான் எல்லா கேள்விகளையும் கேட்டு விட்டதாக நினைத்துக்கொண்டிருத்த அந்த மனிதன் சற்று திகைப்படைந்தவராய் “அது என்ன கேள்வி?” என்று கேட்டார். அந்த முதிய போதகர் சிரித்த முகத்துடன், “யாருக்காய் ஜெபிக்க வேண்டும்?” என்ற கேள்வியே என்றார். அப்பொழுது அந்த மனிதர் தன் இருதயத்தில் குத்தப்பட்டவராய் தன்னுடைய சுயநல ஜெபத்திற்க்காக மனஸ்தாபப்பட்டார். மேலும் அன்றிலிருந்து பிறருக்காய் ஜெபிக்கவும் தன்னை அர்பணித்தார்.

மத்.7:7,8 ஆகிய வசனங்களில் இயேசு சொல்கின்றார்,“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என்று போதித்தார். இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வேண்டிய பல காரியங்களை தேவனிடம் கேட்கின்றோம். உபவாசித்து ஜெபிகின்றோம். இயேசு இதைச் சொல்லும் முன்னரே, “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” என்று மத்தேயு 6:8 – ல் கூறியுள்ளார். ஆகவே நம்முடைய சுயதேவைகளுக்காக “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்லவில்லை எனபது தெளிவாக தெரிகின்றது. அப்படியென்றால் நாம் எதைக் கேட்க்க வேண்டும்?

அழிகின்ற ஆத்துமாக்களை கர்த்தரிடம் கேட்க வேண்டும். இந்தியாவில் 100 நபர்களுக்கு இரண்டு கிறிஸ்துவர்கள் தான் உள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதறக்கும் அதிகமாக இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் இருக்கும் ஏழு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். நாங்கள் ஜெப நடை சென்ற கொல்லிமலை கிராமங்களில் இயேசு என்றால் யார் என்றே தெரியாத மக்களை சந்தித்தது உண்டு. இப்படிப்பட்ட மக்களுக்காய் நாம் பாரத்தோடு ஜெபித்து இந்த மக்களுக்கு இரட்சிப்பை நாம் தேவனிடம் கேட்க்க வேண்டும். “என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்“ (ரோமர் 1:15) பவுல் ரோமாபுரியாருக்கு எழுதுகிறார். இன்றைக்கு நம்மில் எத்தனை பேர் இயன்ற மட்டும் சுவிஷேசம் சொல்ல விரும்புகின்றோம். இயன்ற மட்டும் அழிகின்ற ஆத்துமாகளுக்காய் ஜெபிகின்றோம். இயேசு சொல்லியிருகின்றார், “நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே நமது தேவையை தேவன் அறிந்துள்ளார்” என்று. நம்முடைய தேவைகளுக்காய் மட்டும் ஜெபிப்பது சுயநல ஜெபம். பிறருடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்பது பொதுநல ஜெபம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது, அழிகின்ற ஆத்துமாக்களின் மேல் கரிசனை உள்ளவராக, அவர்களுக்காய் ஜெபிகின்றவராக, அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து வாழ்ந்தார். அவருடைய சீடர்களும் அவ்வாறே வாழ்ந்தனர். இதை வாசிக்கின்ற நீங்களும் அவ்வாறு பொதுநல ஜெபம் செய்து அநேக மக்களை கிறிஸ்துவுக்கு நேராய் நடந்த வேண்டுமென இயேசு விரும்புகின்றார். ஆகவே “அழிகின்ற ஆத்துமாக்களை கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; சுவிஷேசம் அறிவிக்கப்படாத மக்களைத் தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். கிறிஸ்துவின் அன்பை கண்டிராத வீடுகளின் கதவைத் தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்”. நம்முடைய தேவைகளை அறிந்த தேவன், அதிசயமாய் நம்மை நடத்தி செல்வார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

Tuesday, 6 May 2014

பெலன் ஒன்றும் இல்லை தேவா


பல்லவி

பெலன் ஒன்றும் இல்லை தேவா
ஆவியால் பலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
சத்துவம் தந்தருளும்
சரணங்கள்

1. சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்
சோதனை ஜெயிக்க பெலன் தாரும்
மாய உலகினை வெறுக்க
என்னையும் பெலப்படுத்தும் --- பெலன்

2. மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் திடப்படுத்தும் --- பெலன்

பூரண அழகுள்ளவரே


பல்லவி

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
அனுபல்லவி

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
சரணங்கள்

1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே --- போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே --- போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் --- போற்றுவேன்

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே


புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2)
இந்தியாவை தாருமே

1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும்

2. கோடி கோடி மக்களுண்டு - (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்

பிதாவே ஆராதிக்கின்றோம்


பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

பிரியமானவனே


பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பலிபீடத்தில் வைத்தேன் என்னை


பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - (2)

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
நித்தம் வழிநடத்தும் - (2)

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - (2)
வாருமய்யா வந்து என்னை - (2)
வல்லமையால் நிரப்பும் - (2)

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - (2)
பரிசுத்தமாக்கி விடும் - (2)

பரலோகமே உம்மைத் துதிப்பதால்


பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம்

2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம்

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்

தொடும் என் கண்களையே


1. தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக்
கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப்
பாட வேண்டுமே

தொடும் என் ஆன்மாவை
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம்
போக்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

3. தொடும் என் மனதினையே
மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள்
ஆற வேண்டுமே

தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள்
தீர வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)

1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்

தேவனுக்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா

தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே


பல்லவி

தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே
சரணங்கள்

1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று

நான் உம்மை மறந்தாலும்


பல்லவி

நான் உம்மை மறந்தாலும் - நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர்
எனக்கு போதுமே
சரணங்கள்

1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான்

2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான்

3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்

தேவ பிரசன்னமே


தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2)

தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) --- தேவ பிரசன்னமே

1. தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) --- தேவனின்

2. தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) --- தேவனின்

3. வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2) --- தேவனின்

தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே

4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே

தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே

4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன் ...
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் ...
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் ...
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே

இயேசு நாமமே, இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே (2)

1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே


சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் --- ஆஹா ஹா

2. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் --- ஆஹா ஹா

3. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே --- ஆஹா ஹா

கிருபையால் நிலை நிற்கின்றோம்


கிருபையால், நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால், நிலை நிற்கின்றோம்
கிருபை - (7) --- கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை
பெரியவனாக்கியதும், உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை
காயங்களை கட்டியதும், உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்

4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை
வரங்களை கொடுத்தது, உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்

5. கிருபையை, கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை, கொண்டாடுகிறோம்
கிருபை - (7) --- கிருபையால்

Monday, 5 May 2014

கடும் புயலிலே என்னைக் காத்தவரே

1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் --- என் அன்பு

3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் --- என் அன்பு

4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் --- என் அன்பு

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

கர்த்தர் தாமே நம் முன்னே போவார்


கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)

நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)

1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை -

நீதி கொன்ற நீதிபதி


லூக்கா 23 : 20-25        
                                                                                      
“இயேசுவையோ, அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக் கொடுத்தான்!” - லூக்கா 23 : 25

குற்றத்தின் தன்மையை விசாரித்தறிய, நீதிபதிகள் சில சமயம் கைதியைக் காவலர்கள் வசம் ஒப்படைப்பர். அப்போது, காவல் துறை உண்மையை வரவழைக்கக் கைதியை விசாரிக்கும்போது, கொடுமை தாங்காமல் கைதி இறந்து விடுவதும் உண்டு. இயேசுவைப் பிலாத்துவிடம் பிரதான ஆசாரியனும் யூத மக்களும் ஒப்புக் கொடுத்தபோது, அவருக்கும் கொடுமைகள் நடந்தன.

இயேசுவின் வல்லமையான செயல்கள் பற்றிக் கேள்வியுற்ற பிலாத்து, அவரை நேரில் காணவிரும்பியிருப்பார். தேசாதிபதியானதால் வாய்ப்புக் கிடைத்திருக்காது. இப்போதோ, அவர் தன் முன்னாலேயே நிற்கிறார். தன் கேள்விகளுக்கு அவரளித்த விடைகளால் கவரப்பட்ட பிலாத்து, எப்படியேனும் அவரை விடுதலை செய்ய விரும்பினார். ஆனால், தன்னை `ராஜா’ என்று சொன்ன இயேசுவை நீர் விடுதலை செய்தால், நீரும் இராயனுக்கு விரோதிதான் என்ற யூதருக்குப் பயந்து தான் பிலாத்து இயேசுவுக்குக் கொலைத்தீர்ப்பளித்தான். நீதிபதியின் வாயாலேயே நிரபராதி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த நீதிபதியே மரண தண்டனை விதித்த கொடுமையை உலகத்திலேயே பிலாத்து ஒருவன்தான் செய்தான். காரணம் பிலாத்துவிடமிருந்த பதவி மோகம். இதனால் இயேசுவுக்கு அநீதியான தீர்ப்பு வழங்கி, யூதருடைய இஷ்டத்துக்கு அவரை ஒப்புக் கொடுக்கும்படிச் செய்தது. பிலாத்து ஒரு தேசாதிபதியாகவும், நீதிபதியாகவும் இருந்தும், தன் பதவியைக் காத்துக் கொள்ளுவதற்காக, அநீதியான தீர்ப்பை இயேசுவுக்கு வழங்கினான்.

விளைவு என்ன தெரியுமா? பிலாத்து தன் சொந்த நாட்டாராலேயே விரட்டப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவனது பிணம் மலைமேலிருந்த ஒரு குளத்தில்வீசியெறியப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. நாம் சுய நலத்துக்காகவும், நமது தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவும் அநீதியான வழிகளில் சென்று நாட்டையும் திருச்சபையையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நிர்மூலமாகாதபடிக்கு, நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நமது அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவட்டும். நம்மை அவரிடம் ஒப்புக் கொடுப்போம்.

என்னை மீட்ட இயேசுவே, `என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். ஆமேன்.

Sunday, 4 May 2014

ஜெபிக்க மறவாதிருப்போம்

கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர்கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். - (2 தெசலோனிக்கேயர் 3:1-2). 

கனடாவிலிருந்த ஒரு சபையிலிருந்து நைஜீரியாவிற்கு ஒரு தம்பதியினர் மிஷனெரிகளாக அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் சீக்கிரமாய் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டு, ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களது ஊழியத்தின் மூலமாய் அநேகர் கர்த்தரை அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். . சில வருடங்கள் கழித்து, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது. பின் அதன் தாயும் வியாதிப்பட்டு, மரித்துப் போனார்கள். அந்த ஊழியர் மிகவும் மனம் உடைந்தவராக யாருக்கும் சொல்லாமல், மீண்டும் கனடாவிற்கு வந்தார். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் சபைக்கு சென்றார். சபை வழக்கம் போல நடந்தது. முடியும் தருவாயில் சபை போதகர், 'நாம் முடிக்க போகிறோம், ஏதாவது உண்டா சொல்வதற்கு' என்று கேட்டார். சபை அமைதியாக இருந்தது. அவர் ஆசீர்வாதத்தை கூறுமுன், பின்னால் இருந்து ஒருவர் விசும்பும் சத்தம் கேட்டது. தொடந்து, அந்த மிஷனெரி கதறி அழ ஆரம்பித்தார். 

யாருக்கும் அவர்தான் தாங்கள் அனுப்பின மிஷனெரி என்று தெரியாது. அவர் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தபடியால். பக்கத்தில் ஒரு சகோதரர் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொல்வதற்கு நிமிர்ந்தபோதுதான் அவர் தாங்கள் அனுப்பி வைத்த மிஷனெரி என்று எல்லாருக்கும் தெரிய வந்தது. 

மிஷனெரி அழுது முடித்தப்பின், முகத்தை துடைத்து, எழுந்து நின்று, சபையாரை பார்த்து, 'நான் உங்களை சில வருடங்களுக்கு முன் பார்த்தபோது, நீங்கள் எல்லாரும் என்னையும் என் மனைவியையும் அன்போடு மிஷனெரிகளாக அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் அனைவரும் ரயில் நிலையம் வரை வந்து உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் சொன்னமாதிரி இரண்டு மூன்று வருடங்கள் ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தர் அந்த ஆண்டுகளில் அநேக ஆத்துமாக்களை கொடுத்தார். பின் நீங்கள் ஜெபிக்காமற் போனபோது, நான் அநேக இழப்புகளை சந்திக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் நினைத்தேன், என்னுடைய தவறுகளோ, பாவமோ ஏன் இப்படி தொடர்ந்து இழப்புகள் என்று, இன்றுதான் தெரிந்தது, நீங்கள் எங்களுக்காக ஜெபிக்கவில்லை என்று. நான் வந்த நேரத்தில் இருந்து பார்க்கிறேன், எங்களுக்காக ஒருவர் கூட ஜெபிக்கவில்லை என்பதை காண்கிறேன்' என்று கூறினார். சபையார் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். 

பிரியமானவர்களே, நாம் அனுப்பும் ஊழியர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோமா? நம் ஜெபங்கள்தான் அவர்களை எல்லாவிதத்திலும் தாங்குகின்றன. நாம் ஜெபிக்காவிட்டால், கர்த்தரால் அங்கு செயல்பட முடியாது. நம்முடைய ஜெபங்கள் அத்தனை இன்றியமையாதது. 

நம்மால் அங்கு சென்று ஊழியம் செய்ய முடியாது. ஆனால் ஜெபிக்க முடியுமல்லவா? தினமும் நம்முடைய ஜெபங்களில் இப்படிப்பட்ட ஊழியர்களை நினைக்க வேண்டும். நான் ஜெபித்தால் என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, நாம் ஜெபிக்காமல் விட்டால், களத்தில் இருக்கும் அவர்களுக்கு யார் துணை செய்ய முடியும்? யார் உதவ முடியும்?' 

அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்' (அப்போஸ்தலர் 12:5). சபையார் ஊக்கமாக ஜெபித்தபடியால், தேவன் தூதனை அனுப்பி பேதுருவை விடுதலை செய்தார். 

அதுப்போல சபையாக, குழுக்களாக, தனியாக நாம் ஜெபிக்கும் ஜெபங்கள் மிஷனெரிகளை தாங்கும், ஆபத்திலிருந்து தப்புவிக்கும், பொல்லாதவர்களின் கரங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும், பாவத்திலிருந்து அவர்களை காத்துக் கொள்ளும். அதிசயங்களை செய்ய வைக்கும். வியாதியில் விழுந்து விடாதபடி அவர்களை பாதுகாக்கும். 

நம் ஜெபம் என்னும் கவசத்தினால், ஊழியர்களை தாங்குவோமா? கர்த்தர் கேட்டு, அவர்களுடைய தேவைகளை சந்திப்பார். காத்துக் கொள்வார். நாம் ஜெபிக்காவிட்டால், கனடாவில் அனுப்பப்பட்ட மிஷனெரி போல எனக்காக, எங்களுக்காக ஜெபிக்க மறந்தீர்களே என்று நம்மிடம் சொல்லும்போது, நாம் பதில் என்ன சொல்ல முடியும்? ஜெபிப்போம், ஜெயம் எடுப்போம். ஆமென் அல்லேலூயா! 

திறப்பினில் நிற்போர் தைரியமாய் 
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் 
எழுப்புதல் தனல்கள் தணியாமலே 
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் 

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே 
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே 
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி 
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் 

ஜெபம் 
 எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மிஷனெரிகளாய், ஊழியர்களாய் நாங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கர்த்தரை அறிவிக்கிற பாத்திரங்களாக செல்லும் ஒவ்வொருவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களை ஜெபத்தில் தாங்குவது எங்களது கடமை என்பதை உணர்ந்து, அவர்களுக்காக உண்மையாக ஜெபிக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் ஜெபிக்க மறந்தால் அவர்கள் அநேக இழப்புகளை சந்திக்க நேரிடுமே, அவர்களது பாதுகாப்பிற்காகவும், அவர்களது தேவைகளுக்காகவும், சுகபெலன் ஜீவனுக்காகவும் தொடர்ந்து நாங்கள் ஜெபித்து அவர்களை தாங்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

மறுரூபமான வாழ்வு

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2 கொரிந்தியர் 3:18). 

அழகிய வர்ணங்களில் பறந்த திரியும் வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போது, அதன் அழகில் நாம் மயங்குவது இயற்கை. அந்த அழகிய வண்ணத்துப்பூச்சி கிறிஸ்தவர்களை பிரதிபலிக்கிறது என்றால் ஆச்சரியம்தான்! 

வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்துவிடுகிறது. நாமும் நம் பாவத்தை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்ளும் அன்பின் தெய்வம் இயேசுவை விரும்பி ஏற்றுக் கொண்டு, அவரோடு ஜெபத்தின் மூலம் நெருங்கி ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும். 

அடுத்து முட்டைகளை பொரிப்பதற்கு காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் அனுபவித்த வார்த்தையாக இருக்க வேண்டும். ஆம், நம் வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைப்பது போன்று நடந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் கர்த்தரின் வேளைக்காக காத்திருக்க வேண்டும். 

பின் குறித்த காலத்தில் முட்டை பொரிந்து புழு வெளிவரும். அதன் முக்கிய வேலை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். உணவாக சாப்பிடும் இலையைத் தேடிக் கொண்டே இருக்கும். நாமும் அன்றாடம் நம்முடைய ஆவிக்குரிய உணவை வேதத்தில், ஆவிக்குரிய புத்தகங்களில், ஐக்கியங்களில் தேடி அதில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

அப்படி வளர்ந்து வருகிற வேளையில்தான், முக்கியமான மாற்றம் உண்டாகிறது. முன்னிருந்த உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடி அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகிறது. 

கர்த்தரோடு ஜெபத்தில் இணைந்திருந்த நாம், வேதத்தின் வசனத்தை உணவாக உண்ட நாம், வளர்ந்த விசுவாசியாக, இப்போது, கர்த்தருக்காக உழைப்பவர்களாக மாறிவிடுகிறோம். அவருடைய சாயலை பிரதிபலிக்கிறவர்களாக, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். எத்தனை ஆச்சரியம்! 

இப்படிப்பட்ட வாழ்க்கைக்கே ஒவ்வொருவரையும் கர்த்தர் அழைக்கிறார். நான் புழுவாகத்தான் இருப்பேன் என்று அந்த நிலையிலேயே இருப்பதினால் எந்த பிரயோஜனமும் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடித்து பறக்க வேண்டும். கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக நம் வாழ்க்கை மாற வேண்டும். அதனால் கர்த்தர் மகிமைப்படுவார். அவருடைய வருகையில் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் அவருடனே நாமும் பறப்போம். ஆமென் அல்லேலூயா! 

மறுரூபமாக்கிடும் 
மகிமையின் மேகமே 
முகங்கள் மாறணுமே 
ஒளிமயமாகணுமே 

மேகமே மகிமையின் மேகமே 
இந்த நாளிலே இறங்கி வாருமே 
மேகமே மகிமையின் மேகமே 
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்முடைய சாயலாக மாற தேவ ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்வாராக. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்படி ஒவ்வொரு நிலையிலிருந்து முன்னேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறதோ அதைப்போல நாங்களும் எங்கள் ஆதி நிலையிலிருந்து மறுரூபமாக்கப்பட்டு, மகிமையான சரீரத்தில் கிறிஸ்துவின் வருகையில் காணப்பட எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

தேவனின் தெரிந்தெடுப்பு

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - (சங்கீதம் 118:22-23). 

முற்காலத்தில் கல்வி கற்றோரின் சதவிகிதம் ஏறக்குறைய வளர்ந்த நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் பின்தங்கியிருந்தது. இருப்பினும் தங்கள் குழந்தைகளை எப்படியாகிலும் கல்வி கற்க வைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர். இதறகாக அவர்கள் அதிக பிரயாசமெடுத்தனர். இந்த சூழ்நிலையில் ஒரு விவசாயி இங்கிலாந்தின் நாட்டுப்புறத்தில் தனது மகனை தொடக்கப்பள்ளி ஒன்றில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படிக்க வைத்தார். அப்பையன் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்ததும் உயர்நிலை பள்ளிக்கு செல்ல நகருக்கு செல்ல வேண்டியதாருந்தது. அது ஐந்து மைல்களுக்கும் அதிகமாக இருந்ததால் அந்த தகப்பன் தன் மகனை தோளின் மீது சுமந்தே சென்றார். 

பள்ளிக்கு சென்றதும் தலைமையாசிரியர் அவனுக்கு ஒரு நுழைவுத்தேர்வு வைத்தார். அதில் அவன் தேர்ச்சியடையாததால் அவனை தன் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாதென்று புறக்கணித்தார். ஆனால் தகப்பன், தலைமையாசிரியரை நோக்கி, அவனை இதுவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததையும், அன்று அவனை தூக்கி சுமந்தே கொண்டு வந்ததையும அவரிடம் கூறி அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சி மன்றாடினார். அவர் மீது இரக்கம் கொண்டு தலைமையாசிரியர் அந்த பையனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து ஆஸ்திரேலிய நாட்டின் வரைப்படத்தை வரைய சொன்னார். அச்சிறுவன் எவ்வித அடித்தலுமின்றி அப்படியே வரைந்து கொடுத்தான். அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பள்ளியில் இடம் கொடுத்தார். தகப்பனார் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். 

அந்த சிறுவன் யார் தெரியுமா? அவர்தான் இங்கிலாந்து ஜனாதிபதியான லார்ட் வின்சென்ட் சர்ச்சில் ஆவார். சர்ச்சில் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார். வல்லரசு நாட்டிற்கு தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவரின் பின்னணி இப்படியாக இருந்தது. 

ஆம் நம் தேவனின் தெரிந்தெடுப்பை மனித மூளையால் கணிக்க முடியாது. அவர் ஞானிகளை வெட்க்கப்படுத்தும்படி பைத்தியங்களை தெரிந்து கொள்பவர். பலவான்களை வெட்கப்படுத்தும்படி பலவீனரை தெரிந்து கொள்பவர். உள்ளவைகளை அவமாக்கும்படி இல்லாதவைகளையும் அற்பமானவைகளையும் தெரிந்து கொள்பவர். ஆம், ஆடுகளின் பின்னால் அலைந்த தாவீதை இராஜாவாய் அபிஷேகம் பண்ணினவர். தாய் தகப்பனற்று எதிர்கால நம்பிக்கையற்றிருந்த எஸ்தரை இராஜாத்தியாய் உயர்த்தினவர் நம் தேவன். 

இவன் எல்லாம் தெரிந்தவன், என்ற தகுதியால் தேவன் ஒருவரையும் தெரிந்தெடுப்பதில்லை. அவரது தெரிந்தெடுப்பு வித்தியாசமானது, விசேஷமானது! 

பிரியமானவர்களே, ஐயோ நான் ஒன்றுக்கும் தகுதியில்லையே, வீட்டில் யாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரன் இல்லையே என்று நினைக்கிறோமா? பூமியின் கடையாந்திரத்தில் ஒரு புழுவைப் போல எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த என்னை தேவன் தெரிந்துக் கொள்ள முடியுமானால், உங்களையும் தெரிந்துக் கொள்வது நிச்சயமல்லவா? 

தேவனின் தெரிந்தெடுப்பு இல்லாதவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், யாருடைய கவனமும் ஈர்க்காத, ஈர்க்கமுடியாதவர்களையும் சந்திக்கிறது. அவர்களை தகுதிப்படுத்தி கர்த்தர் தமக்கென்று உபயோகப்படுத்துகிறார். எத்தனையோப் பேர் சொல்ல முடியும், நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்திருந்தேன், தேவன் என்னை தெரிந்தெடுத்து பயன்படுத்துகிறார் என்று. 

'ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்' (2தீமோத்தேயு 2:21) என்ற வசனத்தின்படி கர்த்தரால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட எவரும், எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக முடியும். ஆகாது என்று மற்றவர்களால் தள்ளப்பட்டவர்களே அவருக்கு உபயோகமான பாத்திரமாக மாற்றப்பட்டு, அவருக்காக எழும்பி பிரகாசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரமாக தேவன் நம்மையும் எடுத்து உபயோகிப்பாராக. ஆமென் அல்லேலூயா! 

ஆடுகள் பின் அலைந்த அந்த 
தாவீதை அழைத்தது நான் 
தாவீதின் வேரில் கிளையாய் உதித்தவர் 
தலையை நான் உயர்த்தவில்லையா . 

என் சமுகம் உன் முன் செல்லும் 
ஒன்றுக்கும் கலங்காதே 
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன் 
அழைத்தவர் நான் தானே 

ஜெபம் 
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எல்லாராலும் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட பாத்திரங்களை தேவன் தமக்காக தெரிந்துக் கொள்வதற்காக ஸ்தோத்திரம். எங்களை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு, தேவன் அழைத்த அழைப்பின் உறுதியாய் நிற்க தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதுப்போல நாங்களும் உண்மையுள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.